வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி! ச.நாகராஜன்

குறள் தெளிவு

வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி!

.நாகராஜன்

மன்றம் கூடியது

சில நிமிடங்களில் ஊர் மன்றம் கூடி விட்டது! ஏன்?வள்ளுவர் வந்திருக்கிறாராம்!வள்ளுவர் வந்திருக்கிறாராம்!செய்தி அதிக வேகத்தில் பரவவே, பறக்கவே அனைவரும் ஊர் மன்றமான ஆலமரத்தடியில் கூடி விட்டனர். ஆலமரத்தைச் சுற்றியுள்ள மேடையில் அமர்ந்திருப்பவர் நிஜமாகவே வள்ளுவர் தான்!அவரை வணங்கினர்; தொழுதனர்; கை கட்டி, வாய் மூடி உற்றுப் பார்த்து தங்களின் தரிசன பாக்கியத்தை நினைத்து மகிழ்ந்தனர்.

இன்று முழித்த வேளை நல்ல வேளை!மெதுவாக ஊர்ப் பெரியவர் ஒருவர் எழுந்தார். ‘பெரிசு’ ஏதாவது பொருள் பொதிந்த ஒன்றைத் தான் கேட்கும்! அனைவரும் ‘பெரிசையும்’ அதற்கு வள்ளுவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் ஆவலுடன் எதிர் நோக்கினர்.அப்போது கூட்டமாகக் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து பிச்சை எடுக்கும் வறியவன் ஒருவனும் ஓரமாக வந்து நின்றான்.

பத்துக் கேள்விகள்

பெரியவர் கேட்டார்: “வள்ளுவரே! வணக்கம். உங்கள் அருளை நாடி நிற்கிறோம். அருள் அல்லாதது யாது?வள்ளுவர் அவரைக் கனிவுடன் நோக்கினார். பின்னர் கூறினார்:-

“அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அவ்வூன் தினல்             (குறள் 254)

ஒரு கேள்வி; அதற்கு அற்புதமாக இரண்டு விஷயங்களைப் பதிலாகப் பெற முடிந்தது. ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதே அருள்; அந்த மாமிசத்தை வாங்கித் தின்னுவதே பொருள் அற்றது.ஊர் மக்கள் சைவ உணவை மட்டும் உண்ணத் தீர்மானித்து விட்டனர்.

ஒரு கேள்வி கேட்டு பதிலும் வந்ததால் அடுத்தவர் மெல்ல எழுந்தார்.“வாய்மை எனப்படுவது யாது?”

“வாய்மை எனப்பதுவது யாதெனின் ..

யாதெனின்?!“யாதொன்றும் தீமை இலாத சொலல்”   (குறள் 291)

ஆஹா! எளிமையான சுருக்கமான சூத்திரமாக இருக்கிறதே! பிற உயிருக்குத் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுவதே வாய்மை!மூன்றாமவர் எழுந்தார்:-“ அறவினை யாது?”

“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்”            (குறள் 321)

தான் முதலில் சொன்னதை மீண்டும் வலியுறுத்தி வள்ளுவர் கூறியதை அனைவரும் பக்தியுடன் மனதில் குறித்துக் கொண்டனர். பிற உயிரைக் கொல்லாமல் இருப்பதே அறவினை. அப்படிக் கொல்வோருக்கு அறமற்ற பிற தீவினைகள் சேரும்.கூட்டத்தில் அஹிம்சையைப் பின்பற்றுபவருக்கு ஒரே சந்தோஷம். மனதிற்குள் உருகினார்.

இன்னொருவர் கேட்டார்:- “நல் ஆறு யாது?”நல்ல வழி எது என்றா கேட்கிறீர்கள்?வள்ளுவர் கூறினார்:-

“நல் ஆறு எனப்படுவது யாதெனின்  யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி”    (குறள் 324)

அட, அதே கருத்து! திருப்பித் திருப்பி வலியுறுத்துகிறாரே! சொல் சிக்கனம் உடைய வள்ளுவர் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்தி, எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே நல் ஆறு என்கிறாரே!கையிலுள்ள பணம் சுருங்கக் கூடாது; குறையக் கூடாது என்ற கவலையில் இருந்தவர் கேட்டார்:- : செல்வத்திற்கு அஃகாமை யாது?

வள்ளுவர் சிரித்தார்:- “

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்

வெஃகாமை வேண்டும் பிறன் கைப் பொருள்”   (குறள் 178)

பிறர் கைப்பொருளைக் கவரக் கூடாது என்று இருத்தலே தன் கைப்பொருள் சுருங்காமல் இருக்கும் வழி!மோசமான அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு தலையைக் குனிந்து கொண்டனர்.நண்பர்கள் இருவர் எழுந்தனர்: ஒருவர் கேட்டார்:-“நட்பிற்குச் சிறந்த நிலை யாது?”பதில் உடனே வந்தது:

“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை”   (குற:ள் 789)

நட்பிற்கு வீற்றிருக்கை – சிறந்த நிலை – மாறுபாடின்றி முடிந்த போதெல்லாம் உதவி செய்து தாங்கிக் கொண்டிருப்பதே ஆகும்.அடுத்த நண்பர் பளிச்சென்று உடனே கேட்டார்:-“பழைமை எனப்படுவது யாது?”

