வெற்றிக்கான கருத்துக்களை உருவாக்குவது எப்படி?

வெற்றிக்கான கருத்துக்களை  உருவாக்குவது எப்படி? – 1               ச.நாகராஜன்

“சாரமாகச் சொல்லப் போனால், மனித சரித்திரமே கருத்துக்களின் வரலாறு தான்!        ஹெச்.ஜி.வெல்ஸ்

வாழ்க்கையில் வெற்றி பெறுவோரை நன்கு கவனித்துப் பார்த்தால் அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக இலங்குவது அவர்களின் சில கருத்துக்களே என்பதை அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட நல்லகருத்துக்களை எப்படிப் பெறுவது? அனைவராலும் பெற முடியுமா? முடியும் என்கிறது அறிவியல்.

லினஸ் பாலிங் (Linus Pauling –தோற்றம் 28-2-1901 மறைவு 19-8-1994) என்பவர் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற பெரும் விஞ்ஞானி. இவருக்கு மூன்றாவது நோபல் பரிசும் கிடைக்க இருந்தது. நல்லகருத்துக்களைச் சொல்வதில் சிறந்த மேதை. உலக அமைதிக்காகப் பெரிதும் பாடுபட்டார். எப்படி இவருக்கு நல்ல அரிய கருத்துக்கள் உருவாகி வந்தன? அவரே இதைச் சுலபமாகச் சொல்லி விட்டார்.

“ஒரு நல்ல கருத்தை அடைவதற்கான சிறந்த வழி, ஏராளமானகருத்துக்களை உருவாக்கிக் கொள்வது தான்! பிறகு மோசமானவற்றைத் தூக்கி எறிந்து விட வேண்டும்”  – இது தான் அவரது எளிய வழி!

சுலபமான வழியாகத் தெரிந்த போதிலும் நிறைய கருத்துக்களை எப்படிஉருவாக்குவது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

விஞ்ஞானிகள் எப்படி கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை ஜெர்மானிய விஞ்ஞானியான ஜூஸ்ட் ரீக் (Joost Reek) அழகாகச் சொல்கிறார். அவருக்கு இரண்டு ‘யங் கெமிஸ்ட் விருதுகள்’ கிடைத்த போது அவரைப் பேட்டி கண்ட ஒருவர் அவரது வெற்றிக்கானஇரகசியம் என்ன என்று கேட்டார்.

அதற்கு ரூஸ்ட்,” நான் ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை எழுதி வைத்துக் கொள்வேன். ஒவ்வொரு முறை ஒரு புதிய ப்ராஜக்ட் அல்லது ஆய்வைத் தொடங்கும் முன்னர் என் முன்னே ஏராளமான கருத்துக்கள் இருக்கும். அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது சுலபம். அவற்றிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் ஆழ்ந்து ஈடுபடுவேன்” என்று பதில் கூறினார்.

இளம் வயதிலேயே பெரும் பேராசிரியராக ஆன அவர் தன் 42ஆம் வயதில் உலக விஞ்ஞானிகள் வரிசையில் ரசாயனத்தில் 643வது இடத்தில் இருந்தார். இதற்கான காரணம் ஒரு நாளைக்கு ஒரு புதிய கருத்து என்ற அவரது புதிய பாணி தான்!

