எதிரிப்படைகள் கோட்டையைத் தகர்த்து விட்டு உள்ளே நுழைந்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் வர அதைக் கேட்ட கோட்டைத் தளபதி மிகவும் ஆவேசம் அடைந்தார். அப்பபொழுது அவரது மனைவி மிகவும் பயங்கரமான செய்தி ஒன்று எனக்கு கிடைத்துள்ளது. அச்செய்தி எதிரிப் படைகள் உள்ளே வருகிற செய்தியைவிட மிகப் பயங்கரமான செய்தி என்றாள். என்ன? என்றார் தளபதி.
நீங்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதை உங்கள் முகம் காட்டும் செய்திதான் அது என்றாள். ஆபத்தான நேரத்தில் தைரியத்தை இழப்பதை விடப் பயங்கரமானது எதாவது உள்ளதா? பயத்தால் வீரம் போன பிறகு விவேகம் எவ்வாறு வேலை செய்யும்? நெருக்கடி யான நேரத்தில் மனம் தளர்ந்தால் உன் பலம்குன்றிவிடும் என்று பைபிள் கூறுகிறது. கோபம் கொண்டு அரிவாளை எடுத்து ஒருவரைக்கொலை செய்வதையே வீரமாகப் பலரும் கருதுகிறார்கள். மாள வைப்பது வீரமல்ல வாழ வைப்பது தான் வீரம் என்பது மன உறுதியில் இருக்க வேண்டுமே தவிர உடல் உறுதியில் அல்ல.
உடல்வலிமை உள்ளவர்களைத் தைரிய மானவர்கள் என்று கருதி அவர்களுக்குப் பயப்படும் நிலை இருக்கிறது. மக்களில் பலரும் பாதுகாப்பிற்காக உடல் வலிமை உள்ளவர்களைச் சார்ந்தே உள்ளனர். ஆனால் மனதளவில் தைரியமானவர்களே உண்மையான தைரியசாலிகள். அண்ணல் காந்திஅடிகளையும், தந்தை பெரியாரையும் இதற்குச்சரியான உதாரணமாகக் கொள்ளலாம்.
அஹிம்சையே பலம் என்ற கருத்தின்படி காந்தியின் பின்னால் சென்ற மக்கள்தான் சுதந்திரத்தைக் கண்டார்கள். தனி ஆளாகப் பகுத்தறிவுப் பாடம் போதித்த பெரியாரின் அஞ்சாமைத் தன்மையில் ஒதுங்கிய பல திராவிடத் தலைவர்களால் தான் தமிழகத்தில் இன்று பெருமளவு மூட நம்பிக்கை ஒழிந்துள்ளன. ஆகவே தன்னை அண்டியவர்களுக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்புத்தரும் இத்தகையவர்கள் தைரியமானவர்கள் ஆவர். சமுதாயக்கேடுகள் அழிக்கப்பட்டு நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதி நிலைபெற வேண்டுமானால் மன உறுதி கொண்ட மனிதனால் மட்டுமே முடியும்.
உதாரணமாகத் தவறு செய்யும் மாணவரைத் தண்டிக்கும் ஆசிரியர், சமுதாயக் குற்றவாளிகளைக் கண்டறியும் காவல் துறையினர், குற்றம் செய்தவதைத் தண்டித்து நல்வழிப்படுத்தும் நீதி மன்றத்தார்,அயல் நாட்டின் அட்டுழியங்களை அழிக்கவல்ல போர் வீரர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணி புரியும் ஆட்சியாளர்கள், அனைவரும் தங்கள் நடை உடை பாவனைகளால், பேச்சுத் திறனால் பிறருக்குப் பயத்தைத்தரக் கூடியவர்களாக வாழ்தல் வேண்டும். கோலெடுத்தால் குரங்காடும் என்ற பழமொழிக்கு ஏற்பப் பிறருக்குப் பயத்தைத் தரத்தக்க நிலையில் வாழும் மன உறுதி பூண்ட தைரியமான மனிதனால் மட்டுமே நாடு தன்னிலை பெறும். எனவே நல்ல காரியங்களுக்காகப் பிறருக்குப் பயத்தைத் தரக் கூடிய மனஉறுதி கொண்ட மனிதரே தைரியமான மனிதராவர்.1904‡1905ல் ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே பயங்கரமான போர் நடந்து கொண்டு இருந்தது. போரில் ஒரு ஜப்பானியக் குடிமகளின் குடும்பத்திலுள்ள அனைவரும் இறந்து விட்டார்கள். மீதியிருந்த அவள் குடும்பத்தின் கடைசி வாரிசான மகனும் இறந்துவிட்டான். இச்செய்தி அவளுக்கு வந்ததும் ஓ வென்று ஆழ ஆரம்பித்தாள். அப்பொழுது அருகிலிருந்தவர்கள், அம்மா உங்களது கணவன், நீங்கள் பெற்ற மற்ற பிள்ளைகள் யாவரும் போரில் இறந்த செய்தி வந்தபொழுது அழாத நீங்கள் இந்தப்பையன் இறந்துவிட்டான் என்ற செய்தி அறிந்ததும் இவ்வாறு அழுகிறீர்களே! இவன் மேல்தான் அதிக பாசமா? என்று கேட்டார்கள். அதற்கு அவள் அவ்வாறு ஒன்றும் இல்லை. இதுவரை போரில் அனைவரும் இறந்த போது அடுத்தடுத்து அனுப்ப ஆள் உள்ளது எனத்தைரியமாக இருந்தேன். இப்பொழுது இவனுக்குப் பிறகு போருக்கு அனுப்பப் பிள்ளைகள் இல்லை, மற்றொரு பிள்ளையைப் பெற்றெடுக்க எனக்கு வயதும் இல்லையே என்பதை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் என்று கூறினாள். இப்படி ஒரு வீரத் தாயா என்று அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்ட நிகழ்ச்சி தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர்களின் புனித ஸ்தலமான அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் தோட்டத்தில் 1919ம் வருடம், ஏப்ரல் 13ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்துக்கள், முஸ்ஸீம்கள், சீக்கியர்கள் என இன வேறுபாடின்றி மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகக்குமுறி எழுந்தனர்.
ஆங்கிலேயர்கள் தான் ஆளத் தெரிந்தவர்கள் என ஆணவம் கொண்ட ஜெனரல் ஓ டயர் என்ற கொடியவன் இராணுவ வீரர்களிடம் சுடு என உத்தரவிட்டான். சுமார் 600 ராணுவ வீரர்கள் மக்களைக் காக்கா, குருவிகளைச் சுடுவதைப் போன்று சுட்டுத் தள்ளினர். சுமார் 600 பிணங்கள் கீழே சாய, 2000க்கும் மேற்பட்டோர் காயத்துடன் குற்றுயிராய் உருண்டனர்.
