ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 1

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 1               ச.நாகராஜன்

திருப்பித் திருப்பிச் சொல்லப்பட்டிருப்பதால் நாம் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ள சில தகவல்கள் உண்மையில் தவறுதலான தகவல்களே!இதை மருத்துவ அறிஞர்கள் விளக்குகின்ற்னர்.சில தகவல்களின் இன்றைய உண்மையான நிலையை அறிந்து கொண்டால் பயப்படாமல் வாழலாம்; பிறரை பயமுறுத்தாமலும் வாழலாம்!

1) தடுப்பூசி பற்றிய தவறான தகவல்

தடுப்பூசி போட்டுக் கொள்வது ஃப்ளூவை உண்டாக்கும் என்பது தவறான தகவல் என்பது ராக்கேல் வ்ரீமேன் தரும் உண்மைச் செய்தி!‘அரைகுறை உண்மைகளை நம்பாதீர்கள்’ என்ற நூலை இன்னொருவருடன்  இணைந்துஎழுதியுள்ளார் டாக்டர் ராக்கேல் வ்ரீமேன் (Don’t Swallow your Gum! Myths, Half Truths and outright lies about your Body and Health, Dr Rachel Vreeman , Co-author of the book.) தடுப்பூசி ஆடிஸம் என்ற வியாதியையும் உருவாக்கும் என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. அதுவும் தவறு தான் என்கிறார் இவர்.எட்டுக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் தான், அவர்களுக்கு ஆடிஸம் எனப்படும் மனச்சிதைவு நோய் உருவானது என்று கூறியுள்ளனர்.

இதனால் ஏகப்பட்ட் வதந்திகள் பரவலாயின. ஆனால் 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய ஆய்வில் இது உண்மை இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ஆய்வுக்காக 530000 பேர்கள் ஆமாம் ஐந்து லட்சத்து முப்பதினாயிரம் குழந்தைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். தடுப்பூசிக்கும் மனச்சிதைவு நோய்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது இந்த ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வதந்தி வதந்தி தானே! விடாமல் பரவுகிறது!!

2) விட்டமின் துணை உணவு  பற்றிய தவறான தகவல்

விட்டமின் துணை உணவுகள் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது தவறான தகவல். இதை நம்பவே கூடாது. இது பொய் என்பது ஒரு புறமிருக்க உண்மையில் இந்த துணை உணவுகள் உண்மையில் மகா ஆபத்தானவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.ஒரு பிரம்மாண்டமான ஆய்வு 25 வருடங்களாக நடத்தப்பட்டு வந்தது.2015ஆம் ஆண்டில் ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதிகமாக விடமின்களை சாப்பிடுவது சில சமயம் கான்ஸரில் கொண்டு போய் விட்டு விடும்! நான்கு வயது பையன் ஒருவன் இப்படி விடமின்களைச் சாப்பிட்டதால் விடமின் டி நச்சுநோய்க்கு ஆளானான்.இதற்குப் பதிலாக விடமின்கள் உள்ள நல்ல உணவைச் சாப்பிடுவதே நலம் என்கின்றனர் மருத்துவர்கள்!

3) குளிர்கால பருவநிலை பற்றிய தவறான நம்பிக்கை:

குளிர்கால பருவநிலை உங்களுக்கு நோயைக் கொடுத்து விடும் என்பது தவறான நம்பிக்கை!வ்ரீமேன் லைவ் சயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வெறும் குளிரானது குளிரைத் தருவது உண்மை தான் என்றாலும் இப்படிப்பட்ட உஷ்ணநிலை மட்டும் வைரஸ் தாக்குதலைத் தந்து விட முடியாது என்கிறார்.தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திரிகை இதை விரிவாக வெளியிட்டுள்ளது.ஒரு இதமான உஷ்ணநிலையில், குளிர் கிருமிகளைத் தும்மும் போது ஏற்படும் நோயை விட, நிச்சயமாக ஐஸ் பாத் எடுப்பதாலோ அல்லது குளிர் அறையில் நடுங்குவதாலோ நோய் வர வாய்ப்பில்லை என்பது தான் உண்மை!

ஆனாலும் கூட குளிரான சூழ்நிலை விஷக்கிருமிகளை எப்படித் தாக்குகிறது என்பது தெரியவில்லை.சில விஞ்ஞானிகள் குளிர் காலத்தில் எல்லோரும் வீட்டில் அதிக நேரம் இருப்பதாலும் ஒருவருட்ன் ஒருவர் அதிகமாக ஊடாடுவதாலுமே கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர் என்கின்றனர்!

