டது கை செயலாற்றல் தவறல்ல!

ச.நாகராஜன்

1996ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வலது கை உலகத்தில் தங்களுக்கும் ஒரு இடம் கேட்பவர்களின் நாள் இது!

–       ஒரு செய்தித் துணுக்கு

 ப்ளேடோ, சார்லஸ் டார்வின், கார்ல் சகன், டாம் க்ரூஸ், லியானார்டோ டாவின்ஸி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் ஃப்fராங்க்ளின், மைக்கேல் ஏஞ்சலோ, ஜூலியா ராபர்ட்ஸ், மர்லின் மன்ரோ பெடரல் காஸ்ட்ரோ, ஹெச்.ஜி.வெல்ஸ், மொஜார்ட் பீத்தோவன் – இவர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு அபூர்வ ஒற்றுமை உள்ளது. என்ன தெரியுமா? இவர்கள் அனைவரும் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்!

உலகில் உள்ள ஜனத்தொகையில் பத்து முதல் பன்னிரெண்டு சதவிகிதம் பேர் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் மிகவும் மனச்சோர்வுடன் வலது கை உலகில் வாழ்ந்து வருகின்றனர். தொன்று தொட்டு இடது கையால் செயலாற்றுபவர்களை உலகம் ஒரு மாதிரியாகப் பார்க்கிறது. பைபிளை எடுத்துக் கொண்டால் வலது கையை தெய்வீகத்துடன் இணைக்கும் பல வரிகள் வருகின்றன. ஹிந்து நாகரிகத்திலோ வலது கையால் தான் எதையும் வாங்க வேண்டும், வலது காலை எடுத்து வைத்துத் தான் புது மனை புக வேண்டும் என்பது போல வலது பக்கத்திற்கு முக்கியத்துவம் உண்டு.

’லெஃப்ட்; என்ற ஆங்கில வார்த்தையே ஆங்க்லோ-சாக்ஸன் மூலமான லிப்ட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு பலஹீனமான, அல்லது உடைந்த என்று பொருள். ஆக்ஸ்போர்ட் அகராதியோ லெப்ட் ஹாண்டட்னெஸ் என்பதற்கு ஒழுங்கில்லாத, மோசமான, சந்தேகமான, கேள்விக்குறிய, ஊனமான என்றெல்லாம் அர்த்தங்களை வாரி வழங்குகிறது.லெப்ட்-ஹாண்டட் ஹனிமூன் என்றால் ஒரு பெண் இன்னொருத்தி புருஷனுடன் செல்லும் தேநிலவு என்ற அர்த்தத்தைக் குறிக்கும்.

ஆனால் இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆறுதலான ஒரு செய்தி உலகில் 140க்கும் மேலான ஐ.க்யூவை – நுண்ணறிவு எண்ணைக் கொண்டவர்கள் பெரும்பாலும் இடது கைப்பழக்கம் உள்ளவர்களே.

சிலர் மட்டும் இடது கையால் அனைத்தையும் ஏன் செய்கின்றனர் என்பதை முதன் முதலாக ஆராய்ந்த விஞ்ஞானிகளுள் குறிப்பிடத் தகுந்தவர் பால் ப்ரோகா என்பவர். 1861 ஆம் ஆண்டில் விசித்திரமான இரண்டு நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்தார்.லெபோர்க்னே என்ற பெயருடைய நோயாளிக்கு டான் என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உச்சரிக்க வரும். அனைவர் பேசுவதையும் அவர் புரிந்து கொண்டாலும் தனது எண்ணங்களை அவர் பேச்சு மூலம் வெளிப்படுத்த முடியாமல் இருந்தது. அவரது உடலில் வலது பக்கம் நாளுக்கு நாள் பலமிழந்து வந்தது. 51ஆம் வயதில் அவர் இறந்த போது அவரது மூளையை எடுத்து பால் ப்ரோகோ ஆராய்ந்தார். அப்போது அவரது மூளையின் இடது பக்க கோளத்தில் ப்ரண்டல் கார்டெக்ஸ் பகுதி சேதமடைந்திருந்ததைப் பார்த்தார். இதே போலவே லெலாங் என்ற நோயாளியாலும் சில வார்த்தைகளே பேச முடிந்தது. அவர் இறந்த பின்னர் அவர் மூளையையும் ஆராய்ந்த போது அவரது மூளையிலும் இடது பக்கம் சேதமடைந்ததைக் கண்டார்.ஆகவே உடலின் வலது பக்கத்தை இடது பக்க மூளையும் இடது பக்கத்தை வலது பக்க மூளையும் கட்டுப் படுத்துகிறது என்ற பொதுவான ஒரு உண்மையை அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. பேச்சாற்றலுக்கு உரிய மூளைப் பகுதி எது என்பதையும் அவரால் உணர முடிந்தது. ஆனால் இடது கை செயலாற்றல் உடையவர்களுக்கு அவர்களது மூளையின் வலப்பக்கத்திலேயே பேச்சாற்றலுக்கான பகுதி அமைந்துள்ளது என்ற அவரது வாதம் பின்னால் முதல் உலகப்போரில் காயம் அடைந்த ஏராளமான ராணுவ வீர்ர்கள் மீது நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டது. இடது கையால் ஒருவர் ஏன் எழுதுகிறார் என்பதற்குப் பல காரணங்களை விஞ்ஞானிகள் கூறினாலும் கூட அவை அனைத்தும் பின்னால் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளன. மரபணுவே இதற்குக் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர்.

பழைய காலத்தில் போர்களில் இடது கையால் போர் புரிந்த அனைவருமே எதிரெதிரே ஒருவருக்கொருவர் போர் புரிய நேரிட்ட போது அவர்கள் வாளை இடது கையிலும் கேடயத்தை வலது கையிலும் பிடித்திருந்ததால் அவர்களின் இதயப் பகுதியைச் சரியாகப் பாதுகாக்க முடியாத காரணத்தினால் இறந்துபட்டனர்.ஆனால் இதே பழக்கம் டென்னிஸ் வீர்ர்கள்,குத்துச் சண்டை வீர்ர்கள் ஆகியோருக்கு ஒரு பெரிய வரபிரசாதமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இதையெல்லாம் ஆராய்ந்து ஒரு புத்தகத்தையே எழுதி விட்டார் டேவிட் வோல்மென் என்பவர். ‘எ லெப்ட் ஹாண்ட் டர்ன் அரவுண்ட் தி வோர்ல்ட்’ என்ற புத்தகத்தில் சுவையான பெரும் வரலாறையே அவர் தந்து விடுகிறார். ஐன்ஸ்டீனைப் பற்றி அவர் கூறும் போது ஐன்ஸ்டீனைப் பலரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகச் சித்தரிக்கின்றனர்.அது தவறு. அவர் இரண்டு கைகளையும் சரியாகப் பயன்படுத்திய மேதை என்கிறார்.

இடது கை செயலாற்றல் பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாகத் தொடர்கின்றன. இடது கையால் செயலாற்றுகிறோமே என யாரும் கவலைப்பட வேண்டாம் என்ற செய்தியே அறிவியல் தரும் முத்தாய்ப்பான செய்தி

Pic Source : http://leftyfretz.com/wp-content/uploads/2014/08/facts-about-left-handed-people.jpg

*****

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 3                   ச.நாகராஜன்

15) சிக்கன் சூப் சாப்பிடுவதால் எல்லா வியாதிகளும் குணமாகி விடும்!
துரதிர்ஷ்டவசமாக இதற்கு இல்லை என்ற பதிலையே தர வேண்டியிருக்கிறது. ஆனால் சில ஆய்வுகள் சிக்கன் நூடில் சூப் ஒரு மாற்று மருந்து போல மனதில் ஒரு பிரமையை உண்டாக்கும் என்று தெரிவிக்கின்றன. அதாவது நீங்களே அதைச் சாப்பிட்டதால் குணமடைந்தது போல உணர்வீர்கள். ஆகவே ஒரு நல்ல குணமடைந்தது போன்ற உணர்வைப் பெற வேண்டுமென்றால் மட்டுமே அதைச் சாப்பிடலாம்!
16) விடுமுறை நாட்களில் தற்கொலைகள் அதிகமாகிறது
டிசம்பர் விடுமுறை தினங்களில் வழக்கமாகப் பரப்பப்படும் வதந்தி இது.ஆனால் இது உண்மையில்லை. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் விடுமுறை தினங்கள் அதிகமுள்ள டிசம்பர் மாதம் தான் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. இதை அந்த நாட்டின் நேஷனல் செண்டர் ஃபார் ஹெல்த் ஸ்டாடிஸ்டிக்ஸ் தெரிவிக்கிறது.

இந்த வதந்தி பரவுவதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் மீடியாக்கள் சௌகரியமாக டிசம்பர் மாதம் இந்த மாதிரி செய்திகளை அதிகமாக ஒலிபரப்புவதால் தான் என்பது தெரிய வருகிறது.