உயிருக்குப்பயந்து முண்டியடித்து ஓடிய ஆயிரக்கணக்கானப் பொது மக்கள் ஜாலியன் வாலாபாக் தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து உயிரைவிட்ட போது அந்த இடிபாட்டிற்குள் அதிர்ஷ்டவசமாக சீக்கிய இனத்தைச் சார்ந்த 4 மாத கர்ப்பிணி உயிர் தப்பினாள். அவள் கண் எதிரிலேயே கணவனும், மற்றவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பிறகு அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.அக்குழந்தையை 25வருடங்கள் வீரமூட்டி வளர்த்தாள் அந்தத்தாய். அதற்குள் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. ஜெனரல் ஓ டயர் ஓய்வு பெற்று இங்கிலாந்து சென்றார். அந்தச் சீக்கிய பெண்மணி தன் மகனை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தாள், எதற்காக? ஒய்விலே இருந்த ஜெனரல் ஓ டயரைப் பழிவாங்குவதற்காக, தன்னுடையத் தாயினுடையஊக்கத்தின் பிரகாரம் அந்த இளைஞன்ஜெனரல் ஓ டயரை வீட்டில் ஈசிச்சேரில் சாய்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது சுட்டுக் கொன்றான். இது ஒரு சரித்திர நிகழ்ச்சி.சினிமா மாதிரி ஒருவன் 10 பேரை அடிப்பது சாத்தியமா? 100 சதவீதம் சாத்தியம் என்று ஒரு விஞ்ஞானத் தகவல் சொல்லுகிறது. நமக்குக் கோபமும் ஆத்திரமும் வருகின்ற போது, நம்முடைய உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரந்து உடலின் இயக்கத்தில் புதிய சக்தியை ஏற்படுத்துகிறது.
அந்தச் சந்தர்ப்பங்களில் மனிதன் தன்னுடைய சக்திக்கு மீறிய செயல்களைச் செய்வான். 10 மனிதர்களின் பலத்தை அவன் பெற்று விடுகிறான். இரத்த ஓட்டத்தில் இந்தச் சக்தியை விரும்பும் போது நம்மால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்று அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தேவை அக்கறை, உற்சாகம், ஆவேசம், மகிழ்ச்சி தூண்டல், மன எழுச்சி ஆகியவை.
யுத்த களத்திலிருந்து திரும்பிய சிப்பாய் ஒருவன் கடைவீதியில் நின்று கொண்டு தன் வீரப்பிரதாபங்களை விவரித்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் பலர் நின்று அவன் சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
ஒரு தடவை நான் யுத்த களத்தில் தனியாக மாட்டிக் கொண்டேன். அப்பொழுது என்னை நோக்கி எதிரி நாட்டுச் சிப்பாய்கள் இரண்டு பேர் வந்தனர். நான் உடை வாளினால் அவர்கள் இரண்டு பேருடைய தலைகளையும், ஒரே வீச்சில் வெட்டிச் சாய்த்து விட்டேன் என்றார் அந்தச் சிப்பாய். இதைக் கேட்டுக் கொண்டிருந்த முல்லா, நானும் யுத்த களத்தில் இதற்கு மேல் பல சாகசங்களைச் செய்திருக்கிறேன் என்றார். அப்படியா, உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள் என்று கூட்டத்தினர் முல்லாவைப் பார்த்துக் கேட்டனர்.
ஒரு தடவை நான் யுத்த களத்தில் இருந்தேன். எதிரி நாட்டு வீரன் ஒருவன் என்னிடம் மாட்டிக் கொண்டான். உடனே என் உடைவாளினால் அவனுடைய இரண்டு கால்களையும் வெட்டி விட்டேன் என்றார் முல்லா. அப்படியா என்றான் ஒருவன். உடனே மற்றொருவன் முல்லாçவ்ப பார்த்து, ஏன் முல்லா நீங்கள் அந்த வீரனின் தலையை வெட்டாமல் கால்களை வெட்டினீர்கள்? என்று கேட்டான்.
நான் என்ன செய்ய முடியும், எவனோ ஒருத்தன் எனக்கு முன்னால், அவன் தலையை வெட்டிட்டுப் போய் விட்டானே, எனவேதான் நான் அவன் கால்களை வெட்டினேன் என்றார் வீராதி வீராVன முல்லா.
பயில்வானைப் போல் நல்ல உடல் அமைப்புக் கொண்ட ஒருவர் உணவகத்தில் போய் வேலை கேட்டார், கல்லாவில் இருந்தவர், என்ன வேலை தெரியும்? என்று கேட்டார். சாப்பிட்டுவிட்டு யாராவது காசு கொடுக்காமல் போனால் அடித்து உதைத்து, வசூல் செய்வேன் என்றார் பயில்வான். அப்போது உள்ளே இருந்த ஒருவர் கல்லாப் பெட்டியைத் தாண்டி வெளியே போனார். பயில்வான் ஓடிப் போய் அந்த ஆளை அடித்து, நொறுக்கிக் கீழே தள்ளிவிட்டு மீண்டும் கல்லாவுக்கு ஒடிவந்து, இப்படித்தான் அடித்து வசூல் செய்வேன், வேலை தருகிறீர்களா? என்றார். முதலாளிதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார் கல்லாவில் இருந்தவர்.
முதலாளி எங்கே? என்றான், வேலை கேட்டு வந்தவன். இப்போது நீ அடித்து உதைத்தாயே அவர்தான் முதலாளி என்று பதில் வந்தது.
ஆயிரம் பேர்களை வென்றவனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவன் தான் வீரன், என்று புத்தர் உபதேசித்தார்.
தைரியமே பிறவிக் குணமாய் அமைந்து உள்ள ஒருவன், எவ்வளவு கேவலமான நிலையை அடைந்தாலும், அந்த தைரிய குணத்தை மாத்திரம் இழக்கமாட்டான், நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் ஜவாலை ஒருகாலும் கீழ்நோக்கி எரிவதில்லை.
நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற மன உறுதிதான் வீரம், அந்த வீரத்தை விவேகத்துடன் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். நல்ல பலசாலிகள், எதிரிகளைத் தாக்காமல் மிரட்டல் மூலமாகவே தவறு செய்பவர் களைத் திருத்திவிடுவார்கள்.