4) மூளைத் திறனைப் பயன்படுத்துதல் பற்றிய தவறான தகவல்

பல ஆண்டுகளாகத் திருப்பித் திருப்பிச் சொல்லப்படும் ஒரு தகவல் நாம் நமது மூளைத் திறனில் பத்து சதவிகிதமே உபயோகப்படுத்துகிறோம் என்பது!தன்னம்பிக்கை ஊட்டும் மோடிவேஷனல் பேச்சாளர்களுக்கு இப்படிப் பேச்சை ஆரம்பிப்பது ஒரு வழக்கமான ஆரம்பம். 1907இலிருந்தே இவர்கள் உங்கள்  மூளையில் பத்து சதவிகிதமே நீங்கள் பயனப்டுத்துகிறீர்கள் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் இது உண்மை இல்லை.

வ்ரீமேனும் இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆரான் கரோலியும் ஒரு புத்தகத்தையே இப்படிப்பட்ட மூட நம்பிக்கையைப் போக்க எழுத வேண்டியதாயிற்று!.இன்று மூளையை ஸ்கேன் செய்து அதன் இயக்கத்தை எந்த ஒரு நேரத்திலும் பார்க்கும் விஞ்ஞானிகள் இந்தத் தவறான த்கவலை நினைத்துச் சிரிக்கின்றனர்!இது ஜனரஞ்சகமான உணமை, அவ்வளவு தான்! நாம் நமது மூளையின் முழுத் திறனை எட்டவில்லை என்று நம்பும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் பரப்பப்படும் தகவ்ல் இது என்கிறார் வ்ரீமேன்!

5) இனிப்பு எனர்ஜியை அதிகமாக்கி பிரச்சினை தரும் என்பது பற்றிய தவறான தகவல்

ஜீனி அல்லது இனிப்பைச் சாப்பிடும் குழந்தைகள் ‘லிட்டில் பிசாசுகளாக’ மாறிக் கொண்டாட்டம் போடுகின்றனர் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கையாக இருக்கிறது.கூல் எய்ட் என்ற சர்க்கரை இனிப்பில்லாத ஒரு மருந்தை குழந்தைகளுக்குக் கொடுத்தனர் ஆய்வாளர்கள். ஆனால் அதில் இனிப்பில்லை என்ற தகவல் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை.பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் இனிப்பைச் சாப்பிட்டதால் அதிக எனர்ஜியுடன் ஓவர்-ஆக்டிவ் ஆக இருப்பதாகப் புகார் செய்தனர்!

1994இல் ஜர்னல் ஆஃப் அப்நார்மல் சைல்ட் சைக்காலஜி என்ற பத்திரிகையில் இந்த வேடிக்கையான ஆராய்ச்சியின் முழு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

6) தலையில் அடிபட்டு விட்டால் அது மிகவும் ஆபத்து என்ற நம்பிக்கை

தலையில் அடிபட்ட ஒருவர் சுயநினைவுடன் இருக்க வைக்கப்பட வேண்டும் பொதுவாக அனைவரிடமும் உள்ள ஒரு நம்பிக்கை.தலையில் அடிபட்டுவிட்டால் உடனடியாக மருத்துவ உதவி தேவை என்பது சரி தான்! ஆனால் இது உடனடியாக உயிரைப் பறித்து விடும் என்பது தவறு! ஒரு குறிப்பிட்ட விதமான விதத்தில் தலையில் பட்ட அடியை வைத்துக் கொண்டு பொதுவாக இந்த நம்பிக்கையைப் பரப்பி விடுகிறார்கள் அனைவரும்!எந்த ஒரு அடியானது மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறதோ அது தான் ஆபத்தான ஒன்று!இவர்களுக்கு ல்யூசிட் பீரியட் (Lucid Period) என்பதைத் தொடர்ந்து கோமா நிலையோ அல்லது சில சமயம் மரணமோ சம்பவிக்கும். ஆனால் இது மிகவும் அசாதாரணமான ஒன்று. சாதாரணமாக இது எளிதில் சம்பவிக்காது. என்கிறார் வ்ரீமேன்.

டாக்டரைப் பார்த்துவிட்டு அவர் இது சாதாரணமான அடி தான் என்று சொல்லி விட்டால் கவலைப்பட ஏதுமில்லை என்பது வ்ரீமேனின் ஆறுதலான செய்தி!

–        இன்னும் சில தவறுதலான நம்பிக்கைகள் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்!

Pic Source : http://iuhealth.org/images/blog-main/myth_vs_fact.jpg

*************

Related Post