மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!

மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! ச.நாகராஜன்

“மூளையைப் பயன்படுத்துவதால் மூளை ஆற்றல் கூடுகிறது. உடல் பயிற்சி செய்வதால் உடல் வலிமை கூடுவதைப் போல” – ஏ.என்.வில்ஸன்

இன்டர்நெட் மூலமாக சமீபத்தில் பரபரப்பாக அனைவரும் படிக்கும் ஒரு விஷயம் மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்ட முடியும் என்பது தான்!சக்தி வாய்ந்த ஒரு சிறு பயிற்சி மூலம் இந்த அரிய மூளை ஆற்றலைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுவதால் அனைவரின் கவனமும் இதன் மீது திரும்பியுள்ளது.

முதன்முதலக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிபிஎஸ் செய்தி அறிக்கை ஒன்று இதைக் கூறியதோடு இந்தப் பயிற்சி இப்படி ஒரு ஆற்றலைத் தருவது உண்மை தான் என யேல் நகரைச் சேர்ந்த மூளை இயல் நிபுணர் ஒருவர் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைவரும் கூறியுள்ளதையும் மேற்கோளாக எடுத்துக் காட்டியது.

ஆடிஸம் எனப்படும் மனவளம் குன்றிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளும் இதனால் பெரும் பயன் அடைய முடியும் என்பது கூடுதலான போனஸ் தகவல்! அல்ஜெமீர் வியாதி உள்ள வயதானோருக்கும் இது பயன் அளிக்க வல்லது!

அத்தோடு மட்டுமல்ல, ‘டல்’லாக இருக்கும் மூளையை இது துடிப்புடன் செயல் பட வைக்கும். மந்த நிலையைப் போக்கும். உணர்ச்சியில் மாறுபாடு, மூட் சரியில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் இந்தப் பயிற்சி போக்குகிறது! நினைவாற்றலைக் கூட்டுவதுடன், ஸ்மார்ட்டாக ஒருவரை இது ஆக்குகிறது. எந்த மனநிலை உள்ளவருக்கும் கூட இது பொருந்துகிறது!

அது சரி, அந்தப் பயிற்சி தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை மேலிடுகிறது, இல்லையா?

பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வலது காதை இடது கை கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியில் விட வேண்டும். ஆக இப்படி அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் மூச்சுப் பயிற்சியைச் சீராகச் செய்தல் வேண்டும். மூன்று நிமிடங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். ஐந்து நிமிடம் வரை தொடரலாம் என்றாலும், மூன்று நிமிடப் பயிற்சியே நிச்சயமாகப் போதும். எந்த வயதினரும் இதை செய்யலாம்!

Pic Source : https://amaznginfo.com/wp-content/uploads/2016/03/Brains-1024×7721.jpg

– தொடரும்

Related Post