-நன்றி.முகமது இலியாஸ்

மனநல மருத்துவர் ராமானுஜம்

dr-ramanujam

உடல் நலத்திற்கு உகந்த பழக்க வழக்கங்கள் என்னனென்ன என்பதனை பட்டியலிட்டு அதன்படி நடக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் மத்தியில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை மருத்துவ உலகம் பட்டியலிட்டு காண்பித்த பிறகும் அந்த தீய, கொடிய பழக்க வழக்கத்திற்கு ஆளாகி மீள முடியாமல் தனது உயிரையே காணிக்கையாக்கி விடுகின்றனர் பலர்.
புகைப் பழக்கம், போதை மருந்து பழக்கம் இவை எல்லாம் மனிதனுக்கு எந்த வழிகளிலெல்லாம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்பதனை மது, போதை அடிமை சிறப்பு மருத்துவர். ராமானுஜம் கூறுவதை இனி பார்ப்போம்.
போதை பழக்கம் என்பது உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. எந்தெந்த பொருட்களை உபயோகிப்பதால் மூளையில் இரசாயன மாற்றம் ஏற்படுகிறதோ அந்தப் பொருளை மீண்டும், மீண்டும் எடுக்க / உபயோகிக்க தூண்டுவதினை சைக்கோ ஆக்டிவ் சப்ஸ்டேன்ஸ்  என்கிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த, பழக்கமான, மிதமான ஒரு போதைப் பொருள் காபி. இதிலுள்ள காபின் தியோபிலின்  என்கின்ற வேதிப்பொருள் மூளையிலே இரசாயன மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. இதனால் சிறிது சுறுசுறுப்பும், சிந்தனைத் திறனும் நமது உடலில் அதிகரிக்கிறது.
ஆனால் இந்த காபியின் விளைவுகள் அதிகமாக இல்லாதிருப்பதினால் அனைவரும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.
நாம் ஒரு இசையை கேட்டுக் கொண்டிருக்கும் போதோ,பரவச நிலையில் இருக்கும் போதோ நமது மூளையில் டோபமைன் என்கின்ற ஒரு இரசாயனம் சுரக்கின்றது. இந்த டோபமைன் எப்பொழுதுமே சுரந்து கொண்டிருப்பதில்லை. சிறிது நேரம் மட்டுமே இந்த இரசாயனம் வேலை செய்கிறது. மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக டோபமைன் சுரந்து கொண்டே இருப்பதனால் அந்தப் பொருளை மீண்டும், மீண்டும் உபயோகிக்கத் தூண்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஒரு நபர் எந்த அளவுக்கு போதைப் பொருளை உபயோகிக்கிறாரோ அந்த அளவிற்கு அவரது மூளையில் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த போதைப் பழக்கத்தினை நிறுத்திய பிறகு சில விளைவுகள் ஏற்படும்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரை எப்படி கண்டறிவது?
இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அந்தப் போதைப் பொருள் இல்லாமல் இருக்க முடியாது.
உடலில் என்ன மாற்றம் ஏற்படும்?
1. உடலில் நடுக்கம் 2. மனப்பதட்டம் 3. தூக்கமின்மை 4. தேவை இல்லாத கோபம் 5. அமைதியின்மை 6. எப்பொழுதும் அந்தப் போதைப் பொருளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பர்.
உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தினால் போதைப் பொருட்களினை உபயோகிக்கின்ற அளவும் கூடி விடுகிறது. இதனால் எப்பொழுதும் போதைப் பொருட்களை உபயோகிப்பது குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பர்.
மதுப் பழக்கம் மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது மட்டுமின்றி உடலளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நமது உடலின் உள்ளே செல்லும் பல விதமான நச்சுப் பொருட்களை நீக்கி நம் நலம் காக்கும் செயல்களைச் செய்வது கணையம்.
மதுப் பழக்கத்தினால் கணையத்தில் சில கொழுப்புகள் சேரத் தொடங்குகிறது மிகவும் மோசமான அளவிற்கு பாதிப்பு கணையம் அடைந்து விடுகிறது.அடுத்தது மூளை மற்றும் நரம்புகளை இந்த மதுப் பழக்கம் அதிகமாக பாதிக்கிறது. இதனால் கை, கால்களில் உள்ள நரம்பு பாதிப்பினால் தளர்ச்சி ஏற்படுதல், கை, கால் எரிச்சல், ஆண்மைக் குறைவு பிரச்சனை, மூளையில் ஏற்படும் பாதிப்பில் ஞாபக மறதி பிரச்சனையும் ஏற்படுகிறது.
சில பேருடைய உடலமைப்பு, அவர்களுடைய பிறவியிலேயே மூளையில் மாறுபடும் இராசாயன மாற்றத்தினால் எளிதில் உந்தப்பட்டு இந்த மதுப்பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.
சில பேருக்கு ஏற்படும் சூழ்நிலைகள் காரணமாக இந்த போதைப் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். மேலும் இந்த போதை வஸ்துகள் மிகவும் எளிதாக கிடைப்பதுவும் ஒரு காரணம். நண்பர்களின் வற்புறுத்தல், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வம் இதில் என்ன இருக்கின்றது என்கின்ற எண்ணம் போன்றவற்றினால் இப் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.
சிலர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க சரியான வழி தெரியாமல், அதிலிருந்து தற்காலிகமாக விடுபட, மயக்க நிலையை அடைய வைக்கின்ற இந்த போதைப் பழக்கத்தினை நாடுகின்றனர்.
மனப்பதட்டம், மன அழுத்தம் உடையவர்கள், தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் கூட இந்த மதுப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். வருடக்கணக்கில் சில பேர் அளவுக்கதிகமாக குடிப்பர், அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதனால் நமக்கும் ஒன்றும் செய்யாது என தவறாக நினைத்த குடிப்பழக்கத்தினை தொடர்கின்றனர். இது தவறான ஒரு எண்ணம். ஒவ்வொருவருடைய உடலமைப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.
குடிப் பழக்கத்தினால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மனதளவில் தளர்ச்சி அடைதல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல பாதிப்புகளைச் சந்திக்கக் கூடிய நிலை ஏற்படுதல் மூலமாக மன அழுத்தம் ஏற்பட்டு உடலையும், மனதினையும் பாதிக்கிறது.
சிகிச்சை முறை:
போதைப் பழக்கத்தினால் பாதிக்கப் பட்டவரின் உடலிலிருந்து போதைப் பொருட்களை அப்புறப்படுத்தும் சிகிச்சை. தொடர்ச்சியாக நாம் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளையும் நாம் நிறுத்தினால் நமது உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். அதாவது சிலருக்கு கை நடுக்கம்,எரிச்சல் பேன்றவை ஏற்படலாம்.அதிகமாக பாதிப்புள்ளானவருக்கு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுப்பது அவசியம்.அவர்களுக்கு இந்த பாதிப்பிலிருந்து விடுபட மருந்துகள் உள்ளன.
குடிப்பழக்கம் வராமல் தடுக்கவும், குடிக்கின்ற எண்ணங்கள் வராமல் இருக்கவும் சில மருந்துகள் உள்ளன. இந்த வகையான மருந்துகளை எடுத்த பின்பு குடித்தாலும் வாந்தி, குமட்டல் போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடய மருந்துகள் உள்ளன.இவற்றினை நோயாளிகளுக்கு தெரிந்தோ,தெரியாமலோ டீ,காபி போன்றவற்றில் கலந்து கொடுக்கலாம். என்னதான் சிகிச்சை முறைகள் இருந்தாலும் அதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. மருந்துகள் 100 சதவிகிதம் குணமளிக்காவிடினும் நோயாளியின் ஒத்துழைப்பு,அவரின் வாழ்க்கைச்சூழல், இதிலிருந்து விடுபடவேண்டும் என்கின்ற எண்ணம் போன்றவை இருந்தாலே போதும் இந்த போதைப் பழக்கத்திலிருந்து எளிதில் விடுபடலாம்.

