இடது கை செயலாற்றல் தவறல்ல!

டது கை செயலாற்றல் தவறல்ல!

ச.நாகராஜன்

1996ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வலது கை உலகத்தில் தங்களுக்கும் ஒரு இடம் கேட்பவர்களின் நாள் இது!

–       ஒரு செய்தித் துணுக்கு

 ப்ளேடோ, சார்லஸ் டார்வின், கார்ல் சகன், டாம் க்ரூஸ், லியானார்டோ டாவின்ஸி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் ஃப்fராங்க்ளின், மைக்கேல் ஏஞ்சலோ, ஜூலியா ராபர்ட்ஸ், மர்லின் மன்ரோ பெடரல் காஸ்ட்ரோ, ஹெச்.ஜி.வெல்ஸ், மொஜார்ட் பீத்தோவன் – இவர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு அபூர்வ ஒற்றுமை உள்ளது. என்ன தெரியுமா? இவர்கள் அனைவரும் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்!

உலகில் உள்ள ஜனத்தொகையில் பத்து முதல் பன்னிரெண்டு சதவிகிதம் பேர் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் மிகவும் மனச்சோர்வுடன் வலது கை உலகில் வாழ்ந்து வருகின்றனர். தொன்று தொட்டு இடது கையால் செயலாற்றுபவர்களை உலகம் ஒரு மாதிரியாகப் பார்க்கிறது. பைபிளை எடுத்துக் கொண்டால் வலது கையை தெய்வீகத்துடன் இணைக்கும் பல வரிகள் வருகின்றன. ஹிந்து நாகரிகத்திலோ வலது கையால் தான் எதையும் வாங்க வேண்டும், வலது காலை எடுத்து வைத்துத் தான் புது மனை புக வேண்டும் என்பது போல வலது பக்கத்திற்கு முக்கியத்துவம் உண்டு.

’லெஃப்ட்; என்ற ஆங்கில வார்த்தையே ஆங்க்லோ-சாக்ஸன் மூலமான லிப்ட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு பலஹீனமான, அல்லது உடைந்த என்று பொருள். ஆக்ஸ்போர்ட் அகராதியோ லெப்ட் ஹாண்டட்னெஸ் என்பதற்கு ஒழுங்கில்லாத, மோசமான, சந்தேகமான, கேள்விக்குறிய, ஊனமான என்றெல்லாம் அர்த்தங்களை வாரி வழங்குகிறது.லெப்ட்-ஹாண்டட் ஹனிமூன் என்றால் ஒரு பெண் இன்னொருத்தி புருஷனுடன் செல்லும் தேநிலவு என்ற அர்த்தத்தைக் குறிக்கும்.

ஆனால் இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆறுதலான ஒரு செய்தி உலகில் 140க்கும் மேலான ஐ.க்யூவை – நுண்ணறிவு எண்ணைக் கொண்டவர்கள் பெரும்பாலும் இடது கைப்பழக்கம் உள்ளவர்களே.

சிலர் மட்டும் இடது கையால் அனைத்தையும் ஏன் செய்கின்றனர் என்பதை முதன் முதலாக ஆராய்ந்த விஞ்ஞானிகளுள் குறிப்பிடத் தகுந்தவர் பால் ப்ரோகா என்பவர். 1861 ஆம் ஆண்டில் விசித்திரமான இரண்டு நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்தார்.லெபோர்க்னே என்ற பெயருடைய நோயாளிக்கு டான் என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உச்சரிக்க வரும். அனைவர் பேசுவதையும் அவர் புரிந்து கொண்டாலும் தனது எண்ணங்களை அவர் பேச்சு மூலம் வெளிப்படுத்த முடியாமல் இருந்தது. அவரது உடலில் வலது பக்கம் நாளுக்கு நாள் பலமிழந்து வந்தது. 51ஆம் வயதில் அவர் இறந்த போது அவரது மூளையை எடுத்து பால் ப்ரோகோ ஆராய்ந்தார். அப்போது அவரது மூளையின் இடது பக்க கோளத்தில் ப்ரண்டல் கார்டெக்ஸ் பகுதி சேதமடைந்திருந்ததைப் பார்த்தார். இதே போலவே லெலாங் என்ற நோயாளியாலும் சில வார்த்தைகளே பேச முடிந்தது. அவர் இறந்த பின்னர் அவர் மூளையையும் ஆராய்ந்த போது அவரது மூளையிலும் இடது பக்கம் சேதமடைந்ததைக் கண்டார்.ஆகவே உடலின் வலது பக்கத்தை இடது பக்க மூளையும் இடது பக்கத்தை வலது பக்க மூளையும் கட்டுப் படுத்துகிறது என்ற பொதுவான ஒரு உண்மையை அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. பேச்சாற்றலுக்கு உரிய மூளைப் பகுதி எது என்பதையும் அவரால் உணர முடிந்தது. ஆனால் இடது கை செயலாற்றல் உடையவர்களுக்கு அவர்களது மூளையின் வலப்பக்கத்திலேயே பேச்சாற்றலுக்கான பகுதி அமைந்துள்ளது என்ற அவரது வாதம் பின்னால் முதல் உலகப்போரில் காயம் அடைந்த ஏராளமான ராணுவ வீர்ர்கள் மீது நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டது. இடது கையால் ஒருவர் ஏன் எழுதுகிறார் என்பதற்குப் பல காரணங்களை விஞ்ஞானிகள் கூறினாலும் கூட அவை அனைத்தும் பின்னால் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளன. மரபணுவே இதற்குக் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர்.

பழைய காலத்தில் போர்களில் இடது கையால் போர் புரிந்த அனைவருமே எதிரெதிரே ஒருவருக்கொருவர் போர் புரிய நேரிட்ட போது அவர்கள் வாளை இடது கையிலும் கேடயத்தை வலது கையிலும் பிடித்திருந்ததால் அவர்களின் இதயப் பகுதியைச் சரியாகப் பாதுகாக்க முடியாத காரணத்தினால் இறந்துபட்டனர்.ஆனால் இதே பழக்கம் டென்னிஸ் வீர்ர்கள்,குத்துச் சண்டை வீர்ர்கள் ஆகியோருக்கு ஒரு பெரிய வரபிரசாதமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இதையெல்லாம் ஆராய்ந்து ஒரு புத்தகத்தையே எழுதி விட்டார் டேவிட் வோல்மென் என்பவர். ‘எ லெப்ட் ஹாண்ட் டர்ன் அரவுண்ட் தி வோர்ல்ட்’ என்ற புத்தகத்தில் சுவையான பெரும் வரலாறையே அவர் தந்து விடுகிறார். ஐன்ஸ்டீனைப் பற்றி அவர் கூறும் போது ஐன்ஸ்டீனைப் பலரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகச் சித்தரிக்கின்றனர்.அது தவறு. அவர் இரண்டு கைகளையும் சரியாகப் பயன்படுத்திய மேதை என்கிறார்.

இடது கை செயலாற்றல் பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாகத் தொடர்கின்றன. இடது கையால் செயலாற்றுகிறோமே என யாரும் கவலைப்பட வேண்டாம் என்ற செய்தியே அறிவியல் தரும் முத்தாய்ப்பான செய்தி

Pic Source : http://leftyfretz.com/wp-content/uploads/2014/08/facts-about-left-handed-people.jpg

*****

Related Post