17) இரவில் சாப்பிடுவதால் குண்டாகி விடுவீர்கள்!
இரவு நேரங்களில் ஃபிரிட்ஜைத் திறந்து எதையாவது சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் ஏராளம். நள்ளிரவில் ஒரு ஸ்நாக்கைச் சாப்பிடுவதால் குண்டாகி விடுவீர்கள் என்பது ஒரு பொய்யான தகவலே. இந்த இரவு நேரச் சாப்பாட்டுப் பழக்கத்திற்கும் குண்டாவதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை

18) பௌர்ணமி அன்று மனக்கோளாறு சிகிச்சை நிலையங்களுக்கும் எமர்ஜென்ஸி அறைகளுக்கும் அதிகம் பேர் வருகின்றனர்!
பௌர்ணமி இரவு பற்றிய ஏராளமான பொய்யான தகவல்களில் இதுவும் ஒன்று. தொன்றுதொட்டு இருந்து வரும் தகவல் இது. பௌர்ணமி வர வர பைத்தியம் பிடித்தோரின் செய்கைகள் அதிகமாகும் என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒன்று தான்.

2005ஆம் ஆண்டு மாயோ கிளினிக்கில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பௌர்ணமி இரவு அன்று மாலை ஆறு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை எமர்ஜென்ஸி அறைகளில் எத்தனை நோயாளிகள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற எண்ணிக்கை எடுக்கப்பட்டது. ஆய்வின் படி சாதாரண நாட்களில் வருபவர்களின் எண்ணிக்கைக்கும் பௌர்ணமி அன்று வருகை புரிவோரின் எண்ணிக்கைக்கும் எந்த விதப் பெரிய மாற்றமும் இல்லை. 1996இல் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் 150,999 பதிவேடுகளை ஆராய்ந்தனர். அதிலும் கூட எந்த வித பெரிய மாறுதலும் தெரியவில்லை. ஆகவே இந்தக் கூற்று தவறானது தான்!

19) ப்ரோ பயாடிக்ஸ் எடுத்துக் கொள்வதால் ஜலதோஷம் நிவாரணமடைகிறது
நிச்சயமாக ப்ரோபயாடிக்ஸ் உங்களை நோயாளி ஆக்காது. அதே சமயம் ஜலதோஷத்தை குணமாக்கவும் செய்யாது. டாக்டர் பாட்ரிசியா ஹிப்பெர்ட் என்பவர் பீடியாட்ரிக்ஸ் பேராசிரியை. அவர் உறுதி படத் தெரிவிக்கும் செய்தி இது. ப்ரோபயாடிக்ஸ் ஜலதோஷத்தை வரவிடாமல் செய்யலாமே தவிர அதற்கான நிவாரணமாக் அமையாது என்று பல உயர்தர ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
20) பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஜுரம் வரும்.
ஒவ்வொரு பெற்றோரும் தவறாமல் கேட்கும் தவறான தகவல் இது. இந்த மருத்துவத் தகவல் பொய்யானது. அபாயகரமானதும் கூட. பெற்றோர்கள் பல் முளைக்கும் போது குழந்தைக்கு ஜுரம் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கிறார் வ்ரீமென். ஆய்வுகள் பல் முளைப்பதற்கும் ஜுரத்திற்கும் எந்த வித ஒரு சம்பந்தத்தையும் இது வரை தெரிவிக்கவில்லை. ஆகவே பல் முளைக்கும் போது வரும் ஜுரம் அதனால் தான் ஏற்படுகிறது என்ற எண்ணத்தை பெற்றோர்கள் விட்டு விட வேண்டும். ஜுரத்தை அலட்சியப்படுத்தாமல் உடனே தகுந்த டாக்டரை நாட வேண்டும்.

இப்படி ஏராளமான பொய்யான தகவல்களின் இடையே தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதன் தவறான தாக்கத்திற்கு இலக்காகி விடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இத்துடன் இந்தத் தொடர் முற்றும்.

Pic Source: http://higginsenglish.com/wp-content/uploads/2016/02/myths-facts.jpg

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 2  ச.நாகராஜன்

7) நீங்கள் சாப்பிடும் சூயிங் கம் உங்கள் வயிற்றில் ஏழு வருடங்கள் தங்கி இருக்கும்.

சூயிங் கம்மில் இருக்கும் எலாஸ்டமர்கள், ரெசின்கள், வேக்ஸ் போன்ற  இடு பொருள்கள் ஜீரணிக்க முடியாதவையே. ஆனால் அதற்கு அவை ஏழு வருடங்கள் உங்கள் வயிற்றில் தங்கி இருக்கும் என்று அர்த்தமில்லை. அனைவராலும் பரிந்துரைக்கப்ப்டும்  பைபர் உள்ளிட்ட உணவு வகைகளும் கூட ஜீரணிக்க முடியாதவையே. ஆனால் ஜீரண அமைப்பானது வலிமை வாய்ந்த ஒன்று.  உட்கிரகிக்க முடியாதது என்று ஒன்று இருந்தாலும் கூட் அது தொடர்ந்து தன் வேலையைச் செய்யத்தான் செய்யும். சூயிங்கம்மின் ஒட்டுப் பசை போன்ற விசித்திரமான  இயல்பு பற்றிக் கவலைப்பட வேண்டாம்.. அது ஜீரணப் பாதை வழியே சென்று நேராக டாய்லட்டைத் தான் அடையும்.

8) இருட்டில் படித்தாலோ அல்லது டிவியின் அருகில் இருந்து பார்த்தாலோ உங்கள் பார்வை பழுதுபடும்.

மங்கிய வெளிச்சத்தில் பார்ப்பதோ அல்லது பலவண்ணம் கொண்ட டிவி டியூபை அருகிலிருந்து  பார்ப்பதோ நிச்சயமாக உங்கள் கண்களை அதிகம் உழைக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.ஆனால் அது நீண்டகால சேதத்தை விளைவிக்கும் என்பதற்கு இது வரை ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் இது ஒருவேளை உணமையாய் இருந்திருக்கக் கூடும் ஏனெனில் அப்போது சில டிவி பெட்டிகள் அதிக கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையனவாக தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு பல காலம் ஆகிறது. இன்றைய டிவி பெட்டிகளும் கம்ப்யூட்டர்களும் பாதுகாப்பானவையே.

உங்கள் குழந்தைகள் டிவி அல்லது கம்ப்யூட்டரின் அருகில் இருந்து பார்த்தால், அது அவர்களின் கண்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகத் தோன்றினால் ஒரு டாக்டரிடம் சென்று கண் பார்வையைப் பரிசோதிப்பது நல்லது. தான். என்றாலும் கூட டிவி அருகிலிருந்து பார்ப்பது கண்ணாடி அணியும் தேவையை உருவாக்காது..

9) ஒரு நாளைக்கு நீங்கள் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

பொதுவாகப் பார்த்தால் உடலில் நீர்ச்சத்தே இல்லாமல் நாம் நடப்பதில்லை. அத்துடன் நமது உடல் பொதுவாகவே தனது திரவத்தின் அளவை சீராக்கிக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது 1945ஆம் ஆண்டு கிளப்பி விடப்பட்ட ஒரு தகவல். நேஷனல் ரிஸர்ச் கவுன்ஸிலைச் சேர்ந்த  ‘ஃபுட் அண்ட் நியூட்ரிஷன் போர்ட்; என்ற அமைப்பானது  வயதுக்கு வந்தவர்கள் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் நீர் அருந்த வேண்டும்(எட்டு டம்ளர் நீருக்குச் சமம்) என்று தெரிவித்தது. ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் அனைத்து ஊடகங்களும் இந்த வரியுடன் நிறுத்திக் கொண்டது. அடுத்த வரியைக் கவனிக்கவே இல்லை. அடுத்த வரியில் அது, இந்த இரண்டரை லிட்டர் நீரும் உங்களுக்கு உங்கள் உணவிலிருந்தே கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது.

ஆகவே இப்போது இந்த வரி இப்படி திருத்தப்பட வேண்டும். எட்டு டம்ளர் தண்ணீரை ஒரு நாளைக்கு குடியுங்கள் அல்லது அந்த அளவு நீரைத் தரும் உணவைச் சாப்பிடுங்கள்!

10) சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்துத் தான் நீச்சல் அடிக்கச் செல்ல வேண்டும்

இந்தத் தவறான தகவல் ஏராளமானோரின் பொன்னான மணி நேரங்களை வீணாக்கியது தான் மிச்சம். சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்துத் தான் நீச்சலுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்வதற்கான ஒரு காரணமும் உண்மையில் இல்லை. ஒரு பிரமாதமான விருந்திற்குப் பின்னர் எந்த விதமான உடல் ப்யிற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்பது பொதுவான உண்மை  தான்.   ஆனால் அப்படிப்பட்ட விருந்தை தினமும் ஒருவர் சாப்பிடுவதில்லை.

தினமும் சாதாரண உணவு வகைகளைத் தான் சாப்பிடுகிறோம். இன்னொன்று, விருந்தோ சாதாரண சாப்பாடோ அதிக வேகமாகப் பாயும் நீர் எப்போதுமே ஒருவருக்கு ஆபத்துத் தான்!அப்படிப்பட்ட நீரை விட்டுப் பாதுகாப்பான இடத்திற்குத் தான் நீங்கள் நீந்தச் செல்ல வேண்டும்.