இதை செயல்படுத்திப் பார்க்கலாம் என்று முனைந்த இளைஞர் ஒருவர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஒரு நாளைக்கு ஒரு கருத்து என்று ஆரம்பித்தால் சில மாதங்களில் நிறைய கருத்துக்கள் சேரும். ஆனால் அவரோ தினசரி ஐந்து நிமிடங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து தனக்குத் தோன்றிய கருத்துக்களை எல்லாம் ஒரு நோட்புக்கில் குறித்து வரலானார், அத்தோடு அவ்வப்பொழுது தனக்குத் தோன்றும் கருத்துக்களையும் குறித்துக் கொண்டார். நிறைய கருத்துக்கள் தோன்ற வேண்டுமெனில் தனக்குப் பிடித்த விஷயம் சம்பந்தமாக பிரபல விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன், பெர்மி ஆகியோர் படித்ததைப் போல தனக்கே உரித்தான பொருள் பற்றிப் பல புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தார். ஆகவே புதிய கருத்துக்கள் உதயமாக ஆரம்பித்தன. இவற்றை 30 நாட்கள் கழித்து ஆராய்ந்து பார்த்ததில் அன்றாடம் ஐந்து நிமிடத்தில் உதயமான கருத்துக்கள் மொத்தம் 208. அவ்வப்பொழுது குறித்து வைத்த கருத்துக்கள் மொத்தம் 35. ஆக தினமும் ஐந்து நிமிடம் ஊன்றி யோசித்தால் புதிய கருத்துக்கள் அவ்வப்பொழுது தோன்றுவதை விட ஐந்து மடங்கு அதிகமாகத் தோன்றுகிறது. சரி, அவற்றின் தரம் எப்படி? இதற்கு விடை காண அவரே ஒன்று முதல் 10 வரை மதிப்பெண் கொடுத்தார். ஒன்று என்றால் உருப்படாத ஐடியா இரண்டு என்றால் நடைமுறைக்கு ஒவ்வாதது இப்படியே 10 என்றால் அற்புதம், அருமை என்ற படி மதிப்பெண் கொடுத்து ஒவ்வொரு கருத்தும் இந்த மதிப்பெண் வரிசையில் எந்த இடத்தில் வருகிறது என்று பார்த்தார். முதலிடம் பெறும் கருத்துக்களின் அடிப்படையில் திட்டங்களை வகுத்தார். இந்த ஆய்வு உணர்த்திய முக்கிய உண்மை ஐந்து நிமிடம் யோசிக்கும் போது உருவாகும் கருத்துக்களும் அவ்வப்பொழுது தோன்றும் கருத்துக்களும் தரத்தின் அடிப்படையில் ஒன்று தான். ஆனால் உட்கார்ந்து ஒரு இடத்தில் சிந்திக்கும் போது கருத்துக்களோடு அவற்றைச் செயல்படுத்தும் வழி முறைகளும் பிறக்கின்றன என்பதை அவர் கண்டறிந்தார். அவரது அனுபவம் மூன்று உண்மைகளைச் சுட்டிக் காட்டின:-

1)    உங்களுக்கு விருப்பமான ஒன்றில் தினசரி ஐந்து நிமிடம் ஆழ்ந்து யோசித்து கருத்துக்களை உருவாக்குங்கள்.

2)    ஒரு விஞ்ஞானியின் ஆய்வின் தரமானது அவன் கொண்டுள்ள கருத்துக்களின் எண்ணிக்கைக்கு இணங்கவே இருக்கிறது என்று டீன் கெய்த் சிமொண்டான் தனது ‘ஆரிஜின்ஸ் ஆஃப் ஜீனியஸ்’ நூலில் சொல்வதை மனதில் கொள்ளுங்கள்.

3)    அவ்வப்பொழுது உருவாகும் கருத்துக்களை விட தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கும் போது உருவாகும் கருத்துக்கள் சிறப்பாக உருவாவதற்கான காரணம் கவனக் குவிப்பினால் தான். வழிமுறைகளும் அந்த கருத்துக்களுடன் தோன்றும்

இந்த புதிய வழியில் அன்றாடம்  கருத்துக்களை  உருவாக்கி அவற்றை அலசி ஆராய்ந்து குப்பை போன்றவற்றை ஒதுக்கி விட்டு நல்லனவற்றில் ஆழ்ந்து ஈடுபட்டு அவற்றை நடைமுறைப் படுத்தினால் வெற்றி நிச்சயமே!

புதிய கருத்துக்களை உருவாக்க உள்ள சில வழிகளை மேலும் பார்ப்போம்.

Pic Source :  http://i.telegraph.co.uk/multimedia/archive/01699/linus-pauling_1699054c.jpg

******************

Related Post