முதுமையை முறியடியுங்கள்

முதுமையை முறியடியுங்கள்,ஆயுளைக்கூட்டுங்கள்: இதோ வழி!
ச.நாகராஜன்
முதுமையைத் தவிர்த்து அதிக நாள் வாழ ஆசைப்படாமல் யார் தான் இருக்க முடியும்? தொன்று தொட்டு இதற்கான வழியைத் தேடாதவரே இல்லை எனலாம்!
நவீன விஞ்ஞான ஆராய்ச்சி இப்படி வாழ வழியைக் கண்டுபிடித்துள்ளது. முதுமையை முறியடிக்கும் வழி எனக்கூறப்படும் இந்த ஆன்டி ஏஜிங் வழிமுறை அற்புதமான ஒன்று! சாதாரணமாக நாம் உணவு உட்கொள்ளும் அளவில் 30 முதல் 50 சதவிகிதம் வரை கலோரிகளைக் கட்டுப்படுத்துவதே இதற்கான வழி முறையாகும்.
21 வயது அடையாதவர்கள் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கக் கூடாது. ஏனெனில் முழு மன வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் அடையாத இளம் பருவத்தில் இப்படி ஒரு வழியை அவர்கள் மேற்கொள்வது அபாயகரமானது; தேவையற்றதும் கூட!
இப்படி உணவுப் பழக்கத்தைச் சற்றுமாற்றிக் கொள்வதன் மூலமாக சுமார் 30 சதவிகிதம் ஆயுளைக் கூட்ட முடியும் என்று ஆய்வுகள் உறுதி படத் தெரிவிக்கின்றன. சாதாரண உணவுடன் வைட்டமின்கள், மினரல்கள்மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் உட்கொண்டனர்.
1930களிலிருந்தே இப்படி ஒரு ஆராய்ச்சி தொடங்கியது.1935ல் கார்னெல்பல்கலைக்கழகத்தில் உணவு ஆய்வாளர்களான மக்காய் மற்றும் லியனார்ட் மேனார்ட் தங்களது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டனர்.சாதாரணமாக உட்கொள்வதில் மூன்றில் ஒரு பங்கைக் குறைப்பதே இந்த ஆராய்ச்சியின் வழிமுறை. எலியின் மீது நடந்த இந்த ஆராய்ச்சியில் குறைந்த கலோரி உட்கொண்ட எலிகளின் ஆயுள்காலம் 30 முதல் 40 சதவிகிதம் வரை நீடித்தது!
இதில் வரும் ஆதாயங்கள் :-
மேம்பட்ட ஆரோக்கியம், அதிக ஆயுள், இதய நோய்கள், புற்று நோய் பக்கவாதம் டயாபடீஸ் அல்ஜமீர் பார்கின்ஸன் போன்ற கொடிய வியாதிகள் தடுக்கப்படுவது, இளமையாக இருக்கும் மன நிலையையும் உள நிலையையும் வயதில் குறைந்தவர்கள் அடைவதைப் போல அடைவது
இதில் வரும் அபாயங்கள்:-
பசி, விருப்ப உணவுக்காக ஏக்கம், வலிமையை இழப்பது, தசை வலிவை இழப்பது, டெஸ்டோச்டெரொன் அளவில் குறைவுபடுதல், எடை இழப்பு, காயம் ஏற்படும் போது மெதுவாக ஆறுவது, குறைந்த ஆற்றல். மாதவிடாயில் சீரற்ற தன்மை, எடை இழப்பால்தோற்றப் பொலிவில்மாற்றம், ஜாலியாக பார்ட்டி, ஹோட்டல்களில் உணவு அருந்த முடியாமை
2000 ஆய்வுகளில் பெரும்பாலானவைமிருகங்களின் மீது மேற்கொள்ளப்பட்டன. கலோரிகளில் கட்டுப்படுத்தப்பட்டதால், இந்த வழிமுறை அதிக ஆயுளைத் தருவது கண்டுபிடிக்கப்பட்டது!
லாஸ் ஏஞ்ஜல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ரே வால்போர்டு நடத்திய சோதனைகள் மிக முக்கியமானவையாக அமைந்தன.1986ல் அவர் 120 ஆண்டு வாழ்வதற்கான டயட் (உணவுப் பழக்க முறை) என்ற ஆய்வை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக 120 ஆண்டுக்கும் மேற்பட்டு வாழ்வதற்கான டயட் பற்றி 2000ம் ஆண்டில்இன்னொரு ஆய்வை வெளியிட்டார்!இந்த ஆய்வில் மிகத் தீவிரமாக உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தி வாழ்வதன் மூலம் ஆயுளை அதிகம் நீடிக்கலாம் என்ற தன் முடிவை வலியுறுத்தினார். 1994ல் The Anti-Aging Plan: Strategies and Recipes for Extending Your Healthy Yearsஎன்ற நூலைஇன்னொருவருடன் கூட்டாக எழுதி இவர் வெளியிட்டார்.
வால்போர்ட் பரிந்துரை செய்யும், இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட கலோரி உணவுப் பழக்க முறையில் ஒரு நாள் சாம்பிள் உணவுப் பட்டியலைப் பார்க்கலாம்:
காலை உணவு: ஒரு கப் ஆரஞ்சுஜூஸ், ஓடு நீக்கிய முட்டை வேக்காடு ஒன்று, ஹோல் க்ரெய்ன்ப்ரெட்துண்டு ஒன்று, ஒரு கப் காப்பி அல்லது டீ
மதிய உணவு: குறைந்த கொழுப்பு உடைய சீஸ் அரை கப்புடன் கலக்கப்பட்ட அரை கப் யோஹர்ட். (யோஹர்ட் என்றால் தயிர்) டோஸ்ட் செய்யப்பட்ட கோதுமை முளை ஒரு டேபிள் ஸ்பூன், ஆப்பிள் ஒன்று, ஒரு ஹோல் வீட்இங்கிலீஷ் மபின் (கோதுமை மாவினால் உருவாக்கப்பட்ட ப்ரெட்)
இரவு உணவு: மூன்று அவுன்ஸ் ரோஸ்டட் சிக்கன்ப்ரெஸ்ட் (சிக்கன் மார்பு – தோலில்லாமல்), அவன் போன்றவற்றில் சுட வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு ஒன்று, நீராவியில் வேகவைக்கப்பட்ட பசளிக் கீரை ஒரு கப்
நொறுக்குத்தீனி : ஐந்து பேரீச்சம்பழம், ஒட் தவிட்டினாலான மபின் ஒன்று, குறைந்த கொழுப்பு உடைய பால் ஒரு கப்
மேலே உள்ளமூன்று வேளை உணவும் நொறுக்குத் தீனியும் சேர்ந்து 1472 கலோரிகள், 92 கிராம்புரோட்டீன், 24 கிராம் கொழுப்பு, 234 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 27 கிராம் பைபர், 310 கிராம் கொலஸ்ட்ராலைக் கொண்டுள்ளது.
நமது நாட்டுக்கேற்ப உணவுவகைகளை மாற்றிக் கொண்டாலும் இதே அளவுகள் உறுதி செய்யப்பட வேண்டும்!
நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ உறுதி பூணுவோம்!

Pic Source : http://brucekrasting.com/wp-content/uploads/2012/09/young_vs_old.jpg
****************

Related Post