எழுத ஆசையா? இதோ டிப்ஸ்!

எழுத ஆசையா? இதோ டிப்ஸ்! ச.நாகராஜன்

2103ஆம் ஆண்டு இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்ரோ ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விவரிக்கையில்,” ஒரு கதையானது சுலபமாகப் பயணம் செய்ய லாயக்கான நெடுஞ்சாலை போல இருக்க வேண்டும்….. அது ஒரு வீடு போல அமைய வேண்டும். அதற்குள் சென்று அங்கும் இங்கும் சற்று அலைந்து நமக்குப் பிடிக்கும் ஒரு இடத்தில் இளைப்பாற அமர்ந்து எப்படி முற்றமும் வீட்டின் அறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது என்பதை அறிவது போலவும் வீட்டின் ஜன்னலிலிருந்து வெளியுலகைப் பார்க்கும் போது அது எப்படி மாறுபட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது போலவும் ஒரு கதை அமைய வேண்டும்..அந்த வீட்டில் அடுத்த முறை போகும் போது அதில் போன முறை பார்க்காத இன்னும் புதுமையானவற்றைப் பார்ப்பது போலவும் ஒரு கதை இருக்க வேண்டும்” என்றார். இதையே வள்ளுவர் நவில்தொறும் நூல் நயம் என்று சுருக்கமாக அழகாகக் குறிப்பிட்டு விட்டார்.

எழுதுவதற்கு ஆசை தான், ஆனால் எப்படி எழுதுவது என்று தான் தெரியவில்லை என்று சொல்பவர்கள் ஏராளம். அவர்களுக்கு டிப்ஸ் தர பல எழுத்தாளர்கள் தயார். ஆனால் குறிப்பிடத் தகுந்த குறிப்புகளைத் தருகிறார் பிரபல அமெரிக்க எழுத்தாளரான கர்ட் வானகட். ‘எப்படி எழுத வேண்டும்’ என்பதற்கான அவரது உபயோகரமான எட்டு உதவிக் குறிப்புகளைக் கீழே பார்ப்போம் :.

1) உங்களுக்குப் பிடித்தமான ஒரு சப்ஜெக்டை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் இதயத்தில் பதிந்து மற்றவர்களும் உணர்ந்து அனுபவிக்கவேண்டுவதாய் இருப்பது அவசியம். வார்த்தை விளையாட்டுகள் தேவை இல்லை. ஆனால் உணர்வுகளை அழுத்தமாகப் பதிய வைப்பதாய் இருக்க வேண்டும்.

2) வளவளவென்று நீட்டிக் கொண்டே போகக் கூடாது. சொல்ல வந்ததைச் சொல்லியாகி விட்டதா! உடனே முடித்து விடுங்கள்.