“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”    (குறள் 801)

பழகிய நட்பு, அதாவது பழைமை எனப்படுவது யாதெனில் பழகிய நண்பர் உரிமையாய் செய்யும் எந்தச் செயலையும் அவமதிக்காது ஏற்றுக் கொள்வதேயாகும்.நண்பர்கள் இருவரும் மகிழ்ந்தனர்.அடுத்தவர் எழுந்தார்: “பேதைமை என்பது யாது?”“பேதைமை அதாவது அறியாமை யாது என்று தானே கேட்கிறீர்கள்?

பேதைமை என்பதொன்று யாதெனின்

ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்    (குறள் 831)

அறியாமை என்று சொல்லப்படுவது யாதென்றால், தனக்குக் கேடு விளைவிப்பனவற்றைக் கைக்கொண்டு நன்மை தருபனவற்றைக் கை நழுவி விடச் செய்வதாகும்!இன்னொருவர் எழுந்தார்:-“ வெண்மை எனப்படுவது யாது?”

“வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம் யாம் என்னும் செருக்கு” (குறள் 844)

வெண்மை அதாவது புல்லறிவு – கீழான அறிவு எதுவெனில் யாம் நிறைந்த அறிவு உடையோம் என்று தம்மைத் தாமே மதித்துக் கொண்டிருக்கும் செருக்கு-  அகம்பாவம் – தான்!

கூட்டத்தினர் அகம் மிக மகிழ்ந்தனர். எத்தனை ‘யாதெனின்?’ கேள்விகள். அத்தனைக்கும் உடனுக்குடன் பதில்!

வள்ளுவர் எட்டிப் பார்த்தார். ஓரத்தில் இருந்த பிச்சைக்காரன் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்தான்.

வள்ளுவர் அவனுக்கு வழி விடுமாறு சைகை காட்டவே அனைவரும் ஒதுங்கினர்.அவன் முன்னே வந்தான். “ஐயா! வணக்கம். இன்மையின் இன்னாதது யாது?”தான் எடுக்கும் இந்த பிச்சையை விடக் கொடியது ஏதாவது இருக்கிறதா?மனம் கலங்கி இருக்கும் அவனைப் பார்த்த வள்ளுவர் எழுந்தார். அனைவரும் எழுந்தனர்.

இன்மையின் இன்னாதது யாதெனின்..

அனைவரும் வள்ளுவரையே கவனித்தனர். இன்மையின் இன்னாதது யாதெனின்..யாதெனின்..வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்று கூட ஒன்று உண்டா, என்ன?யாதெனின் என்ன, வள்ளுவர் தடுமாறுகிறார். உடனுக்குடன் பதில் அளித்த வள்ளுவரா, யோசிக்கிறார், தடுமாறுகிறார், பதிலுக்காகத் தவிக்கிறார்.

கூட்டம் வியந்தது; பிரமித்தது.தன் நிலையை அடைந்த வள்ளுவர் கூறினார்:-

“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது”    (குறள் 1041)

வறுமையை விடக் கொடியது என்னவென்றால்,..   என்னவென்றால் .. வறுமையைப் போலக் கொடியது வறுமையே தான்!வள்ளுவரும் கலங்கி நின்றதைப் பார்த்த மன்றமே கலங்கியது.பிச்சைக்காரன் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

வள்ளுவரின் சாபம்

வள்ளுவர் சற்று உரத்த குரலில் கூறினார்:-

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்

பரந்து கெடுக உலகியற்றியான்” (குறள் 1062)

பிச்சை எடுத்தும் உயிர் வாழுமாறு சிலரைப் படைத்திருந்தால் அந்த உலகை இயற்றியவன் அதே போல பிச்சை எடுத்து அலைந்து திரியட்டும்!பிச்சைக்காரனின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டார் வள்ளுவர். அனைவரும் அவர் மேலே நடக்க வழியை விட்டனர்.வள்ளுவரின் சாபத்தைக் கேட்ட இறைவன் சிரித்தான். ‘அடடா, என்ன கருணை நெஞ்சம், தெய்வப் புலவருக்கு!’

அருகிலிருந்த அன்னையைப் பார்த்துக் கண் சிமிட்டினான். மதுரையில் பொற்றாமரை ஏறிய ‘பொய்யில் புலவன்’ சாபம் கொடுத்து விட்டான், தேவியே! அதை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா?”தேவியும் சிரித்தாள்.“வைகை தான் பெருக்கோடுகிறது. வந்தியோ அழைக்கிறாள். பிட்டுக்காவது மண் சுமந்து உங்கள் திருவிளையாடலைத் தொடங்குங்களேன்!”

பத்தே பத்து -‘யாதெனின்’ குறள்கள்!

பத்து, நூறு, ஆயிரம் அறிஞர்களும் நூல்களும் சேர்ந்தாலும் விளக்க முடியாத அரிய கருத்துக்கள், இல்லையா?

குறள் வாழ்க! தமிழ் வாழ்க!! குறள் நெறி வாழ்வோர் எவரானாலும் எங்கிருந்தாலும் வாழ்க!

Pic source : https://pbs.twimg.com/media/C2NKNeqUAAAJhA9.jpg

****************

 

Related Post