உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -2

உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -2
ச.நாகராஜன்

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதைப் பயன்படுத்திச் செயல்படத் தயாராக இருக்க வேண்டும், அவ்வளவு தான்!” – மார்க் ஆஸ்ட்ரோஃப்ஸ்கி
இந்தியாவிலிருந்து, குறிப்பாக சென்னை, பங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் மென்பொருள் பொறியாளர்கள் தங்கள் அபார மூளையால் பல்வேறு விதமான மென்பொருள்களை ‘ஸ்டார்ட் அப் கம்பெனி’ எனப்படும் சிறு கம்பெனிகளை ஆரம்பித்து சிருஷ்டிக்கின்றனர். அவை நன்கு வெற்றி அடைந்தவுடன் மிகப் பெரும் கம்பெனிகள் அந்தக் கண்டுபிடிப்புகளை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. நல்ல பணத்தை தங்களின் இளமைக் காலத்திலேயே பார்க்க முடியும் இவர்களின் அறிவுத் திறனை அறிவியல் உலகம் பாராட்டுகிறது. எல்லோராலும் சாதிக்க முடியும் என்று கண் எதிரேயே நிரூபிக்கும் இந்த இளைஞர்களைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
இவர்களைப் போல இந்தியர்கள் அனைவரும் ஆக முடியும்! எல்லாத் துறையிலும் உலகளாவிய விதத்தில் இந்த வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க இன்னும் சில சாதனையாளர்களைப் பார்ப்போம்:-
ஓப்ரா வின்ஃப்ரே
இன்று அமெரிக்க தொலைக்காட்சியில் ஓப்ரா வின்ஃப்ரே பற்றித் தெரியாதவர் இருக்க முடியாது. அவர் தனது இளமைக் காலத்தில் ஆறு வருடங்கள் தன் பாட்டியுடன் வாழ நேர்ந்தது. மிக்க ஏழ்மையான சூழ்நிலையில் உருளைக்கிழங்குகளை பாக் செய்து வரும் சாக்குகளினால் ஆன உடைகளையே அவர் அணிந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர்களாலும் ஒரு நண்பராலும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் தனது 13ஆம் வயதில் வீட்டை விட்டு ஓடிப் போனார். 14ஆம் வயதில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. பிறகு அவர் தன் தாயுடன் வசிக்கச் சென்றார்.ஆனால் அம்மாவோ அவரை தந்தையடன் வசிக்க அனுப்பி வைத்தார்.
அதனால் அவரது வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கல்லூரிக்கு படிக்கச் சென்றார். அங்கு ஒரு அழகிப் போட்டியில் பரிசைப் பெற்றார். ஒரு ரேடியோ ஸ்டேஷன் அவரை ஆதரிக்க ஆரம்பித்தது. அப்போது தான் அவருக்குத் தன் திறமையே தெரிய வந்தது. பேட்டிகளை எடுக்க ஆரம்பித்தார். பின்னர் நடந்ததை உலகம் அறியும். இன்று உலகின் நம்பர் ஒன் ஷோ ஓப்ரா வின்ஃப்ரே ஷோ! அவரது இன்றைய சொத்தின் மதிப்பு 270 கோடி அமெரிக்க டாலர்கள்!
வால் மார்ட் கண்ட சாம் வால்டன்
அமெரிக்காவில் ஓக்லஹாமாவில் பயங்கரமான பொருளாதார வீழ்ச்சியின் போது வால்டன் என்ற ஏழ்மைக் குடும்பம் தவியாய்த் தவித்தது. அன்றாட செலவுகளுக்குப் பணம் வேண்டுமே! வால்டன் பசுமாட்டின் பாலைக் கறக்க ஆரம்பித்தார். கறந்த பாலை வாடிக்கையாளர்களுக்கு ‘டோர்-டெலிவரி’ செய்தார். அன்றாடம் பேப்பர் படிப்பவர்களுக்கும் நாளிதழ்களையும் இதர பத்திரிக்கைகளையும் போட்டு அதில் வரும் வருமானத்தையும் வைத்து செலவுகளை ஒருவழியாய்ச் சமாளித்தார்.
வால்டன் தனது 26ஆம் வயதில் மிசௌரி பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ.படிப்பை முடித்து ஒரு வெரைட்டி ஸ்டோரை ஆரம்பித்தார்.அர்கான்ஸாஸில் உள்ள அந்த ஸ்டோரை 5000 டாலர் ராணுவத்திலிருந்து வந்த பணத்தையும் 20000 டாலர் வங்கி கடனையும் வைத்து வாங்கினார். கடுமையான உழைப்பின் மூலம் ஒரு கடையை இரண்டாக விஸ்தரித்தார். இரண்டை ஒரு சங்கிலித் தொடர் வரிசைக் கடைகளாக்கினார். அது வால்மார்ட் என்று பிரசித்தம் அடைந்தது. இன்று வால்மார்ட் கடைகளைப் பார்ப்பவர் வாயைத் திறந்து பிரமிக்கின்றனர். அவ்வளவு பிரம்மாண்டம்! 1992இல் அவர் இறந்தார். மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வால்மார்ட் உரிமையானது. இன்று வால்மார்ட்டை அறியாதோர் இல்லை!