11) இறந்த பிறகும் கூட விரல் நகங்களும் முடியும் வளரும்

இந்தத் தவறான தகவல் பல வருடங்களாக இயற்பியல் நிபுணர்கள் மறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. இதை அவர்களால் காரணத்துடன் மறுக்கவும் முடியவில்லை. இப்போது சரியான தகவல் தெரிய வருகிறது. இறந்த பின்னர் உடலில் உள்ள தோல் வறள ஆரம்பிக்கிறது.மெலிதான திசுக்கள் பின்னடைவு அடைகிறது. தோல் வறளும் போது நகங்கள் பார்ப்பதற்குத் தெளிவாகவும் பிரதானமாகவும் இருக்கிறது. இதுவே தான் முடி வளர்வது போலத் தோன்றுவதற்கும் காரணமாக ஆகிறது. தோல் சுருங்க ஆரம்பிக்கவே முடி மிகவும் பிரதானமாக ஆகிறது.வளர்வது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவிக்கிறது!

12) ஷேவ் செய்யப்பட்டவுடன் முடி வேகமாகவும், சொர சொரப்பாகவும், கறுப்பாகவும் ஆகிறது

இந்த தகவல் தவறு என்பதை நீங்களே உங்கள் முடியின் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அறிய முடியும். புதிய முடி வளரும் போது அதன் நுனி மழுங்கி இருக்கும். நாட்பட நாட்பட, அது நலிந்து மெலிதானது போலத் தோன்றும். அது சரி, அது ஏன் கறுப்பாகக் காணப்பட வேண்டும். மற்ற இடங்களைப் போல சூரிய வெளிச்சத்தால்  ப்ளீச் செய்யப்படாததால் தான்!

இது சம்பந்தமாக ஒரு ஆய்வு கூட இருக்கிறது. 1928இல் நடந்தது இது. ஷேவ் செய்த போதும் ஷேவ் செய்யப்படாத போதும் உள்ள முடி வளர்ச்சி பற்றி செய்யப்பட்ட ஆய்வில்  அது கறுப்பாகவும் இல்லை, சற்று கனமாகவும் இல்லை, அது வேகமாகவும் வளரவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது! சமீப காலத்திய ஆய்வுகளும் கூட இதை நிரூபிக்கின்றன.

12) காரமான உணவு வகைகள் மற்றும் மன அழுத்தம் அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணை உருவாக்குகின்றன

இரவு சாப்பிட்ட கார உணவு தான் வயிற்றுப்புண்ணை உருவாக்கி விட்டது என்று மறுநாள் காலையில் எண்ணினால் அது தவறு. ஒரு காலத்தில் டாக்டர்கள் மன அழுத்தம், வாழ்க்கை முறை மற்றும் கார வகை உணவுகளே அல்சருக்கு காரணம் என்று நம்பினர். ஆனால் இப்போதோ அல்சருக்கு காரணம் Helicobacter pylon  என்ற பாக்டீரியா என்பதைத் தெரிந்து கொண்டனர்.

வயிறில் சிறு குடலில் ஏற்படும்  புண்கள் சில சமயம் சில மருந்துகளினால் கூட வருகின்றன.ஆஸ்பிரின் இரும்புச் சத்துக்கான அயர்ன் மாத்திரைகள் ஆகியவையே வயிற்றுப் புண் ஏற்பட முக்கிய காரணம் என்று டாக்டர் அருண் சுவாமிநாத் என்பவர் கண்டு பிடித்துள்ளார். இவர் நியூயார்க் நகரில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையில் இன்ஃப்ளேமெடரி பவல் டிசீஸ் திட்டத்திற்கான டைரக்டர் ஆவார்.

13)உங்கள் உடலில் உஷ்ணத்தின் பெரும் பகுதி தலை வழியே செல்கிறது.

இந்தத் தகவல் தவறானது என்று 2006ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. மனித உடலில் உள்ள மொத்த உஷ்ணத்தில் தலை வழியே செல்லும் உஷ்ணமானது 7 முதல் 10 சதவிகிதம் அளவே என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது  தலையின் வழியே செல்லும் உஷ்ணமானது மொத்த உடலில் உள்ள தோல் பரப்பில் தலையில் உள்ள தோல்பரப்பின் விகிதாசார அளவிலேயே இருக்கிறது!

14) குளிரில் ஈரத் தலையுடன் வெளியில் சென்றால் ஜலதோஷம் பிடிப்பது நிச்சயம்

குளிர் காலத்தில் தலையை உலர்த்த நேரமில்லை என்று ஈரத் தலையுடன் வெளியில் செல்கிறீர்கள்,! ஜலதோஷம் வந்து விடும் என்று கவலைப் பட வேண்டாம்.

எல்லோரும் ஈரத் தலை ஜலதோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். ஆனால் நிபுணர்களின் கருத்துப் படி வைரஸ் மற்றும் பாக்டீரியா தான் ஜலதோஷத்தைத் தருகின்றனவே தவிர காலநிலையில் உள்ள உஷ்ண நிலை மாறுபாடு அல்ல. ஆகவே தலை சிறிது ஈரமாக இருந்தாலும் கூட ஜலதோஷம் வந்து விடுமோ என்று கவலைப்படுவதை இனி விட்டு விடலாம்.

(அடுத்த வாரம் முடியும்)

Pic Source : http://www.angelo.edu/content/image/gid/228/width/600/height/268/18059_mythfact2.jpg

. *************

 

 

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 1               ச.நாகராஜன்

திருப்பித் திருப்பிச் சொல்லப்பட்டிருப்பதால் நாம் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ள சில தகவல்கள் உண்மையில் தவறுதலான தகவல்களே!இதை மருத்துவ அறிஞர்கள் விளக்குகின்ற்னர்.சில தகவல்களின் இன்றைய உண்மையான நிலையை அறிந்து கொண்டால் பயப்படாமல் வாழலாம்; பிறரை பயமுறுத்தாமலும் வாழலாம்!

1) தடுப்பூசி பற்றிய தவறான தகவல்

தடுப்பூசி போட்டுக் கொள்வது ஃப்ளூவை உண்டாக்கும் என்பது தவறான தகவல் என்பது ராக்கேல் வ்ரீமேன் தரும் உண்மைச் செய்தி!‘அரைகுறை உண்மைகளை நம்பாதீர்கள்’ என்ற நூலை இன்னொருவருடன்  இணைந்துஎழுதியுள்ளார் டாக்டர் ராக்கேல் வ்ரீமேன் (Don’t Swallow your Gum! Myths, Half Truths and outright lies about your Body and Health, Dr Rachel Vreeman , Co-author of the book.) தடுப்பூசி ஆடிஸம் என்ற வியாதியையும் உருவாக்கும் என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. அதுவும் தவறு தான் என்கிறார் இவர்.எட்டுக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் தான், அவர்களுக்கு ஆடிஸம் எனப்படும் மனச்சிதைவு நோய் உருவானது என்று கூறியுள்ளனர்.

இதனால் ஏகப்பட்ட் வதந்திகள் பரவலாயின. ஆனால் 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய ஆய்வில் இது உண்மை இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ஆய்வுக்காக 530000 பேர்கள் ஆமாம் ஐந்து லட்சத்து முப்பதினாயிரம் குழந்தைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். தடுப்பூசிக்கும் மனச்சிதைவு நோய்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது இந்த ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வதந்தி வதந்தி தானே! விடாமல் பரவுகிறது!!

2) விட்டமின் துணை உணவு  பற்றிய தவறான தகவல்

விட்டமின் துணை உணவுகள் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது தவறான தகவல். இதை நம்பவே கூடாது. இது பொய் என்பது ஒரு புறமிருக்க உண்மையில் இந்த துணை உணவுகள் உண்மையில் மகா ஆபத்தானவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.ஒரு பிரம்மாண்டமான ஆய்வு 25 வருடங்களாக நடத்தப்பட்டு வந்தது.2015ஆம் ஆண்டில் ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதிகமாக விடமின்களை சாப்பிடுவது சில சமயம் கான்ஸரில் கொண்டு போய் விட்டு விடும்! நான்கு வயது பையன் ஒருவன் இப்படி விடமின்களைச் சாப்பிட்டதால் விடமின் டி நச்சுநோய்க்கு ஆளானான்.இதற்குப் பதிலாக விடமின்கள் உள்ள நல்ல உணவைச் சாப்பிடுவதே நலம் என்கின்றனர் மருத்துவர்கள்!

3) குளிர்கால பருவநிலை பற்றிய தவறான நம்பிக்கை:

குளிர்கால பருவநிலை உங்களுக்கு நோயைக் கொடுத்து விடும் என்பது தவறான நம்பிக்கை!வ்ரீமேன் லைவ் சயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வெறும் குளிரானது குளிரைத் தருவது உண்மை தான் என்றாலும் இப்படிப்பட்ட உஷ்ணநிலை மட்டும் வைரஸ் தாக்குதலைத் தந்து விட முடியாது என்கிறார்.தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திரிகை இதை விரிவாக வெளியிட்டுள்ளது.ஒரு இதமான உஷ்ணநிலையில், குளிர் கிருமிகளைத் தும்மும் போது ஏற்படும் நோயை விட, நிச்சயமாக ஐஸ் பாத் எடுப்பதாலோ அல்லது குளிர் அறையில் நடுங்குவதாலோ நோய் வர வாய்ப்பில்லை என்பது தான் உண்மை!

ஆனாலும் கூட குளிரான சூழ்நிலை விஷக்கிருமிகளை எப்படித் தாக்குகிறது என்பது தெரியவில்லை.சில விஞ்ஞானிகள் குளிர் காலத்தில் எல்லோரும் வீட்டில் அதிக நேரம் இருப்பதாலும் ஒருவருட்ன் ஒருவர் அதிகமாக ஊடாடுவதாலுமே கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர் என்கின்றனர்!