நாம் நம்முடைய வாழ்க்கையில் அடைய இருக்கின்ற வெற்றிக்குத் தடைக்கல்லாக இருப்பது நமக்கு ஏற்படுகின்ற தேவையில்லாத கோபமே! நாம் யார் மீது கோபம் கொள்கிறோமோ அவரை விடக் கோபப் படுகின்ற நாம்தான் அதிகப் பாதிப்புக்கு ஆளாகுகின்றோம் என்பது அனுபவப்பூர்வமான உண்மை. வயதோ சோகமோ நம் இரத்தத்தை உறிஞ்சுவதைக் காட்டிலும் நமக்கு ஏற்படுகின்ற பொறுமையின்மையே நம் இரத்தத்தை அதிகம் உறிஞ்சு கிறது என்கிறார் கிளியான் அவர்கள்.

நான் ஒரு கோபக் காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறோம். நோய்க்கு இடம் கொடேல் என்பது பழமொழி. கோபத்துக்கு இடம் கொடேல் என்பது புதுமொழி. நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமானால் கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. கோபம் நம் தலைக்கு ஏறுகிறபோது நிதானம் இழந்து தேவையில்லாத வார்த்தை களைப் பேசிவிடுகிறோம்.அதன்பிறகு ஒரு சில நிமிடத்தில் நமக்குநிதானம் ஏற்பட்டவுடன் தேவையில்லாமல் பேசிவிட்டோமே என்று வருந்துகிறோம். இதைத்தான் நம் முன்னோர்கள் தீயினால் சுட்டபுண் ஆறிவிடும் நாவினால் சுட்டால் அதை வடு என்பார்கள். அது ஆறாது. வெளியிலிருக்கும் கைகளை விட உள்ளே இருக்கும் நாக்கிற்கே வலிமை அதிகம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

கோபத்தோடு வருபவனிடம் குளிர்ந்த முகத்தோடு பேசினால், அவனின் கோபம் தந்துவிடும். உங்களுக்குக் கோபம் வரும்போது கண்ணாடியில் உங்கள் முகத்தைப்பாருங்கள். நாம் இவ்வளவு கொடுரமாக இருக்கிறோமா? என்று உங்களுக்கே வெட்கமாக இருக்கும், பிறகு கோபம் தணிந்து விடும் என்று கோபத்தைப் பற்றி கிருபானந்தவாரியார் கூறியுள்ளார். ஜப்பான் நாட்டில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டால் இர ண்டு ஒட்டுனர்களும் காரிலிருந்து கீழே இறங்கி ஒருவருக்கொருவர் மரி யாதையோடு வணக்கம் சொல்லிவிட்டுத்தான் பேசஆரம்பிப்பார்கள். இதுபோன்று நம்நாட்டில் விபத்து நடந்தால் யார் மீது தவறு இருக்கிறதோ அவர் தன் மீது தவறு இல்லை என்பதை நிரூபிப்பதற்காக கோபம் வராவிட்டாலும் கோபத்தை வரவழைத்துக் கொண்டு சப்தமிட்டுப் பேசுவதை நாம் பார்க்கிறோம்.

காம இச்சையைப் போன்று கடுமையான வியாதி வேறு எதுவும் இல்லை. தீய பழக்க வழக்கங்களை விட அபாயகரமான எதிரி வேறு எதுவும் கிடையாது. கோபத்தைக் காட்டிலும் சுடுகின்ற நெருப்பு வேறு எதுவும் இல்லை என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்ற தாமஸ் கார் லைல் அவர்கள் நூல் ஒன்றைத்தன் கைப்பட எழுதி நூலினுடைய தன்மையை அறிந்து கொள்வதற்காக அப்பிரதியைத் தன் நண்பரிடம் படிப்பதற்குக் கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் நண்பர் நூலின் கருத்துக்களை, கார்லையிடம் சொல் லாததோடு நூலையும் திருப்பிக் கொடுக்கவில்லை. நூலைப் படித்து முடித்து விட்டால் திருப்பித் தருமாறு தன் நண்பரிடம் கார்லைல் கேட்டார். அப்போது தான் நண்பருக்கு ஞாப கம் வந்தது. ஆஹா நூலை மேஜைக்கு மேல் வைக்காமல் கீழே வைத்து அதை வீட்டு வேலைக்காரி குப்பை பேப்பர் என்று நினைத்து அடுப்பில் எரித்து விட்ட நிகழ்ச்சி. இந்த விஷயத்தை நண்பர் கூறியவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நின்று விட்டார் கார்லைல். அப்போது கார்லைல் வருத்தப்பட்டாரே தவிர கோபம் கொள்ளவில்லை. உடனே கார்லைல் தன்வீட்டிற்கு வந்து தன்னுடைய ஞாபகத்தில் உள்ளவற்றை யோசித்து எழுத ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளில் அப்புத்தக த்தை எழுதி முடித்தார். இப்புத்தகம்தான் கார்லைலுக்கு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்த பிரெஞ்சுப் புரட்சி என்ற புத்தகம் ஆகும். தன் கைப்பட எழுதின பிரதியைப் பொறுப்பற்ற நண்பனிடம் கொடுத்தது தன்னுடைய குற்றம்தானே தவிர நண்பனுடைய தவறு அல்ல என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டார் கார்லைல்.

குற்றத்தைப் பிறர் மீது சுமத்தும் போதுதான் நமக்குக்கோபம் வருகிறது. நூலின் பிரதி எரிந்து விட்டது என்று நண்பர் கூறியவுடன் அவ்வினாடியே அதே நூலை எப்படியும் எழுதியே ஆக வேண்டும் என்ற முடிவிற்கு கார்லைல் வந்ததின் காரணமாகத் தான் அவர் கோபப்படவில்லை. நடந்து முடிந்த காரியத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தால் ஆத்திரமும் கோபமும் தான் மிஞ்சும். எனவே இனிமேல் நடக்கக்கூடிய காரியத்தைப் பற்றி நாம் சிந்திக்க ஆரம்பித்தால் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று தாமஸ் கார்லைலின் இச்சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

விஞ்ஞானிகளின் தந்தையென்று சரித்திர ஆசிரியர்களால் போற்றப்படக்கூடிய சர்ஐசக் நியூட்டன் அவர்கள் பல ஆண்டு காலமா கக் கஷ்டப்பட்டுப் பல ஆராய்ச்சிகளைக் கட்டுரைகளாக எழுதி வைத்திருந்தார். அவர் வளர்த்த நாய் விளக்கைத் தட்டி விட்டதால் அக்கட்டுரைகள் யாவும் தீக்கிரையாயின. அப்பொழுது அவர் அந்நாயிடம் சென்று இப்படிச் செய்து விட்டாயே என்று அன்பாகத் தட்டிக் கொடுத்தாரே தவிர, கோபப்படவில்லை. மீண்டும் தனது ஆராய்ச்சிகளைக் கட்டுரையாக எழுதி பூமிக்கும் ஈர்க்கும் சக்தி உண்டு என்ற உண்மையை அதாவது புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். நாய் விளக்கைத் தட்டி விட்ட நேரத்தில் ஐசக் நீயூட்டன் கோபப்பட்டிருந்தால் பூமிக்கும் ஈர்க்கும் சக்தி உண்டு என்ற உண்மையை அவரால் கண்டுப்பிடித்திருக்க முடியுமா? கடுமையான அனுபவத்தின் மூலம் கோபத்தை அடக்குவது எப்படி என்பதை நான் தெரிந்து கொண்டேன். அடக்கிவைத்த உஷ்ணம் சக்தியாக மாறுவதுபோல் அடக்கிவைத்த கோபத்தையும் சக்தியாக மாற்றலாம். அந்தச்சக்தி உலகத்தையே மாற்ற வல்லது என்று மகாத்மா காந்தி கூறுகிறார்.