ரிச்சர்ட் டெஸ்மாண்டின் காரேஜ் வாழ்க்கை
ரிச்சர்ட் டெஸ்மாண்ட், பெற்றோர் விவாகரத்து செய்யவே தாயிடம் வளர ஆரம்பித்த ஒரு குழந்தை! தாயும் மகனும் ஒரு காரேஜில் தான் வாழ முடிந்தது. 14ஆம் வயதில் அவர் பள்ளிப்படிப்பை விட்டார். ஒரு ட்ரம்மராக வாழ்க்கையை ஆரம்பித்தார்.சின்ன சின்ன வேலைகளைச் செய்தார். இசையில் பெரிய விற்பன்னராக இல்லாவிட்டாலும் கூட, பின்னால் மெதுவாக ரிகார்டு செய்யும் கடைகளை ஆரம்பித்தார். பின்னர் இசை சம்பந்தமாக இரு பத்திரிக்கைகளை ஆரம்பித்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்தது. பிரிட்டனைச் சேர்ந்த பெண்ட்ஹவுஸ் மற்றும் ஓகே போன்ற பிரபல பத்திரிக்கைகளைப் போல புகழ் படைத்த பத்திரிகைகளை அவர் நடத்த ஆரம்பித்தார். அத்தோடு தனக்கு வந்த வருமானத்தில் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்கு ஈந்து பெரும் நன்கொடையாளராகவும் ஆனார்.
சன் க்ளாஸ் தயாரித்த லியனார்டோ டெல் வெச்சியோ
தாயோ விதவை. நான்கு குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டார். நான்கு குழந்தைகளில் ஒன்றான லியனார்டோ டெல் வெச்சியோ அனாதை இல்லத்தில் வளர்ந்தார். காரின் பாகங்களைத் தயாரிக்கும் மோல்டுகளைச் செய்யும் தொழிலகத்தில் சேர்ந்தார். அத்தோடு கண்ணாடி ப்ரேம்களைச் செய்யவும் கற்றுக் கொண்டார். ஆனால் அதில் ஒரு விரலே போனது.
23ஆம் வயதில் கற்ற கலையை வைத்து சொந்தமாக ஒரு மோல்ட் ஷாப்பை ஆரம்பித்தார். கண்ணாடி ப்ரேம்களில் சன் க்ளாஸ்களை அமைத்தார். உலகப் புகழ் பெற்றார், ரே- பன், ஓக்லி போன்ற முத்திரை பெற்ற ப்ராண்ட் வகைகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். லக்ஸோடிகா என்ற அவரது நிறுவனம் விரிவடைந்தது. இன்று ஆறாயிரம் கிளைகளுடன் 1150 கோடி டாலர்களுக்கு அவர் அதிபதி!
இது போல இன்னும் நூற்றுக்கணக்கானவர்களின் உண்மை சரிதங்களை எடுத்துக் காட்ட முடியம், இன்றைய அறிவியல் உலகில்!
சோம்பேறிகளுக்கு இல்லை வெற்றி! கடுமையான உழைப்புடன் மக்களின் தேவைக்கு ஏற்றபடி தங்கள் மனச் சித்திரத்தில் உதித்த சேவைப் பொருள்களை ஆக்கபூர்வமான படைப்பாற்றலைக் குழைத்து சமூகத்திற்குப் படைக்கும் அனவருமே இன்று வெற்றியாளர்கள் தான்!
இதற்கான அடிப்படைக் காரணம் அறிவியல் உலகம் கட்டற்ற வாய்ப்புகளை அவிழ்த்து விட்டிருப்பதே ஆகும்!

Pic Source : https://cdn.yourstory.com/wp-content/uploads/2016/09/oprah.png

Related Post