4) மூளைத் திறனைப் பயன்படுத்துதல் பற்றிய தவறான தகவல்

பல ஆண்டுகளாகத் திருப்பித் திருப்பிச் சொல்லப்படும் ஒரு தகவல் நாம் நமது மூளைத் திறனில் பத்து சதவிகிதமே உபயோகப்படுத்துகிறோம் என்பது!தன்னம்பிக்கை ஊட்டும் மோடிவேஷனல் பேச்சாளர்களுக்கு இப்படிப் பேச்சை ஆரம்பிப்பது ஒரு வழக்கமான ஆரம்பம். 1907இலிருந்தே இவர்கள் உங்கள்  மூளையில் பத்து சதவிகிதமே நீங்கள் பயனப்டுத்துகிறீர்கள் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் இது உண்மை இல்லை.

வ்ரீமேனும் இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆரான் கரோலியும் ஒரு புத்தகத்தையே இப்படிப்பட்ட மூட நம்பிக்கையைப் போக்க எழுத வேண்டியதாயிற்று!.இன்று மூளையை ஸ்கேன் செய்து அதன் இயக்கத்தை எந்த ஒரு நேரத்திலும் பார்க்கும் விஞ்ஞானிகள் இந்தத் தவறான த்கவலை நினைத்துச் சிரிக்கின்றனர்!இது ஜனரஞ்சகமான உணமை, அவ்வளவு தான்! நாம் நமது மூளையின் முழுத் திறனை எட்டவில்லை என்று நம்பும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் பரப்பப்படும் தகவ்ல் இது என்கிறார் வ்ரீமேன்!

5) இனிப்பு எனர்ஜியை அதிகமாக்கி பிரச்சினை தரும் என்பது பற்றிய தவறான தகவல்

ஜீனி அல்லது இனிப்பைச் சாப்பிடும் குழந்தைகள் ‘லிட்டில் பிசாசுகளாக’ மாறிக் கொண்டாட்டம் போடுகின்றனர் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கையாக இருக்கிறது.கூல் எய்ட் என்ற சர்க்கரை இனிப்பில்லாத ஒரு மருந்தை குழந்தைகளுக்குக் கொடுத்தனர் ஆய்வாளர்கள். ஆனால் அதில் இனிப்பில்லை என்ற தகவல் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை.பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் இனிப்பைச் சாப்பிட்டதால் அதிக எனர்ஜியுடன் ஓவர்-ஆக்டிவ் ஆக இருப்பதாகப் புகார் செய்தனர்!

1994இல் ஜர்னல் ஆஃப் அப்நார்மல் சைல்ட் சைக்காலஜி என்ற பத்திரிகையில் இந்த வேடிக்கையான ஆராய்ச்சியின் முழு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

6) தலையில் அடிபட்டு விட்டால் அது மிகவும் ஆபத்து என்ற நம்பிக்கை

தலையில் அடிபட்ட ஒருவர் சுயநினைவுடன் இருக்க வைக்கப்பட வேண்டும் பொதுவாக அனைவரிடமும் உள்ள ஒரு நம்பிக்கை.தலையில் அடிபட்டுவிட்டால் உடனடியாக மருத்துவ உதவி தேவை என்பது சரி தான்! ஆனால் இது உடனடியாக உயிரைப் பறித்து விடும் என்பது தவறு! ஒரு குறிப்பிட்ட விதமான விதத்தில் தலையில் பட்ட அடியை வைத்துக் கொண்டு பொதுவாக இந்த நம்பிக்கையைப் பரப்பி விடுகிறார்கள் அனைவரும்!எந்த ஒரு அடியானது மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறதோ அது தான் ஆபத்தான ஒன்று!இவர்களுக்கு ல்யூசிட் பீரியட் (Lucid Period) என்பதைத் தொடர்ந்து கோமா நிலையோ அல்லது சில சமயம் மரணமோ சம்பவிக்கும். ஆனால் இது மிகவும் அசாதாரணமான ஒன்று. சாதாரணமாக இது எளிதில் சம்பவிக்காது. என்கிறார் வ்ரீமேன்.

டாக்டரைப் பார்த்துவிட்டு அவர் இது சாதாரணமான அடி தான் என்று சொல்லி விட்டால் கவலைப்பட ஏதுமில்லை என்பது வ்ரீமேனின் ஆறுதலான செய்தி!

–        இன்னும் சில தவறுதலான நம்பிக்கைகள் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்!

Pic Source : http://iuhealth.org/images/blog-main/myth_vs_fact.jpg

*************

நூறு ஆண்டுகள் வாழ நூறு ஆண்டுகள் வாழ்ந்தோர் கூறும் ஆலோசனை!  ச.நாகராஜன்

 “கிழக்கில் பரிசுத்தமாக உதிக்கும் சூரியனை நூறாண்டு கண்டு வணங்குவோம். நூறாண்டு வாழ்வோம். நூறாண்டு உறவினருடன் கூடிக் குலவுவோம். நூறாண்டு மகிழ்வோம். நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம். நூறாண்டு இனியனவற்றையே கேட்போம். நாறாண்டு இனியனவற்றையே பேசுவோம். நூறாண்டு தீமைகளால் ஜெயிக்கப்படாதவர்களாக வாழ்வோம்”

                                                – வேத பிரார்த்தனை

நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக செயலூக்கத்துடன் வாழ ஆசைப்படாதவர் யாருமே இருக்க முடியாது. இன்றைய நவீன காலத்தில் முப்பது வயதிலேயே மாரடைப்பு, கான்ஸர், எய்ட்ஸ் போன்ற வியாதிகளால் அவஸ்தைப் படுவோர் பெருகி வரும் வேளையில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட புதுப் புது வியாதிகள் வேறு வந்து பயமுறுத்துகின்றன.   டீயன்னா கெர்லி என்ற எழுத்தாளர் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்ட நூறு வயது அல்லது நூறு வயதை நெருங்கும் பெரியோர்கள் தரும் ‘செல்லமான’ அறிவுரைகளைத் தொகுத்துள்ளார். அவற்றில் சில:

ருத் என்ற பெண்மணி நூறு ஆண்டை எட்டிப் பிடிப்பவர். அவரது நீடித்த வாழ்நாள் இரகசியத்தை அறிய, ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டது.

அவர் தந்த டிப்ஸ்:-

1) காலண்டரை தினமும் பார்க்காதீர்கள்! ஒவ்வொரு நாளையும் நன்கு கொண்டாடி மகிழுங்கள்

2) எனது வீட்டைச் சுற்றியாவது தினசரி நடக்கிறேன். இயக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நடந்து கொண்டே இருங்கள். இயங்கிக் கொண்டே இருங்கள்!

3)தரமான எதிலும் முதலீடு செய்யுங்கள். அவற்றை எந்த புது ஸ்டைல் வந்தாலும் வெல்ல முடியாது.

என்பிசி தொலைக்காட்சி நூறு வயது ஆன டாக்டர் ஒருவரைப் பேட்டி கண்டது. அவர் தினசரி தனது க்ளினிக்கிற்கு வந்து நோயாளிகளை நன்கு பரிசோதித்து பிரிஸ்கிரிப்ஷன் தருகிறார். அவர் கூறும் அறிவுரை இதோ:-

1)வைட்டமின் மாத்திரைகளா? அவை வேண்டவே வேண்டாம். நிறைய டாக்டர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களா? அதையும் வேண்டாம் என்கிறேன் நான்!

2) திருமணம் செய்து கொள்ளுங்கள். செக்ஸ் உறவு இன்றியமையாதது. நலமுடன் ஜோடியாக வாழுங்கள்!

3) யாரையாவது வெறுத்தீர்கள் என்றாலும் கூட, அதை மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் மனம் புண்படும்படி வெளிப்படையாகப் பேசி விடாதீர்கள். அன்பு பாராட்டுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.

4) யாரையும் உங்களை கண்ட்ரோல் செய்வதை அனுமதிக்காதீர்கள்,

5) கொஞ்சம் அழுது மன ஆறுதல் பெறவும் நேரத்தை ஒதுக்குங்கள்.

6) இளமையாக இருக்கும் போதே நிறைய பயணம் செய்யுங்கள். பணம் செலவாகுமே என்று தயங்காதீர்கள். சமாளித்து பல இடங்களுக்குச் செல்லுங்கள். இதில் கிடைக்கும் அனுபவத்தை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது.

7) யாருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். இப்படி ஒப்பிட்டால் உங்களால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது. தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

8) ஒரு சமயத்தில் ஒரு வேலை என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்.

9) உங்களுக்குப் பிடித்தது எதுவோ அந்த வேலையைச் செய்யுங்கள்.

10) காலம் தனக்குத் தானே அனைத்தையும் சரி செய்து விடும். எதைப் பற்றியும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதீர்கள்.

11) உங்கள் மதம் எதுவானாலும் சரி, ஒன்றை மட்டும் சொல்வேன். நீங்கள் நம்புவதை மட்டும் விட்டு விடாதீர்கள்.

12) சூழ்நிலைக்குத் தக நெகிழ்வுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மன்னிக்கப் பழகுங்கள்.

13) ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டதா, இழந்ததற்கு துக்கப்படுங்கள். துக்கத்திற்கும் கூட நேரம் ஒதுக்குங்கள்.

அட்ரின் லீ என்ற நூறு ஆண்டு வயது நிரம்பிய பெரியவர் கூறும் ஆலோசனை இது:-

1)   படிப்படியாக முன்னேறுவதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.

2)   தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

3)   சுத்தமான நீரை அருந்துங்கள்.

4)   இறக்க வேண்டும் என்பதற்காக இறந்து விடாதீர்கள். வாழப் பழகுங்கள்,

வாழ்க்கை ஒரு வேடிக்கை தான். எப்படி வாழ்வது என்பது மனிதரைப் பொறுத்த ஒரு விஷயம். திருப்தியுடன் இருங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது முடியாத காரியம் என்றாலும் கூட திருப்தியுடன் இருப்பது முடியக்கூடிய ஒன்றே!

5)   எந்த ஒருவரிடமும் ஏதாவது ஒன்று நமக்குப் பிடிக்கத்தானே செய்யும்! நாம் எல்லாம் மனிதர்கள் தானே! ஆகவே அன்பு செலுத்துங்கள்.

வேறு சில பெரியோர்கள் கூறும் அறிவுரை:-

1)   நல்ல பெரிய படிப்பைப் படித்து விடுங்கள். அந்தக் கல்விச் செல்வத்தை உங்களிடமிருந்து யாரும் பிடுங்கி விட முடியாது. அதில் இழப்பே இல்லை.

2)   பாஸிடிவாக எண்ணப் பழகுங்கள். பாஸிடிவாக எதையும் நினைக்கும் போதே அனைத்துமே வெற்றிதான். நெகடிவாக எண்ண ஆரம்பிக்கும் போது உடலில் நச்சு கலக்கிறது. ஆகவே புன்னகை செய்யுங்கள். சிரித்துப் பழகுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து.

3)   வேளாவேளைக்கு உணவு உட்கொள்ளுங்கள். நல்ல காற்று, நல்ல சூரிய ஒளி இரண்டுமே நீண்ட நாள் வாழ அவசியம்.

எப்படி நூறு ஆண்டுகளை எட்டிப் பிடித்தோரின் அன்புரை! அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்! சதம் போட்டவர்கள் ஆயிற்றே!!

நன்றி: பாக்யா இதழ் ச.நாகராஜனின் அறிவியல் துளிகள் தொடர்

Pic Source : http://s1.ibtimes.com/sites/www.ibtimes.com/files/styles/embed/public/2011/10/03/167889-worlds-oldest-twins.jpg

மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! ச.நாகராஜன்

“மூளையைப் பயன்படுத்துவதால் மூளை ஆற்றல் கூடுகிறது. உடல் பயிற்சி செய்வதால் உடல் வலிமை கூடுவதைப் போல” – ஏ.என்.வில்ஸன்

இன்டர்நெட் மூலமாக சமீபத்தில் பரபரப்பாக அனைவரும் படிக்கும் ஒரு விஷயம் மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்ட முடியும் என்பது தான்!சக்தி வாய்ந்த ஒரு சிறு பயிற்சி மூலம் இந்த அரிய மூளை ஆற்றலைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுவதால் அனைவரின் கவனமும் இதன் மீது திரும்பியுள்ளது.

முதன்முதலக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிபிஎஸ் செய்தி அறிக்கை ஒன்று இதைக் கூறியதோடு இந்தப் பயிற்சி இப்படி ஒரு ஆற்றலைத் தருவது உண்மை தான் என யேல் நகரைச் சேர்ந்த மூளை இயல் நிபுணர் ஒருவர் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைவரும் கூறியுள்ளதையும் மேற்கோளாக எடுத்துக் காட்டியது.

ஆடிஸம் எனப்படும் மனவளம் குன்றிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளும் இதனால் பெரும் பயன் அடைய முடியும் என்பது கூடுதலான போனஸ் தகவல்! அல்ஜெமீர் வியாதி உள்ள வயதானோருக்கும் இது பயன் அளிக்க வல்லது!

அத்தோடு மட்டுமல்ல, ‘டல்’லாக இருக்கும் மூளையை இது துடிப்புடன் செயல் பட வைக்கும். மந்த நிலையைப் போக்கும். உணர்ச்சியில் மாறுபாடு, மூட் சரியில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் இந்தப் பயிற்சி போக்குகிறது! நினைவாற்றலைக் கூட்டுவதுடன், ஸ்மார்ட்டாக ஒருவரை இது ஆக்குகிறது. எந்த மனநிலை உள்ளவருக்கும் கூட இது பொருந்துகிறது!

அது சரி, அந்தப் பயிற்சி தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை மேலிடுகிறது, இல்லையா?

பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வலது காதை இடது கை கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியில் விட வேண்டும். ஆக இப்படி அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் மூச்சுப் பயிற்சியைச் சீராகச் செய்தல் வேண்டும். மூன்று நிமிடங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். ஐந்து நிமிடம் வரை தொடரலாம் என்றாலும், மூன்று நிமிடப் பயிற்சியே நிச்சயமாகப் போதும். எந்த வயதினரும் இதை செய்யலாம்!

Pic Source : https://amaznginfo.com/wp-content/uploads/2016/03/Brains-1024×7721.jpg

– தொடரும்

உலகின் விலை அதிகமுள்ள 10 மருந்துகள்! –      தமிழாக்கம்: .நாகராஜன்

உலகில் விலை அதிகமுள்ள 10 மருந்துகள் உள்ளன. இவை அரிதாகத் தோன்றும் சில வியாதிகளைக் குணப்படுத்துகின்றன. இந்த மருந்துகள் தேவைப்படுவோர் மிக மிக அதிகமான பணத்தைக் கொண்டிருக்க வேண்டும். இவற்றை யாருமே பயன்படுத்தத் தேவை ஏற்படக் கூடாது என்பதே நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை. இருந்தாலும் இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது தானே. இதோ பட்டியல்.

சரியாக மருந்தின் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஆங்கிலத்திலேயே அவற்றின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

  1. Aldurazyme

உலகில் வில அதிகமுள்ள 10 மருந்துகள் வரிசையில் பத்தாவது இடத்தைப் பிடிப்பதுAldurazyme. இதைத் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் Genzyme and BioMarin Pharmaceutical.இதனுடைய வருடாந்திர செலவு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள். (ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 63 ரூபாய்கள், ஆகவே இந்த மருந்தின் விலை ஒரு கோடியே இருபத்தி ஆறு லட்சம் ரூபாய்கள்). இந்த மருந்தை Laronidase என்றும் கூறுவதுண்டு. உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக இது 2003ஆம் ஆண்டு மே மாதம் அங்கீகரிக்கப்பட்டது. Mucopolysaccharidosi I என்ற வியாதியைக் குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. 5 முதல் 65 வரை வயதுள்ள நோயாளிகள் இதைப் பயன்படுத்தலாம். இந்த வியாதியின் ஒரு வடிவமான Hurler and Hurler-Scheie என்பதைக் கொண்டிருப்போர் இதைப் பயன்படுத்தலாம்.

 Cerezyme

இந்த வரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பிடிப்பது Cerezyme. இந்த உயிர்காக்கும் மருந்தைப் பெற விரும்புவோர் வருடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்க வேண்டும். இதைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் Genzyme. இந்த மருந்தில் பிரதானமாக இருப்பது Imiglucerase. அமெரிக்க ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷனால் (FDA) இது முதன் முதலாக 1994 மே மாதம் 23ஆம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்டது. உடனடியாக உலகெங்கும் இது விற்பனைக்கு வந்து விட்டது.Gaucher என்ற வியாதியைக் குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது 200 யூனிட்டுகள்/vial மற்றும் 400 யூனிட்டுகள்/vial என்ற அளவில் பாட்டில்களில் விற்கப்படுகிறது.

  1. Fabrazyme 

இந்த வரிசையில் எட்டாவது இடத்தைப் பிடிப்பது Fabrazyme . இதைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் Genzyme. இந்த மருந்தில் பிரதானமாக இருப்பது Agalsidase Beta. அமெரிக்க ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷனால் (FDA) இது முதன் முதலாக 2003 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்டது. Fabry என்ற வியாதியைக் குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது 35 mg மற்றும் 5 mg என்ற அளவில் இஞ்ஜெக் ஷன் போடுவதற்காக விற்கப்படுகிறது. Vial எனப்படும் சிறுகுப்பிகளில் 35 mg மற்றும் 5 mg என்ற அளவிலும் இது விற்கப்படுகிறது.

  1. Arcalyst

இந்த வரிசையில் ஏழாவது இடத்தைப் பிடிப்பது Arcalyst. இதைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் Renege Pharmaceuticals. இந்த மருந்தின் மற்ற பெயர்கள் Rilonacept மற்றும் IL- 1 Trap. Cryopyrin என்ற வியாதி மற்றும் அது தொடர்பான நோயைக் குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து குணமாக்கும் இதர வியாதிகள் Muckle – Wells Syndrome, Cold autoinflammatory syndrome மற்றும் neonatal onset multisystem inflammatory நோய் போன்றவை. இதை வாங்க வருடத்திற்கு இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்க வேண்டும். இந்த மருந்தை Orphan Drug எனப் பெயரிட்டு அழைக்கும் FDA, இதற்கான அனுமதியை 2012 மே மாதம் 8ஆம் தேதி வழங்கியது.