முன் கோபத்தைத் தொடர்ந்து பின்கோபமும் ஏற்படும் போது தான் பாதிப்பு அதிகமாகும். முன்கோபத்திற்குப்பின் சாந்தம் ஏற்பட்டால் யாரையும் பாதிக்காது. நம்மையே அழிக்கும் விஷம் நமக்குள்ளே இருக்கிறது என்றால் அது கோபம் தான்.கோபத்தோடு எழுந்திருப்பவன் நஷ்டத்தோடு உட்காருவான். அறிவுள்ளவனும் வெற்றி பெற விரும்புபவனும் ஒரு போதும் கோபத்துக்கு உள்ளாகமாட்டான் என்று ஜேம்ஸ் ஆலன் கூறுகிறார். பூமி தேவியைப் போன்று நமக்கு வரக்கூடிய இடையூறுகள் அனைத்தையும் கோபப்படாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும்.

நாம் இவ்வாறு யாவற்றையும் பொறுத்துக்கொண்டால் உலகம் நம் காலடியில் அமரும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். கோபத்தைஅடக்குகின்றவனும்குற்றம்செய்பவர்களை அடக்குகின்றவனும் பாக்கிய சாலிகள் என்று முகம்மது நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள். உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக் கொண்டு அமர்ந்திருங்கள் என்று பைபிளில் சங்கீதம்(44) கூறுகிறது.

கோபத்தைத் தணித்தால் மட்டுமே சந்தோசம் நம்மைத் தேடி வரும். மின்சாரத்தில் கையை வைத்தால் ஆபத்து என்பது நமக்குத் தெரியும். அதைப்போன்று கோபம் வந்தால் வாழ்க்கை சிதறிவிடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அதிகம் கோபப்படுகின்றவர்களுடைய ஆயுள் குறையும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. கோபத்தைத் தவிர்க்க வேண்டுமானால் எப் போதும் நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். எப்போதும் நம் மனம் தூய்மையாக இருக்க யோகாசனப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். தினமும் யோகாசனப்பயிற்சியை மேற் கொண்டால் கோபத்தைத் தவிர்க்கலாம்.

 

ஆரோக்கியமாக உண்ணும் பழக்கம்:

உணவுப்பழக்கத்தை மாற்ற விரும்புவர்களும்,ஆரோக்கியமான உணவுத் திட்டத்திற்கு மாற விரும்புவர்களும்,உடலை மெலிய வைக்க விரும்புபவர்களுக்கும் உணவுத் திட்டம் தேவையாகத்தான் இருக்கின்றது. உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் உங்கள் செயலும் அதில் உங்களுக்குள்ள உறுதிப்பாடும் உங்களுக்கு வெற்றியைத் தரும். புதியதாக ஏதாவது ஒரு செயலில் சாதிக்க விரும்புபவர்கள் முன்னே சவால்களும் நிற்பது இயற்கை தானே.அது போன்று உணவுக்கட்டுப்பாடும் ஒன்று.

ஆரோக்கியமாக உண்ணுவதைத் தொடருங்கள்:

உணவுக் கட்டுபாடு என்பதில் முதலில் எவை எல்லாம் ஆரோக்கியமான உணவுகள்? எவை எல்லாம் குப்பை உணவுகள் என்று கண்டறிவது அவசியம்.நிலத்தில் இருந்து முளைத்து,படர்ந்து வளர்வது,கடலில் இருந்து கிடைப்பது எவை எல்லாம் இயற்கை உணவுகளே.இது ஆரோக்கியமானது.பதப்படுத்தப்பட்ட,பாக்கெட்டுகளில் பொதிந்து வைக்கப்பட்டு உள்ள தானியங்கிப் பெட்டிகளிலுள்ள உனவுகள் எல்லாம் குப்பை உணவுகள்.ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது பழங்கள்,தானியங்கள்,கொட்டைகள்,காய்கறிகள்,பீன்ஸ். மற்றவைகளான கடல் உணவுகள் குறைந்த கொழுப்புச்சத்துள்ள இறைச்சிகள். இயற்கைக்கு மாறாக அதிக அளவிலான கலோரிகளையும்,கொழுப்புகளையும்,செயற்கைப் போஷாக்குகளையும் தருவதே குப்பை உணவுகள்.

சிறிய சிறிய முயற்சியாகத் துவங்குங்கள்:

முதலில் கூறியது போல் மாற்றம் என்பது நிறைய சவால்களை உள்ளடக்கியதே.அதனால் முயற்சியை சிறிது சிறிதாகத் துவங்குகள்.உங்கள் உணவு மாற்றத்தில் இது ஒரு புதிய மைல்கல்.உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை வைப்பதற்காக ஷாப்பிங் செய்யுங்கள்.பெரும்பாலும் வீட்டிலேயே உணவைத் தயாரித்து உண்ணத் துவங்குங்கள்.கடைகளில் தின்று பழகிய அதே உணவுகளில் இருந்து விடுபடுவதற்கு உணவுநல பத்திரிக்கைகள் வாங்கி அதில் உள்ள விதவிதமான ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே செய்து உண்ணுங்கள்.

அடையக்கூடிய இலக்குகளை தீர்மானியுங்கள்:

பெரும்பாலானவர்களது இலக்குகள் எட்டமுடியாத உயரத்தில் இருக்கும்.உங்கள் உடல் எடை ஒரு 5 சதவிகிதம் குறைந்தாலே அது பெரிய சாதனையாகக் கருதுங்கள்.இது போன்று எளிதாக எட்டக்கூடிய இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள். அதாவது ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ எடையைக் குறைப்பது என்று முயற்சியைத் தொடருங்கள்.ஏனெனில் உணவுக்கட்டுப்பாடு என்பது மனம் உவந்து செய்வது ஆகவே அதை வலுக்கட்டாயமாகத் திணிக்காதீர்கள்.வெற்றிகரமாக உடலெடை குறைந்து வரும்போது சில சமயம் நீங்கள் சில சவால்களையும் சந்திக்க நேரிடலாம்.அவை உங்களை பின்னேயும் இழுக்கலாம்.மனம் தளராதீர்கள். இது போன்ற சூழ்நிலைகளில் 80 சதவிகிதம் சவால்களைச் சமாளிப்பதற்கும் வெற்றியின் அளவீடாக 20 சதவிகதமாக இருந்தாலும் நன்று.