3) உங்கள் நடை எளிமையாக இருக்க வேண்டும். உலகில் கதை சொல்லுவதில் வல்ல மிகப் பெரிய இரண்டு பேரை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஷேக்ஸ்பியரும் ஜேம்ஸ் ஜாய்ஸும் எப்படி மிக எளிமையாக எழுதினார்கள், தெரியுமா? அவர்களின் எழுத்து குழந்தைகளின் நடை போல இருந்தது. ஆனால் கதாபாத்திரங்களோ ஆழமான கதாபாத்திரங்கள். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், “டு பீ ஆர் நாட் டு பீ” (To be or not to be) என்று கேட்பது போல ஆழமான அர்த்தத்தை உருவாக்கும் வார்த்தைகள் இருந்தால் தான் சிறப்பு. இதில் உள்ள வார்த்தைகளில் மிக அதிகமான எழுத்துக்கள் மூன்றே மூன்று தான் என்பதை நோக்கினால் ஆச்சரியமாக இல்லை? இதே போல ஜேம்ஸ் ஜாய்ஸின் புகழ் பெற்ற கதாபாத்திரமான ஈவிலினைப் பற்றி அவர் சித்தரிக்கும் ஒரு வரியும் மூன்றே மூன்று வார்த்தைகளைத் தான் கொண்டிருக்கும். “அவள் களைத்து இருந்தாள்” (She was tired) – கதை ஓட்டத்தில் இந்த வார்த்தைகள் வரும் இடத்தில் இதைப் போல படிப்பவர்களின் இதயத்தை வேறு எந்த வார்த்தைகளாலும் உருக வைக்க முடியாது! எளிமையாக எழுதுவது என்பது லேசான விஷயம் அல்ல. அது மிகவும் கடினம் என்பதோடு புனிதமானதும் கூட. பைபிளின் முதல் வாக்கியம் கூட பதிநான்கே வயதான ஒரு சிறுவன் எழுதி விடக்கூடியதாகத் தான் இருக்கிறது! (In the beginning God created the heaven and earth.)
ஆனால் அதன் கருத்தாழம் தான் எப்படி இருக்கிறது, பாருங்கள்!
4. க்ளியோபாட்ராவுக்கு பல நெக்லெஸ்கள் அமைத்துச் சூட வைக்கும் வல்லமை உங்களிடம் இருக்கலாம். ஆனால் உங்கள் வார்த்தை வல்லமை நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை அழகிய விதத்தில் சொல்ல வல்லதாய் அமைந்தால் போதும்!. எவ்வளவு பிரமாதமாக ஒரு வாக்கியம் நெக்லெஸ் போல ஜொலித்தாலும் சரி, அது நீங்கள் எடுத்துக் கொண்ட பொருளை ஜொலிக்க வைக்கவில்லை என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அதை வெட்டித் தூக்கி எறிந்து விடுங்கள்.
5. நீங்கள் எழுதும் நடையில் வரும் பேச்சுக்கள் நீங்கள் குழந்தையாக இருந்த போது கேட்டதை எதிரொலிக்க வேண்டும். அது ஒரு தகர டின்னை ஹாக்ஸா வைத்து அறுக்கும் போது எழும் கடூரமான ஒலியைக் கொண்டிருக்கக் கூடாது!
6. நீங்கள் சொல்ல நினைத்ததை மட்டும் சொல்லுங்கள். படிப்பவர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்!
7. படிப்பவர்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள். அவர்கள் தினமும் ஆயிரக்கணக்கான எழுத்துக்களைப் பார்க்க வேண்டியதாயிருக்கிறது. ஆகவே அதிகமாகவும் எழுத வேண்டாம், கவர்ச்சியாகவும் எழுத வேண்டாம். படிப்பவர்கள், பாவம், பெரும் கலைஞர்கள் அல்ல.நீங்கள் உயரப் பறக்கும் பறவையாக இருந்து கூவ நினைக்கையில் அவர்கள் தரையில் கானத்தின் விளக்கம் தர விரும்பும் ஆசிரியர்களையே எதிர்பார்க்கிறார்கள்!
8.எழுத்து நடை பற்றி புகழ்பெற்றவர்கள் எழுதிய நூல்களைப் படியுங்கள் (உதாரணமாக தி எலிமெண்ட்ஸ் ஆஃப் ஸ்டைல் – ஈ.பி. ஒய்ட் எழுதிய நூலைக் குறிப்பிடலாம்.)
கர்ட் வானகட்டின் குறிப்புகளைப் படித்தாகி விட்டதல்லவா! இனி இதயத்தில் பதிந்திருக்கும் ஒரு பொருளை அடுத்தவரும் அறிந்து அனுபவிக்க வேண்டும் என்று தோன்றினால் எடுங்கள் பேனாவையும், பேப்பரையும்! சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; எழுதுவதும் தினப்பழக்கம்!

சின்ன உண்மை!
பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் ஜாய்ஸ் (1882-1941) பல ஆண்டுகள் இரவில் படுக்கையில் படுத்துத் தான் எழுதினார். ஒரு வெள்ளை கோட்டைப் போட்டுக் கொண்டு நீல பென்சில் ஒன்றினால் அவர் எழுதுவது வழக்கம். அவரது சகோதரி, “ அந்த கோட் கொஞ்சம் வெண்மையான ஒளியை அவருக்குத் தந்தது என்கிறார். ‘ஜாய்ஸுக்குச் சற்று மங்கலான கண் பார்வை என்பதால் இந்த ஒளி அவர் பேப்பரில் என்ன எழுதி இருக்கிறார் என்பதைப் பார்க்க உதவியது.

Pic Source : http://images.huffingtonpost.com/2015-05-04-1430760765-4114796-womanwriting.jpg

Related Post