  1. Myozyme

இந்த வரிசையில் ஆறாவது இடத்தைப் பிடிப்பது Myozyme. உயிர் காக்கும் இந்த மருந்தின் அறிவியல் பெயர் Alglucosidase alfa. இதைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ஏற்கனவே நாம் பார்த்த அதே Genzyme நிறுவனம் தான்.

Pompe Pompe என்பது கொடூரமான ஒரு வியாதி. இதைத் தீர்க்க Orphan Drug என நாம் மேலே பார்த்த அதே மருந்தை ‘என்ஸைம் மாற்றுமருந்து தெராபி’யாக அளித்து வருகின்றனர். Pompe Pompe என்ற மிக அரிதான வியாதி Lysosomal Storage Disorderஐ உருவாக்குகிறது. Pompe வியாதி இருக்கின்ற போது ஏற்படும் என்ஸைம் குறைபாட்டை ஈடு கட்ட மனித உடலுக்கு இது மாற்றாகத் தரப்படுகிறது. இந்த மருந்திற்கு ஆகும் செலவு வருடத்திற்கு மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு கோடியே எண்பத்திஒன்பது லட்சம் ரூபாய்கள் தான்!!!

தொடரும்

Pic Source : http://www.genengnews.com/media/images/analysisandinsight/Mar4_2014_40728939_DrugsMoney_OrphanDrugsPriceRarelyRight1304105161.jpg

***************

 

ஸமோனெல்லா – கேள்விகளும் விடைகளும்
———————————————————
ஸமோனெல்லா (வயிற்றுப்போக்கு உயிரி) என்றால் என்ன?
ஸமோனெல்லா என்பது ஒரு வகைக் கிருமியாகும் (பாக்டீரியா). இது கோழியின வளர்ப்புப் பறவைகள்,முட்டைகள், பதப்படுத்தப்படாத பால், இறைச்சி மற்றும் நீரில் காணப்படுகிறது. வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் ஆமைகள், பறவைகளிடமும் இது காணப்படுகிறது.
ஸமோனெல்லா எந்த விதமான தொற்றுக்கு காரணமாகிறது?
ஸமோனெல்லா கிருமி வயிறையும் குடலையும் தாக்குகிறது. சில தீவிரமான கேஸ்களில் நீரையும்புரோட்டீனையும் இரத்தத்திற்கு கொண்டு செல்லும் நிணநீர் குழாய்களில் அல்லது இரத்தத்திற்குள்ளேயும் கூட நுழைகிறது. ஆண் பெண் என இருபாலாரையும் எல்லா வித வயதினரையும் இது தாக்குகிறது. ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர் மற்றவர்களை விட சீக்கிரம் தீவிரமான தொற்றை பற்றக் கூடிய அபாயமுள்ளவர்களாகிறார்கள்.
ஸமோனெல்லா விஷத்திற்கான அறிகுறிகள் என்னென்ன?
வயிற்றுப்போக்கு அல்லதுமலச்சிக்கல்,தலைவலி,வயிற்றுத்தசைப் பிடிப்பு,குமட்டல் மற்றும் வாந்தி,ஜுரம், மலத்தில் இரத்தம்
தீவிரமில்லாத தொற்றுகளில் சில அறிகுறிகளே தென்படும் – நாளைக்குஇரண்டு அல்லதுமூன்று முறை வயிற்றுப்போக்கு. இதுஇரண்டு நாட்களுக்குஇருக்கும். சாதாரணமான ஸமோனெல்லா தொற்று வியாதி நான்கு முதல் ஏழு நாட்களுக்குள் தீர்ந்துவிடும். இப்படிப்பட்ட கேஸ்களில் அதிக திரவம் பருகுதல், நல்ல ஓய்வு இருந்தால் போதும், சிகிச்சை தேவை இல்லை.தீவிரமான தொற்று என்றால் அதிகமான வயிற்றுப்போக்கு, வயிற்றுத்தசைப் பிடிப்புமற்றும் இதர ஆரோக்கிய சீர்கேடுகள் இருக்கும்.இப்படிப்பட்ட கேஸ்களில் ஒரு டாக்டரை கலந்தாலோசிக்க வேண்டும். ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?
24 மணி நேரத்திற்கும் மேலாக வயிற்றுப்போக்கு இருந்தால்
வயிற்றுப்போக்கு அடிக்கடி இருந்தாலோ தீவிரமாக இருந்தாலோ
நோயாளி தீவிரமான வயிற்றுத் தசைப்பிடிப்பால் அவதியுற்றால்
மலத்தில் இரத்தம் இருந்தால்
நோயாளிக்கு 38 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணமோ அதற்கு மேலோ இருந்தால்
மஞ்சக்காமாலை நோயின் அறிகுறிகள் இருந்தால் – கண்களில் அல்லது தோலில் மஞ்சள் நிறம் காணப்பட்டால். இது கல்லீரலில்பிரச்சினை இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது.
உடல் வறட்சி
உடல் வறட்சியினால் ஏற்படும் அபாயங்கள் யாவை?
அடிக்கடிவயிற்றுப்போக்கு இருத்தலும் வாந்தி எடுத்தலும் உடலில் இருக்கும் திரவங்களையும் உப்பையும் தாதுக்களையும்வற்றச் செய்துவிடும். நோயாளி உட்கொள்வதை விட அதிகமாக திரவத்தை இழக்கும் போது உடல் வறட்சி ஏற்படுகிறது.உடல்வறட்சி ஏற்பட்டால் உடனே டாக்டரைச் சந்திக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோர் என்றால்இதுமிக்க அபாயத்தை விளைவித்துவிடும்.
உடல்வறட்சியின் அறிகுறிகள்:-
நாக்கு அல்லதுவாயில் உள்ள சீதச் சவ்வு வறண்டிருத்தல்
வறண்ட அல்லது வெடிப்புடைய தோல்
அதிக தாகம்
கறுத்த சிறுநீர்
குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல் அல்லது சிறுநீர் வெளியேறாமலிருத்தல்
தளர்ச்சி

ஸமோனெல்லா தொற்றை எப்படித் தடுக்கலாம்?
சுத்தமாக இருந்தல் அவசியம்
எல்லா உணவு வகைகளும் நன்கு சமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சுகாதாரமாக உணவைத் தயாரிப்பதற்கான அடிப்படை விதிகள் யாவை?
எப்போதும் டாய்லெட்டுக்கு சென்றபின்னர், சமைப்பதற்கு முன்னால், சோப்பால் கையை நன்கு கழுவ வேண்டும்.
ஒரு வகை உணவைத் தயாரித்து இன்னொரு வகை உணவைத் தயாரிப்பதற்கு முன்னால் கைகளை நன்கு கழுவ வேண்டும்.(எடுத்துக் காட்டு: கறிகாய் சமைப்பதிலிருந்து இறைச்சியை சமைக்க மாறுவது) இது வெவ்வேறுமூலப்பொருள்களிலிருந்துபாக்டீரியா பரவுவதைத் தடுக்க உதவுகிறது.
பயன்பாட்டிற்குமுன்னரும் ஒரு வகை உணவுத் தயாரிப்பிலிருந்து இன்னொரு வகை உணவுத் தயாரிப்பிற்கு மாறுவதற்கு முன்னாலும் சோப் மற்றும் நீரினால் சமைப்பதற்கான பாத்திரங்களை நன்கு கழுவ வேண்டும்.இதுபாக்டீரியா பரவுவதைத் தடுக்கிறது.
வெவ்வேறு வகை உணவைத் தயாரிக்க வெவ்வேறு கத்தியையும் அறுக்கப் பயன்படுத்த வெவ்வேறு நறுக்கு போர்டுகளையும் பயன்படுத்த வேண்டும்.
பாத்திரங்களைத் துடைக்கப் பயன்படுத்தும் துணியை அன்றாடம் மாற்ற வேண்டும். குறைந்த பட்சம் 60 டிகிரி செல்ஸியஸ் கொதிநிலையில் இந்தத் துணிகளைச் சுத்தம் செய்ய வேண்டும்
உணவை பிரிட்ஜில்பாதுக்காக்க வேண்டும்.இறைச்சி, கோழியின வகைகள் மற்றும்மீன் வகைகள் பிரிட்ஜிலிருந்து எடுத்த பின்னர் நெடுநேரம் வெளியில் வைக்கப்படக் கூடாது
ஸமோனெல்லா விஷத்தைத் தவிர்க்கும் வகையில் உணவு எப்படித் தயாரிக்கப்பட வேண்டும்?
ஸமோனெல்லா கிருமியைக் கொல்லும் ஒரே வழி உஷ்ணம் மூலம் தான்!ஆகவே இதே காரணத்துக்காகவே உணவு நன்கு சமைக்கப்பட வேண்டும்.
கோழியின வகைகள் நன்கு சமைக்கப்பட வேண்டும் அல்லது கொதிக்க வைக்கப்பட வேண்டும்
துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி நன்கு சமைக்கப்பட வேண்டும் அல்லது கொதிக்க வைக்கப்பட வேண்டும்
மற்ற உணவுகளுடன் கூடிய கிண்ணத்தில் முட்டையை ஒரு போதும் உடைக்காதீர்கள். ஒரு கத்தியை உபயோகித்து முட்டையின் ஓட்டை உடையுங்கள்
அதிக முட்டைகளில் ஸமோனெல்லா கிருமி முட்டையின் ஓட்டில் தான் இருக்கிறது.ஆகவே முட்டைகள் கொதிக்கின்ற நீரில்பயன்பாட்டிற்குமுன்னர் ஐந்து விநாடிகள் வைக்கப்பட வேண்டும்.
தமிழாக்கம் :- ச.நாகராஜன்