உங்கள் காலை உணவுத்திட்டத்தில் சூடான ஓட்ஸ்ம் நறுக்கிய பழங்களும் அதனைத்தொடர்ந்து நல்ல சத்தான கோதுமையும்,தக்காளி மற்றும் கீரைகள்,பெர்ரி பழங்களுடனான தயிர், அடங்கிய மதிய உணவினை உண்ணுங்கள்.வாழ்வில் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றி புத்துணர்ச்சியுடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.

நம்மில் அனைவரிடமும் உள்ள பிரச்சனை:

உடற்பயிற்சி வாழ்க்கைப்பயணம் மேற்கொண்ட அனைவரும் திடீரென்று தினமும்,வாரக்கணக்கிலும் உற்சாகம் குறைந்து எதோ ஒரு வெறுப்பு உணர்ச்சியினால் உந்தப்பட்டு உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டுவர்.உடலை மெருகேற்றவேண்டும் என்று உடற்பயிற்சி செய்ய வந்தவர்களும், உடலை மெலிய வைக்கவேண்டும் என்று நினைத்து உடற்பயிற்சி செய்ய வந்தவர்களும் உடனடியாக அதற்குண்டான பலன்கள் தெரியாததால் மனம் சோர்ந்து போகின்றனர்.உடற்பயிற்சி செய்யவேண்டும் என்கின்ற உறுதியினை உடையவர்களுடைய நம்பிக்கையை உடைப்பதே இந்த மனச்சோர்வு. இத்தனை வார காலம் உடற்பயிற்சிசெய்தும் ஒரு முன்னேற்றம் இல்லையே என்கின்ற ஒரு எண்ணம் தான் உடற்பயிற்சி செய்து வரும் நம்மை அதிலிருந்து விலகச் செய்கிறது.

நாம் கவனிக்காமலிருக்கும் காரணங்கள்:

நிறைய காரணங்களினால் நாம் உடற்பயிற்சி செய்வதை விட்டுவிடுகிறோம். உற்சாகப்படுத்த துணைக்கு நண்பர்கள் இல்லாமல் சிலபேர் தனியாக உடற்பயிற்சி செய்வதினாலும்,பயத்தை விரட்டி அடிக்கும் மனப்பான்மை உங்களிடம் உள்ளதை நீங்கள் உணராத போதும்,உங்கள் வீட்டிலிருந்து உடற்பயிற்சிக் கூடம் வெகுதொலைவில் இருப்பதாலும்,வேலைப்பளுவினாலும் அல்லது தினமும் ஒரே விதமான உடற்பயிற்சிகளைச் செய்வதால் ஏற்படும் சலிப்பு மற்றும் உங்களுடன் நீங்களே போட்டியிடும் எண்ணம் இல்லாதிருத்தல்,சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள்  இவை எல்லாம் உங்களை உடற்பயிற்சியிலிருந்து உங்களை விலகச் செய்கிறது. இது போன்ற புரிந்து கொள்ளக்கூடிய பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் நீங்கள் தனியாக இல்லை என்று நினையுங்கள்.

இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது எப்படி?

நாம் உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட நிறைய காரணங்கள் இருப்பினும் நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள். உடற்பயிற்சிக் கூடத்திற்கு உங்களுக்குப் பிடித்த நண்பருடன் செல்லுங்கள் அப்போது உங்கள் நம்பிக்கை மேலும் பலப்படும். ஓய்விற்குப் பின் புத்துணர்ச்சி என்பதனால் மனம் தளர்ச்சியாக இருக்கும் சமயத்தில் மனதை உற்சாகப் படுத்த சிறிது ஓய்வும் எடுங்கள்.இந்த ஓய்வு உங்களை அடுத்து உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்யவைக்கும். உடற்பயிற்சி கூடத்தை விட்டு வெளியே வந்த உடன் இயற்கையை ரசித்துக்கொண்டு காலாற நடப்பது,இசையுடன் கூடிய நடனப் பயிற்சி செய்வது, தற்பாதுகாப்புக் கலைகளை கற்றுக்கொள்ளுதல் போன்றவை உங்களை சோர்விலிருந்து மீட்டெடுக்கும். சிலசமயம் உங்கள் உடல்நிலை/ஆரோக்கியமற்ற நிலை கூட காரணமாக இருக்கலாம் அப்படியிருந்தால் ஒரு மருத்துவரை அணுகுங்கள். ஆனால் உடற்பயிற்சி செய்வதை விட்டுவிடுவது  என்ன காரணத்தினால் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது ஒருவிதமான மனப்பயமே ஆகும். உங்களுக்கு நீங்களே ஆதரவாக இருங்கள்.இது போன்ற சூழ்நிலைகளில் உறுதியாக இருங்கள். அந்தச் சூழ்நிலைகளைக் கடந்து சென்று உங்களால் சாதிக்க முடியும்.

பிறருடன் போட்டியிடுவதைத் தவிர்த்து உங்களுடனே போட்டியிடுங்கள்.

நீங்கள் நீங்களாகவே இருங்கள்..அதை நேசியுங்கள்

நீங்கள் உங்களை பிறருடன் உங்களை ஒப்பிட்டு வாழ்பரா? பெரும்பாலான மக்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். ஒரு பிரபலமான நபரைப் போலவோ, ஒரு சிறந்த அறிஞரைப் போலவோ,ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டைப் பார்த்தோ நாமும் இப்படி வாழவேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு வருவது இயல்பே. புறத்தில் இருக்கும் அழகில் மயங்கிப் போகும் நாம் நமது உள்ளே இருக்கும் நம்மைப் பற்றி கவனிக்கத்தவறுகிறோம்.

அடுத்தவரிப்போல் வாழவேண்டும் என்று நினைத்து உழைப்பது தவறில்லை. ஆனால் அடுத்தவரை பார்த்து அவர் உயர்ந்தவர் என்றும் நம்மிடம் ஒன்றும் இல்லாதது போல் நம்மைத்தாழ்த்தும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. அப்போது நம்மை நாமே காயப்படுத்திகொள்கிறோம்.அடுத்தவரின் உடமைகளும்,தோற்றமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத்தருவது இல்லை.உங்களிடம் உள்ள பொருட்களாலும்,உங்களிடம் நடிக்காத நட்பினாலும் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதென்றால் நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி தான்.

அடுத்தவருடன் உங்களை ஒப்பிடும் வாழ்க்கை ஏன் வெற்றியடைவதில்லை?

அடுத்தவருடன் உங்களை ஒப்பிடும் போதெல்லாம் அது உங்களை தோல்வியை நோக்கி அழைத்துச்செல்கிறது. அடுத்தவரிடம் உள்ளது போன்ற தோற்றமும்,பணமும் நம்மிடம் இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும் போது இரண்டு விடயங்களை நீங்கள் பார்க்கவேண்டும்.

