ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 3

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 3                   ச.நாகராஜன்

15) சிக்கன் சூப் சாப்பிடுவதால் எல்லா வியாதிகளும் குணமாகி விடும்!
துரதிர்ஷ்டவசமாக இதற்கு இல்லை என்ற பதிலையே தர வேண்டியிருக்கிறது. ஆனால் சில ஆய்வுகள் சிக்கன் நூடில் சூப் ஒரு மாற்று மருந்து போல மனதில் ஒரு பிரமையை உண்டாக்கும் என்று தெரிவிக்கின்றன. அதாவது நீங்களே அதைச் சாப்பிட்டதால் குணமடைந்தது போல உணர்வீர்கள். ஆகவே ஒரு நல்ல குணமடைந்தது போன்ற உணர்வைப் பெற வேண்டுமென்றால் மட்டுமே அதைச் சாப்பிடலாம்!
16) விடுமுறை நாட்களில் தற்கொலைகள் அதிகமாகிறது
டிசம்பர் விடுமுறை தினங்களில் வழக்கமாகப் பரப்பப்படும் வதந்தி இது.ஆனால் இது உண்மையில்லை. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் விடுமுறை தினங்கள் அதிகமுள்ள டிசம்பர் மாதம் தான் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. இதை அந்த நாட்டின் நேஷனல் செண்டர் ஃபார் ஹெல்த் ஸ்டாடிஸ்டிக்ஸ் தெரிவிக்கிறது.

இந்த வதந்தி பரவுவதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் மீடியாக்கள் சௌகரியமாக டிசம்பர் மாதம் இந்த மாதிரி செய்திகளை அதிகமாக ஒலிபரப்புவதால் தான் என்பது தெரிய வருகிறது.

17) இரவில் சாப்பிடுவதால் குண்டாகி விடுவீர்கள்!
இரவு நேரங்களில் ஃபிரிட்ஜைத் திறந்து எதையாவது சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் ஏராளம். நள்ளிரவில் ஒரு ஸ்நாக்கைச் சாப்பிடுவதால் குண்டாகி விடுவீர்கள் என்பது ஒரு பொய்யான தகவலே. இந்த இரவு நேரச் சாப்பாட்டுப் பழக்கத்திற்கும் குண்டாவதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை

18) பௌர்ணமி அன்று மனக்கோளாறு சிகிச்சை நிலையங்களுக்கும் எமர்ஜென்ஸி அறைகளுக்கும் அதிகம் பேர் வருகின்றனர்!
பௌர்ணமி இரவு பற்றிய ஏராளமான பொய்யான தகவல்களில் இதுவும் ஒன்று. தொன்றுதொட்டு இருந்து வரும் தகவல் இது. பௌர்ணமி வர வர பைத்தியம் பிடித்தோரின் செய்கைகள் அதிகமாகும் என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒன்று தான்.

2005ஆம் ஆண்டு மாயோ கிளினிக்கில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பௌர்ணமி இரவு அன்று மாலை ஆறு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை எமர்ஜென்ஸி அறைகளில் எத்தனை நோயாளிகள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற எண்ணிக்கை எடுக்கப்பட்டது. ஆய்வின் படி சாதாரண நாட்களில் வருபவர்களின் எண்ணிக்கைக்கும் பௌர்ணமி அன்று வருகை புரிவோரின் எண்ணிக்கைக்கும் எந்த விதப் பெரிய மாற்றமும் இல்லை. 1996இல் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் 150,999 பதிவேடுகளை ஆராய்ந்தனர். அதிலும் கூட எந்த வித பெரிய மாறுதலும் தெரியவில்லை. ஆகவே இந்தக் கூற்று தவறானது தான்!

19) ப்ரோ பயாடிக்ஸ் எடுத்துக் கொள்வதால் ஜலதோஷம் நிவாரணமடைகிறது
நிச்சயமாக ப்ரோபயாடிக்ஸ் உங்களை நோயாளி ஆக்காது. அதே சமயம் ஜலதோஷத்தை குணமாக்கவும் செய்யாது. டாக்டர் பாட்ரிசியா ஹிப்பெர்ட் என்பவர் பீடியாட்ரிக்ஸ் பேராசிரியை. அவர் உறுதி படத் தெரிவிக்கும் செய்தி இது. ப்ரோபயாடிக்ஸ் ஜலதோஷத்தை வரவிடாமல் செய்யலாமே தவிர அதற்கான நிவாரணமாக் அமையாது என்று பல உயர்தர ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
20) பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஜுரம் வரும்.
ஒவ்வொரு பெற்றோரும் தவறாமல் கேட்கும் தவறான தகவல் இது. இந்த மருத்துவத் தகவல் பொய்யானது. அபாயகரமானதும் கூட. பெற்றோர்கள் பல் முளைக்கும் போது குழந்தைக்கு ஜுரம் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கிறார் வ்ரீமென். ஆய்வுகள் பல் முளைப்பதற்கும் ஜுரத்திற்கும் எந்த வித ஒரு சம்பந்தத்தையும் இது வரை தெரிவிக்கவில்லை. ஆகவே பல் முளைக்கும் போது வரும் ஜுரம் அதனால் தான் ஏற்படுகிறது என்ற எண்ணத்தை பெற்றோர்கள் விட்டு விட வேண்டும். ஜுரத்தை அலட்சியப்படுத்தாமல் உடனே தகுந்த டாக்டரை நாட வேண்டும்.

இப்படி ஏராளமான பொய்யான தகவல்களின் இடையே தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதன் தவறான தாக்கத்திற்கு இலக்காகி விடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இத்துடன் இந்தத் தொடர் முற்றும்.

Pic Source: http://higginsenglish.com/wp-content/uploads/2016/02/myths-facts.jpg

Related Post