**********************

முதுமையை முறியடியுங்கள்,ஆயுளைக்கூட்டுங்கள்: இதோ வழி!
ச.நாகராஜன்
முதுமையைத் தவிர்த்து அதிக நாள் வாழ ஆசைப்படாமல் யார் தான் இருக்க முடியும்? தொன்று தொட்டு இதற்கான வழியைத் தேடாதவரே இல்லை எனலாம்!
நவீன விஞ்ஞான ஆராய்ச்சி இப்படி வாழ வழியைக் கண்டுபிடித்துள்ளது. முதுமையை முறியடிக்கும் வழி எனக்கூறப்படும் இந்த ஆன்டி ஏஜிங் வழிமுறை அற்புதமான ஒன்று! சாதாரணமாக நாம் உணவு உட்கொள்ளும் அளவில் 30 முதல் 50 சதவிகிதம் வரை கலோரிகளைக் கட்டுப்படுத்துவதே இதற்கான வழி முறையாகும்.
21 வயது அடையாதவர்கள் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கக் கூடாது. ஏனெனில் முழு மன வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் அடையாத இளம் பருவத்தில் இப்படி ஒரு வழியை அவர்கள் மேற்கொள்வது அபாயகரமானது; தேவையற்றதும் கூட!
இப்படி உணவுப் பழக்கத்தைச் சற்றுமாற்றிக் கொள்வதன் மூலமாக சுமார் 30 சதவிகிதம் ஆயுளைக் கூட்ட முடியும் என்று ஆய்வுகள் உறுதி படத் தெரிவிக்கின்றன. சாதாரண உணவுடன் வைட்டமின்கள், மினரல்கள்மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் உட்கொண்டனர்.
1930களிலிருந்தே இப்படி ஒரு ஆராய்ச்சி தொடங்கியது.1935ல் கார்னெல்பல்கலைக்கழகத்தில் உணவு ஆய்வாளர்களான மக்காய் மற்றும் லியனார்ட் மேனார்ட் தங்களது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டனர்.சாதாரணமாக உட்கொள்வதில் மூன்றில் ஒரு பங்கைக் குறைப்பதே இந்த ஆராய்ச்சியின் வழிமுறை. எலியின் மீது நடந்த இந்த ஆராய்ச்சியில் குறைந்த கலோரி உட்கொண்ட எலிகளின் ஆயுள்காலம் 30 முதல் 40 சதவிகிதம் வரை நீடித்தது!
இதில் வரும் ஆதாயங்கள் :-
மேம்பட்ட ஆரோக்கியம், அதிக ஆயுள், இதய நோய்கள், புற்று நோய் பக்கவாதம் டயாபடீஸ் அல்ஜமீர் பார்கின்ஸன் போன்ற கொடிய வியாதிகள் தடுக்கப்படுவது, இளமையாக இருக்கும் மன நிலையையும் உள நிலையையும் வயதில் குறைந்தவர்கள் அடைவதைப் போல அடைவது
இதில் வரும் அபாயங்கள்:-
பசி, விருப்ப உணவுக்காக ஏக்கம், வலிமையை இழப்பது, தசை வலிவை இழப்பது, டெஸ்டோச்டெரொன் அளவில் குறைவுபடுதல், எடை இழப்பு, காயம் ஏற்படும் போது மெதுவாக ஆறுவது, குறைந்த ஆற்றல். மாதவிடாயில் சீரற்ற தன்மை, எடை இழப்பால்தோற்றப் பொலிவில்மாற்றம், ஜாலியாக பார்ட்டி, ஹோட்டல்களில் உணவு அருந்த முடியாமை
2000 ஆய்வுகளில் பெரும்பாலானவைமிருகங்களின் மீது மேற்கொள்ளப்பட்டன. கலோரிகளில் கட்டுப்படுத்தப்பட்டதால், இந்த வழிமுறை அதிக ஆயுளைத் தருவது கண்டுபிடிக்கப்பட்டது!
லாஸ் ஏஞ்ஜல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ரே வால்போர்டு நடத்திய சோதனைகள் மிக முக்கியமானவையாக அமைந்தன.1986ல் அவர் 120 ஆண்டு வாழ்வதற்கான டயட் (உணவுப் பழக்க முறை) என்ற ஆய்வை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக 120 ஆண்டுக்கும் மேற்பட்டு வாழ்வதற்கான டயட் பற்றி 2000ம் ஆண்டில்இன்னொரு ஆய்வை வெளியிட்டார்!இந்த ஆய்வில் மிகத் தீவிரமாக உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தி வாழ்வதன் மூலம் ஆயுளை அதிகம் நீடிக்கலாம் என்ற தன் முடிவை வலியுறுத்தினார். 1994ல் The Anti-Aging Plan: Strategies and Recipes for Extending Your Healthy Yearsஎன்ற நூலைஇன்னொருவருடன் கூட்டாக எழுதி இவர் வெளியிட்டார்.
வால்போர்ட் பரிந்துரை செய்யும், இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட கலோரி உணவுப் பழக்க முறையில் ஒரு நாள் சாம்பிள் உணவுப் பட்டியலைப் பார்க்கலாம்:
காலை உணவு: ஒரு கப் ஆரஞ்சுஜூஸ், ஓடு நீக்கிய முட்டை வேக்காடு ஒன்று, ஹோல் க்ரெய்ன்ப்ரெட்துண்டு ஒன்று, ஒரு கப் காப்பி அல்லது டீ
மதிய உணவு: குறைந்த கொழுப்பு உடைய சீஸ் அரை கப்புடன் கலக்கப்பட்ட அரை கப் யோஹர்ட். (யோஹர்ட் என்றால் தயிர்) டோஸ்ட் செய்யப்பட்ட கோதுமை முளை ஒரு டேபிள் ஸ்பூன், ஆப்பிள் ஒன்று, ஒரு ஹோல் வீட்இங்கிலீஷ் மபின் (கோதுமை மாவினால் உருவாக்கப்பட்ட ப்ரெட்)
இரவு உணவு: மூன்று அவுன்ஸ் ரோஸ்டட் சிக்கன்ப்ரெஸ்ட் (சிக்கன் மார்பு – தோலில்லாமல்), அவன் போன்றவற்றில் சுட வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு ஒன்று, நீராவியில் வேகவைக்கப்பட்ட பசளிக் கீரை ஒரு கப்
நொறுக்குத்தீனி : ஐந்து பேரீச்சம்பழம், ஒட் தவிட்டினாலான மபின் ஒன்று, குறைந்த கொழுப்பு உடைய பால் ஒரு கப்
மேலே உள்ளமூன்று வேளை உணவும் நொறுக்குத் தீனியும் சேர்ந்து 1472 கலோரிகள், 92 கிராம்புரோட்டீன், 24 கிராம் கொழுப்பு, 234 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 27 கிராம் பைபர், 310 கிராம் கொலஸ்ட்ராலைக் கொண்டுள்ளது.
நமது நாட்டுக்கேற்ப உணவுவகைகளை மாற்றிக் கொண்டாலும் இதே அளவுகள் உறுதி செய்யப்பட வேண்டும்!
நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ உறுதி பூணுவோம்!

Pic Source : http://brucekrasting.com/wp-content/uploads/2012/09/young_vs_old.jpg
****************