1.நீங்கள் அவர்களைப் போன்று வாழ வழியற்றவர்கள் என்றோ வாழ முடியாதென்றோ நினைப்பீர்கள்.

2.அடுத்தவரின் பகட்டான வாழ்க்கையின் மறுபக்கம் பற்றி அறிந்து கொள்ளமாட்டீர்கள்.

நீங்கள் பார்க்கும் நபர் வசதியான பொருட்களையும்,உடைகளையும்,ஆபரணங்களையும் வாங்குவதற்கென்று ஒரு பெரும் தொகையினை கடனாகப் பெற்று வாழ்ந்து வரலாம். ஆனால் ஊடகங்கள் பிரசத்தி பெற்ற நபர்கள் மட்டுமே மிகவும் சந்தோஷமாக வாழ்வது போலவும்,அவர்கள் வாக்கையை நம்மால் வாழமுடியாதது போலவும் சித்தரித்து நமது மகிச்சியை கெடுக்க நினைக்கின்றன.நம்முடைய ஆற்றலைச் செலவழித்து நம்முடைய எண்ணம், இலக்கு,குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டுமே ஒழிய அடுத்தவர்களைப் போன்று அல்ல என்பதனை மனதில் இருத்துங்கள். எளிதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் குறிக்கோளை அடைவதை விட்டுவிட்டு எட்டமுடியாத இலக்குகளை குறித்து கனவு காணுவதை நிறுத்துங்கள்.

வாழ்வை முற்றிலுமாக வாழுங்கள்:

இந்த புவியில் வாழும் அனைத்து மக்களினைப் போல் சமமானவர் நீங்கள் தான் என்று நினையுங்கள். நீங்கள் தான் பிரசித்தி பெற்ற,பணக்கார நபர் என்று எண்ணி பெருமிதம் அடையுங்கள்.அடுத்தவரை விட முன்னேறவேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்தை உங்கள் மீது நீங்களே திணிக்காதீர்கள்.நீங்கள் உங்கள் உள்ளுணர்வு சொல்லுவதை செவி மடுத்து உங்கள் தனித்திறமையை உங்கள் குறிக்கோளை அடைவதற்கு பயன்படுத்தி,அதில் சித்தி அடைந்து மகிழ்ச்சியை அடையவேண்டுமே அன்றி அடுத்தவரைப் போன்று வாழ கடின முயற்சி எடுத்து அதில் தோற்று மனம் வருந்தி நிற்கக் கூடாது. உயர்ந்த நிலையை அடைய குறிக்கோள் தேவை தான். நாம் அதற்காக உழைக்கலாம் ஆனால் மனம் விரும்புகிறது என்று ஆசைக்காக அடுத்தவரினைப் போல் வாழ முயற்சிப்பது தவறு.

யாரிடமும் இருந்து பெறமுடியாத நிறைய நல்ல குணங்களும்,திறமைகளும் உங்களிடம் கொட்டிக்கிடப்பதைக் உணர்வால் கண்டறிந்து மகிழ்ச்சி அடையுங்கள். உங்கள் வாழ்க்கையை மதியுங்கள்…ஜெயித்துக்கொண்டே இருப்பீர்கள்…

 

மன அழுத்தத்தை விரட்டுவது எப்படி?

நம்மைப் பாதிக்கும் மனஅழுத்தத்தை விரட்டுவது எப்படி?

மனஅழுத்தம் எந்த வயதிலும், யாருக்கும் ஏற்படலாம்.ஆனால் மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகள் எவை என்று பார்ப்போமா…

1.ஜீன்கள் 2.ஹார்மோன்கள் அளவில் மாறுபாடு 3.உடல் நலமின்மை,துக்கம்,துயரம்

நமது வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் மனஅழுத்தம் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நமது உடலின் சக்தியையும்,வாழ்வில் மகிழ்ச்சியையும் நாம் இழந்துவிடுகிறோம்.மேலும் கவனச் சிதறல் ஏற்பட்டு செய்யவேண்டிய முக்கியமான காரியங்களை முன்னெடுத்துச் செல்வதில் தடுமாறுகிறோம். ஆனால் மனஅழுத்தத்தில் இருந்து நிச்சயம் விடுபட்டு வெளிவர முடியும்.எப்படி?

1.உதவி பெறுதல்: உடலளவிலும்,மனதளவிலும் உதவக்கூடிய உங்கள் நண்பர்கள்,குடும்ப உறுப்பினர்கள் மனஅழுத்தத்திலிருந்து நீங்கள் வெளிவர உதவ முடியும்.

உங்கள் நலம்விரும்பிகளுடன் அளவளாவுங்கள்.அவர்களுடன் வெளியே சென்று சினிமா போன்ற பொழுதுபோக்கு இடத்திற்குச் சென்று வாருங்கள். உதவும் குழுக்களுக்கு உங்கள் நண்பருடன் சென்று பாருங்கள்.

உற்சாகமாக எழுந்து நில்லுங்கள்:

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வது மனஅழுத்தத்தை நிச்சயம் விரட்டும்.உடலில் சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி உள்ளத்திலும் சக்தியை அதிகரித்து மனஅழுத்தம் குறைக்க உதவுகிறது.உடற்பயிற்சி என்பது இரும்பு எடைக் கம்பிகளுடன் பொழுதினைக் கழிப்பது என்ற எண்ணத்தினைக் கைவிடுங்கள்.ஒரு 30 நிமிட நடைப்பயிற்சி,சமையலறையில் உங்கள் துணையுடன் பிடித்த பாடலுக்கு நடனமாடுதல் போன்ற மனமகிழ்வு தரும் உடற்பயிற்சிகள் கூட உங்கள் மனஅழுத்தத்தை விரட்டிவிடும்.

ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறை:

உடலுக்கு வளத்தினைகொடுக்கும் உணவுகளும்,உள்ளத்திற்கு வளத்தினைக் கொடுக்கும் நல்ல உறக்கமும் மனஅழுத்தம் போக்கும் நல்ல வாழ்க்கை நடைமுறையாகும்.தினமும் 8 மணி நேரத்தூக்கம்,தூங்கி எழுந்த பின் சுறுசுறுப்பாக வெளியே சென்று மனதை உற்சாகப்படுத்தும் புதிய நடவடிக்கைகலில் ஈடுபடுதல். வாழ்க்கையில் உள்ளத்து அமைதியை இழந்தவர்களும்,போராடுபவர்களும் யோகா சென்று மனஅழுத்தத்திலிருந்து மீண்டு உள்ளனர்.

