மனமே பற! உயரப் பற!

உபநிடத சத்தியம் : மனமே பற! உயரப் பற!

                                              ச.நாகராஜன்

 1

மனமே, பற! உயரப் பற!!

பற, பற என்றால் எப்படிப் பறப்பதாம். முடியாது.முயன்று பார். அண்டார்டிகா போக முடியுமா?ஓ! அது முடியும். இதோ அண்டார்டிகா போய் விட்டேன். ஆஹா! க்ளேசியர் என்று சொல்கிறார்களே, பனிப்பாறைகள், ஓ, அற்புதம்!அட, அண்டார்டிகா சென்று அதன் வர்ணனை வேறா! திரும்பி வீட்டிற்கு வர முடியுமா?

வர முடியுமாவாவது. வந்தே விட்டேன். ஒரு நொடியில். பழைய டேபிள். அதே லாப் டாப்.! அதே அறை!!அட! இது போலப் பறக்க முடியாதா?ஓ! இது போலப் பறக்க முடியுமே. இதோ சந்திரன்! ஆர்ம்ஸ்ட்ராங்கின் கால்டித் தடங்களைப் பார்க்கிறேன். அட, அப்படியே செவ்வாய் கிரகம் செல்கிறேன். அங்கு தண்ணிரைப் பார்க்கிறேன்.

சபாஷ். என்ன சபாஷ், இதனால் எல்லாம் என்ன பிரயோஜனம். அலுப்புத் தான் மிஞ்சுகிறது. ஒரு பிரயோஜனமும் இல்லை.

வந்தாயா, வழிக்கு. அதனால் தான், மனமே பற, உயரப் பற என்றேன். பறப்பது என்றால் மேலே சும்மாவாவது பறப்பது என்று அர்த்தமில்லை. மனமே உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு பற என்று சொன்னேன். அதனால் நீ மட்டுமல்ல; சமுதாயமே  மேலே எழும்பும்.

“அப்படி பறக்க எனக்குத் தெரியாது! உயரிய சிந்தனையோடு பற என்றால் என்ன அர்த்தம்?” அப்படிக் கேள், சொல்கிறேன். ஒரு வாஹனம் தருகிறேன். அதில் ஏறிப் பறந்தால் உயர்ந்த சிந்தனையோடு பறக்கலாம்.

அட, ஜோராக இருக்கிறதே. என்ன வாஹனம், எப்படிப் பறப்பது.உபநிடதம் என்னும் வாஹனம். அதில் ஏறினால் சிகரமான சிந்தனைகள் வரும். மனமே, உனக்கு மட்டுமல்ல,பிரயோஜனம், நீ அதைப் படித்தால் அனைவருக்குமே நல்லது நடக்கும் அளவிற்குச் சிந்தனை உயரும்.உபநிடதமா, பார்க்கலாமா?

உபநிடதங்கள் ஏராளம் உள்ளன. முக்கியமான 108 உபநிடதங்கள் இதோ உள்ளன. ஏதாவது ஒன்றை எடுத்துப் பாரேன்.சரி,கைக்கு வந்த இந்த் உபநிடதத்தைப் பார்க்கிறேன். இதன் பெயர் அம்ருத பிந்து உபநிடதம்.

“அழகான உபநிடதம்!”

அதில் முதல் வரிகளைப் பார், அதனால் உயரப் பறக்க முடியுமா என்று பார்!

ஓம். மனோ ஹி த்விதம் ப்ரோக்த்ம் சுத்தம் சாசுத்த மேவ ச I

அசுத்தம் காம ஸங்கல்பம் சுத்தம் காமவிவர்ஜிதம் II

 மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:…I

“ஓ! அர்த்தம் என்ன?“மனது சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் இரு வகையாகக் கூறப்பட்டுள்ளது. ஆசையில் நாட்டமுடையது அசுத்தம். ஆசை இல்லாதது சுத்தம். மனதே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்.” இது தான் அர்த்தம்.

மனமே!இதை மட்டும் சிந்தித்துப் பாரேன். உயரப் பறக்க முடிகிறதா!அட, மனமாகிய என்னைப் பற்றி அல்லவா இந்த உபநிடதம் கூறுகிறது. மன ஏவ மனுஷ்யாணாம். உண்மை தான். உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன!

2. மனதிற்கும் அதன் ரகசியம் உணர்ந்த ரிஷிக்கும் நடந்த (கற்பனை) சம்பாஷணையைத் தான் மேலே படித்தீர்கள்.மனதைப் பற்றிய ரகசியங்களை நன்கு விளக்கும் உபநிடதம் அமிருதபிந்து உபநிஷத். மனதை விஷயப்பற்றில்லாததாகச் செய்.

 உலகப் பொருள்களைப் போல் பரம்பொருள் சிந்தனைகுரியதன்று.ஆனால் சிந்திக்கத் தகாதது அன்று. சிந்தனைக்கெட்டாததாயினும் சிந்தித்தற்குரியது அது ஒன்றே. அப்படி காணும் போது பக்ஷபாதம் முற்றும் நீங்கிய பிரம்மம் அடையப்பட்டதாகிறது.

 3

மனதைப் பற்றிய இரகசியங்கள் அனைத்தையும் விளக்கும் அற்புத உபநிடதம் அமிருத பிந்து உபநிடதம்.22 ஸ்லோகங்கள் உள்ளன. 

ஸர்வபூதாதிவாஸஞ் ச யதுபூதேஷு வஸத்யதி I

ஸர்வானுக்ராஹகத்வேன ததஸ்ம்யஹம் வாஸுதேவ: II

ததஸ்ம்யஹம் வாஸுதேவ இதி II

 எல்லா உயிர்களும் எவனிடம் வாழ்கின்றனவோ, எவன் எல்லா உயிரிகளிடத்தும் அருள்புரிந்து கொண்டு வாழ்கின்றானோ அந்த வாஸுதேவன் நானாயிருக்கிறேன்.. அந்த வாஸுதேவன் நானாயிருக்கிறேன் என்றவாறு.

 என்று இப்படி முடிகிறது இந்த உபநிடதம். மூவுலகிலும் நிறைந்து வசிப்பதால் பகவானுக்கு வாஸுதேவன் என்ற பெயர் ஏற்பட்டது. 

அவனை மனதில் ஏற்றினால் மனம் பறக்கும்; உயரப் பறக்கும்.அதனால் நன்மை பறக்கும் மனதிற்கு மட்டுமல்ல; உலகிற்கே நன்மை!

 4

ராமகிருஷ்ண தீபம் என்னும் உரையுடன் ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை-4,  108 உபநிடதங்களை உரையாசிரியர் அண்ணா அவர்களின் உரையுடன் வெளியிட்டிருக்கிறது. உபநிடதப் பொக்கிஷம் இது. தமிழில்  மட்டுமல்ல, உபநிடத விளக்கவுரைகள் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

பல ரகசியங்களை அறிந்து கொள்ளவும் நமது மனம் உயரப் பறக்கவும் ஒரே வழி -உபநிடதங்களைப் படிப்பது தான்!

Pic Source : https://i.ytimg.com/vi/1WFapJXkNZY/maxresdefault.jpg

Related Post