கோத்ர திருமணம் சரிதானா? —- ச.நாகராஜன்
———————————————–
பரபரப்பூட்டிய வழக்கு
பரபரப்பூட்டும் கோத்ர வழக்கில், மார்ச் 30ம் தேதி கர்னால் நகர அடிஷனல் செஷன்ஸ் கோர்ட் ஐந்து பேருக்கு மரண தண்டனை அளித்தது.
மனோஜ் என்ற 23 வயது இளைஞர் 19 வயது பாப்லியை மணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த காப் மக்கள் அதை எதிர்த்தனர்.
திருமணம் செய்து கொண்டவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான் காரணம். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் அடித்துக் கொலை செய்ய காப் மக்கள் மன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவின் படி நடந்துகொண்டோரை நீதிமன்றம் தட்டிக் கேட்டது; தண்டனை கொடுத்தது.
இதையொட்டி நாடு முழுவதும் எழுந்துள்ள சூடான சர்ச்சை ஸ-கோத்ர மணம் சரிதானா இல்லையா என்பது தான்!
அரசியல்வாதிகளின் நிலை
ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 27ன் முடிவை நேரடியாக நிர்ணயிப்பவர்கள் ஜட் சமுதாயத்தினரே. இவர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள். ஆகவே காங்கிரஸ¤ம் இதர கட்சிகளும் இவர்களை எதிர்த்துக் கொள்ள விரும்பவில்லை.தர்ம சாஸ்திரம் எப்படி இருந்தாலும் அரசியல்வாதிகளின் அரசியல் சாஸ்திரம் அவர்களை ஜாக்கிரதையாக நடந்து கொள்ளச் செய்கிறது.
காப் என்று கூறப்படும் இவர்களின் மக்கள் மன்றம் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தங்களின் சம்பிரதாயத்தைக் காப்பாற்ற முனைந்துள்ளது.காப் மக்கள் கல்லால் அடித்துக் கொலை செய்ய உத்தரவிட்டது தவறு என்பதில் இரண்டு வித அபிப்ராயம் இல்லை. ஆனால் அவர்களின் சம்பிரதாயமான ஒரே கோத்திரத்தில் பெண் கொடுக்கக் கூடாது என்பது சரிதானா இல்லையா என்பது பாரதம் தழுவிய பிரச்சினையாகி விட்டது. முற்போக்காளர்கள், பகுத்தறிவு வாதிகள் இதில் தவறு இல்லை என்று கூறி ஊடகங்களை உசுப்பி விட்டு தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக ஒரு சித்திரத்தை முனைந்து ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் கூற்று நியாயம் தானா?
ஒரு அலசு அலசலாம்!
கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு!
பாத்திரம் அறிந்து பிச்சை கொடு கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்பது தமிழ் பழமொழி.
பாரதமெங்கும் ஒரே கோத்திரத்தில் மணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு செயலில் உள்ளது.
கோத்திரம் என்பதை சுருக்கமாக ஒரே வமிசாவளியினர் என்று கூறலாம்.
பல மஹரிஷிகளின் பெயர்களில் வமிசாவளி அல்லது கோத்ரம் தொடங்குகிறது. ஒரே ரிஷியின் வழி வந்தவர்கள் தங்களுக்குள் மணம் செய்யக் கூடாது என்று அறநூல்கள் அறிவிக்கின்றன. இப்படிச் செய்வது அண்ணன் – தங்கை திருமணம் போல ஆகும் என்பது அற நூல்களின் முடிவு.
ஆகவே தான் மணம் புரிய இருக்கும் யுவதி அல்லது இளைஞனின் கோத்திரத்தைப் பெற்றோர்கள் முதலில் கூறி திருமணப் பேச்சைத் தொடங்குவர்.
நெருங்கிய உறவில் செய்யப்படும் திருமணம் பற்றி நவீன விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்தால் நாம் அறிவியல் பூர்வமாக ஒரு முடிவுக்கு வர முடியும், இல்லையா?
விஞ்ஞான ஆய்வு தரும் எச்சரிக்கை
இப்படி நடக்கும் திருமணங்களின் மூலமாக தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆடோஸோமல் ரிஸஸிவ் டிஸ்ஆர்டர் என்ற கொடுமையான வியாதி வருகிறது என்கிறது விஞ்ஞான ஆய்வுகள். ( Autosomal Recessivie Disorders). இப்படிப்பட்ட திருமணங்கள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகள் பலருக்கு 1)Cystic fibrosis 2)Osteogenesis imperfecta 3)polycystic kidney disorder 4)hurler/hunter syndrome 5)Thalassemia 6) Atutosomal dominant disorder உள்ளிட்ட விதவிதமான கொடுமையான நோய்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன நலம் பாதிப்பு, மன முதிர்ச்சியின்மை, ஜனன உறுப்புகள் பாதிப்பு, சிறுநீரகப் பழுது போன்ற கொடிய நோய்களோடு பிறக்கும் குழந்தைகள் பெற்றொருக்கு என்ன வேதனையைத் தரும்? வாழ்நாள் முழுவதும் (அவர்கள் சுமார் எண்பது வரை வாழ்வதாக வைத்துக் கொண்டால்) எப்படிப்பட்ட பராமரிப்பைத் தர வேண்டியிருக்கும்? எண்ணிப் பார்த்தால் கதி கலங்கும்இது தவிர சமுதாயப் பார்வையில் இப்படிப்பட்ட மக்கள் பெருகினால் அரசாங்கம் மற்றும் சமுதாயத்தின் மீது எத்தகைய பளு வந்து சேரும்?.
இது தவிர நிறம் தெரியாத பார்வை, பாலியல் வியாதிகள் என இன்னொரு நீண்ட பட்டியலையும் மருத்துவ விஞ்ஞானிகள் முன் வைக்கின்றனர்.
பார்ஸி மக்கள் தரும் படிப்பினை
பார்ஸி மக்கள் தங்கள் இனத்துக்குள்ளாகவே மணம் புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட நோய்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதே போல அந்தமான் தீவில் வாழும் பழங்குடியினரான ஜார்வாஸ் மற்றும் ஓங்கஸ் இனத்தவரும் இப்படிப்பட்ட ஒரே கோத்ர மணத்தைச் செய்ய வேண்டியிருந்ததால் அந்த இனத்தவரின் சந்ததியினர் ஏராளமான நோய்களுக்கு ஆளாயினர்.
டார்வினின் வருத்தமும் பயமும்
தனது கஸினை மணம் செய்து கொண்டதால் தான் தன் வாழ்க்கை சஞ்சலத்திற்கு உரியதாக மாறியதா என பரிணாம கொள்கையைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின் வருத்தமும் பயமும் கொண்டார்.
அவர் பத்துக் குழந்தைகளைப் பெற்றவர். இவற்றில் மூன்று குழந்தைகள் பத்து வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் இறந்து போயின.அடுத்து இன்னொரு மூன்று குழந்தைகளுக்குப் பின்னால் பிள்ளைப் பேறே வாய்க்கவில்லை.
சமீபத்திய பயோஸயின்ஸ் பத்திரிகை டார்வினின் வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியை விரிவாக விளக்கி இதே போல ஸ-கோத்ர மணத்தாலேயே அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று விளக்குகிறது! இதை ஆராய்ந்த விஞ்ஞானியான பெர்ரா, ஓஹையோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்.தனது கஸினை மணந்ததால் தான் இப்படி ஏற்பட்டதோ என்ற டார்வினின் பயத்தை ஆராய்ந்தேன். அது முற்றிலும் உண்மை தான் என்று கண்டுபிடித்தேன்” என்கிறார் அவர்!
அறநூல்களின் அறிவுரை
நமது அறநூல்கள் கோத்திரங்கள் எண்ணற்றவை என்று கூறுகின்றன. “கோத்ராணாம் து ஸஹஸ்ராணி ப்ரயுதான்யர்புதானி” என்று போதாயனர் குறிப்பிடுகிறார்.
ச்ரௌத சூத்திரங்களில் ப்ரவர அத்தியாயங்களில் உள்ள கோத்திரங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் சுமார் 2463 கோத்திரங்கள் வருகின்றன.
கோத்ரம் என்றால் மூல புருஷர் எனப் பொருள்,
ஜமதக்னி, பரத்வாஜர்,விஸ்வாமித்ரர்,அத்ரி, கௌதமர், வஸிஷ்டர்,காஸ்யபர், அகஸ்தியர் ஆகிய எட்டு கோத்ரகாரர்களோடு பின்னால் வைதஹவ்யர், மித்ரயு, கனகர்,யவனர்,ரதீதரர்,முத்கலர்,விஷ்ணுவ்ருத்தர், ஹரிதர்,கண்வர், ஸங்க்ருதி என்று இன்னும் பத்து மூலபுருஷர்கள் பெயரால் கோத்திரங்கள் உருவாயின. இது பல்கிப் பெருகியது.
இவ்வளவு கோத்திரங்கள் இருக்கும் போது ஒரே கோத்திரத்தில் பெண் எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.இது தவிர ப்ரவரங்கள் 49 என்ற எண்ணிக்கையைக் கூறி ஒரே ப்ரவரத்தைச் சேர்ந்தவர்கள் மணம் புரியக் கூடாது என்றும் அறநூல்கள் அறிவுறுத்துகின்றன.
ஆகவே தர்ம சாஸ்திர ரீதியாகவும் விஞ்ஞானம் கூறும் பகுத்தறிவு ரீதியாகவும்
ஸ-கோத்ர திருமணம் சரியல்ல!
மீறி நடப்பவர்களை இன்றைய சட்டம் ஒன்றும் செய்யாது. (ஏனெனில் நீதிமன்றமே தனது தீர்ப்பைக் கூறி விட்டது. இப்படிப்பட்ட வழக்குகளில் எல்லாவற்றிலும் ஞானம் இருக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியிடம் எதிர்பார்க்க முடியாத நிலையில் அப்படிப்பட்ட வழக்கில் தீர்ப்பு சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ள நீதிபதிகள் துறை வல்லுநர்களை கலந்தாலோசிப்பர்; ஒரு பேனலை நிர்ணயிப்பர். அவர்களின் துணையோடு தீர்ப்பை எழுதுவது மரபு. பல வருடங்களுக்கு முன்பு நடந்த கோத்ர திருமண வழக்கில் இது கடைப்பிடிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை!)
சட்டம் ஒன்றும் செய்யாவிட்டாலும், சந்ததியினரை உடல் ரீதியாக இயற்கை தண்டித்து விடும் என்ற அபாயம் இருப்பதால் சமுதாய நோக்கில் இதைச் செய்யாமல் இருப்பதே நலம்!
திருமணம் செய்து கொள்ள இருக்கும் யுவதிகளும் இளைஞர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்!

Pic Source : http://www.treat-nmd.eu/downloads/image/autosomalrecessive.jpg
***********************