மனதினை மகிழ்வுறச்செய்யும் செயல்களைச் செய்யுங்கள்:

இதற்கு முன் உங்களுக்கு மன மகிழ்வைத் தந்த பொழுதுபோக்குகள் என்னவென்று சிந்தித்து அவற்றை எல்லாம் திரும்பச் செய்யுங்கள்.அது உதாரணமாக பெயின்டிங்,புத்தகம் படித்தல் போன்றவையாகக் கூட இருக்கலாம்.இதனால் மன ஒருமைப்பாடு அடைந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

சத்தான ஆகாரம் சாப்பிடுங்கள்:

உண்ணும் உணவு கூட உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தினைக் கொடுக்கும். உடலுக்குத்தேவைப்படும் நல்ல ஆரோக்கியமான உணவினை உண்ணுங்கள்.தேவைப்பட்டால் காஃபி,மது வகைகள்,சுத்திகரிக்கப்பட்ட இனிப்புகள்,பூரிதக் கொழுப்பு உணவுகளினைத்தவிர்த்து விடுங்கள்.உணவுகளை சிறுசிறு பகுதியாக பிரித்து உண்ணுதல் கூட நலம் பயக்கும்.

நம் செயல்பாடுகளை முடங்கச் செய்யும் மனஅழுத்தத்தை நாம் விரட்டியடிப்போம்.

 

 

நாம் ஏன் நேர்மறையாகச் சிந்திக்கவேண்டும்?

வாழ்க்கையை உற்சாகமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் வாழ்வதற்கு எப்பொழுதுமே நேர்மறை எண்ணங்கள் உதவி செய்கிறது என்பது தான் உண்மை.ஏனெனில்  எதிமறை எண்ணங்கள்,செயல்கள்,வார்த்தைகள் இவை அனைத்துமே மகிழ்ச்சியற்ற, திருப்தி இல்லாத வாழ்க்கையை வாழ வைத்துவிடும். இதனால் தோல்வியும்,ஏமாற்றம் உள்ள வாழ்வில் வாழ நேரிடும்.

நாம் ஏன் நேர்மறையாளராக இருக்கவேண்டும்?

வாழ்வில் ஜெயித்துக் கொண்டே இருப்பதற்கும்,புதிய சக்திகளை பெற்றுத் தருவதற்கும் நாம் நேர்மறையாளராக இருக்கவேண்டும். நேர்மறை எண்ண அலைகள் எப்பொழுது நம்மைச்சுற்றி இருந்துகொண்டே இருக்கும். இதனால் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியும்,உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கிறது.

நேர்மறையாளராக இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

நேர்மறை எண்ண அலைகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அதனால் அவர்களுக்கும் நன்மையே கிடைக்கிறது.

நேர்மறையின் காரணி:

மகிழ்ச்சியுடன் வாழ்வதே மானிடக் குறிக்கோள். மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்று புரிந்து கொண்டாலே போதும் நாம் அக்கணமே ஒரு நேர்மறையாளராக மாறிவிடுவோம்.

எதிர்மறைச் சிந்தனை,எண்ணங்கள்,இவற்றைக் கொண்ட மனிதர்கள் இவர்களிடம் இருந்து விலகி இருப்பது முதல் வெற்றி. நம்முடைய ஒவ்வொரு நாளின் செயல்களையும் நமது நல்ல,நேர்மறை எண்ணங்களே தீர்மானிக்கவேண்டும்,ஏனென்றால் இது நம் வாழ்க்கை.

ஒவ்வொரு நாளும் ஜெயிப்பது எப்படி?

கீழே காணும் சில வாழ்க்கை நடைமுறைகளை நாம் தினமும் பின்பற்றினாலே போதும்.

சுய புரிந்துணர்தல் என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்து இருக்கும் ஒரு அபிரிமிதமான நேர்மறை எண்ணங்களே.

1.என்னால் எல்லாம் முடியும். எதையும் சாதிக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது.

  1. இந்த நாள் நன்னாள்,நல்லது நடக்கப்போகிறது.தினமும் ஒரு குறிப்பேட்டில் மனவலிமையைக் கூட்டும் உங்கள் குணாதிசயங்களை எழுதுங்கள்.தினமும் அதிகரித்து வரும் உங்கள் நன்னடத்தையும்,ஆற்றலையும் எழுதுங்கள்
  2. தியானம் செய்யுங்கள். மன அமைதியே மனஅழுத்தத்தைக் குறைக்கும்.மன அழுத்தம் குறைந்தால் நேர்மறை எண்ணங்கள் தானாக வளரும்.
  3. ஒரு நாளில் நீங்கள் செய்யும் 5 நிமிட தியானம் அன்றைய தினம் முழுவது உங்களை உற்சாகத்துடனும்,நேர்மறையாளராகவும் திகழ வைக்கும்.

5.உங்கள் எதிர்காலத் திட்டங்களை குறிப்பெடுங்கள். தினமும் அதை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பதிவு செய்யுங்கள்.

நேர்மறை எண்ணங்களே மனித சமுதாயத்தினை முன்னெடுத்துச் செல்லும் என்பதில் உறுதியாக இருந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ tamilfitnessmotivation.com வாழ்த்துகிறது.

 

 

 

இந்த நாள் இனிய நாளாகட்டும் எனது அருமை ஃபிட்னெஸ் நண்பர்களே….!

முதலில் என்னைப்பற்றி நான் அறிமுகம் செய்துகொள்கிறேன். நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் பாடி பில்டரோ இல்லை இதைச் செய்,அதைச் செய்யாதே என்று சொல்லும் உடற்பயிற்சி ஆசிரியரோ கிடையாது.

உங்கள் உடம்பை எப்படி எளிதான உடற்பயிற்சிகளால் கச்சிதமாக வைத்துக்கொள்வது என்பது பற்றியும், எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வது என்பது பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு சமூக ஆர்வலன்.

நான் ஜெர்மனியில் வசிக்கும் ஒரு பகுதி நேர சாக்கர் விளையாட்டு வீரன். நான் English and German League போட்டியில் சாக்கர் விளையாடி உள்ளேன். மேலும் வாழ்வில் அடிமட்டத்திலிருந்து மிக உயர்ந்த நிலைக்குச் சென்ற நிறைய மனிதர்களைச் சந்தித்து உள்ளேன்.

Bundesliga and Championship Teams க்கு பயிற்சி கொடுத்த திறமை வாய்ந்த கோச்கள் (Coaches) மூலமே எனக்கு இந்த உடற்பயிற்சிகள் பற்றிய முழு அறிவும்,பயிற்சியும் கிடைத்தது.

ஒரு விடயம் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்…

இதை உன்னால் செய்ய முடியாது என்று சொல்லும் ஒரு எதிர்மறை சிந்தனையாளாரை ஒரு போதும் உங்களை நெருங்கவிடாதீர்கள்.

நீங்கள் எங்கே இருக்கக்கூடாது என்று நினைகிறீர்களோ அங்கே தான் உங்களை சந்திக்க விரும்புகிறது இப்போதுள்ள சமுதாயச் சூழல்.

இது உங்கள் வாழ்க்கை. நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை ஒரு நேர்மறையாளனாக நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு மாற்றத்தினை உருவாக்குவோம் வாருங்கள். அது உங்களால் தான் முடியும்.

துஷான் குணபாலசிங்கம் (Thushaan Kunabalasingam)