கோத்ர திருமணம் சரிதானா? —- ச.நாகராஜன்

கோத்ர திருமணம் சரிதானா? —- ச.நாகராஜன்
———————————————–
பரபரப்பூட்டிய வழக்கு
பரபரப்பூட்டும் கோத்ர வழக்கில், மார்ச் 30ம் தேதி கர்னால் நகர அடிஷனல் செஷன்ஸ் கோர்ட் ஐந்து பேருக்கு மரண தண்டனை அளித்தது.
மனோஜ் என்ற 23 வயது இளைஞர் 19 வயது பாப்லியை மணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த காப் மக்கள் அதை எதிர்த்தனர்.
திருமணம் செய்து கொண்டவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான் காரணம். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் அடித்துக் கொலை செய்ய காப் மக்கள் மன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவின் படி நடந்துகொண்டோரை நீதிமன்றம் தட்டிக் கேட்டது; தண்டனை கொடுத்தது.
இதையொட்டி நாடு முழுவதும் எழுந்துள்ள சூடான சர்ச்சை ஸ-கோத்ர மணம் சரிதானா இல்லையா என்பது தான்!
அரசியல்வாதிகளின் நிலை
ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 27ன் முடிவை நேரடியாக நிர்ணயிப்பவர்கள் ஜட் சமுதாயத்தினரே. இவர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள். ஆகவே காங்கிரஸ¤ம் இதர கட்சிகளும் இவர்களை எதிர்த்துக் கொள்ள விரும்பவில்லை.தர்ம சாஸ்திரம் எப்படி இருந்தாலும் அரசியல்வாதிகளின் அரசியல் சாஸ்திரம் அவர்களை ஜாக்கிரதையாக நடந்து கொள்ளச் செய்கிறது.
காப் என்று கூறப்படும் இவர்களின் மக்கள் மன்றம் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தங்களின் சம்பிரதாயத்தைக் காப்பாற்ற முனைந்துள்ளது.காப் மக்கள் கல்லால் அடித்துக் கொலை செய்ய உத்தரவிட்டது தவறு என்பதில் இரண்டு வித அபிப்ராயம் இல்லை. ஆனால் அவர்களின் சம்பிரதாயமான ஒரே கோத்திரத்தில் பெண் கொடுக்கக் கூடாது என்பது சரிதானா இல்லையா என்பது பாரதம் தழுவிய பிரச்சினையாகி விட்டது. முற்போக்காளர்கள், பகுத்தறிவு வாதிகள் இதில் தவறு இல்லை என்று கூறி ஊடகங்களை உசுப்பி விட்டு தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக ஒரு சித்திரத்தை முனைந்து ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் கூற்று நியாயம் தானா?
ஒரு அலசு அலசலாம்!
கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு!
பாத்திரம் அறிந்து பிச்சை கொடு கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்பது தமிழ் பழமொழி.
பாரதமெங்கும் ஒரே கோத்திரத்தில் மணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு செயலில் உள்ளது.
கோத்திரம் என்பதை சுருக்கமாக ஒரே வமிசாவளியினர் என்று கூறலாம்.
பல மஹரிஷிகளின் பெயர்களில் வமிசாவளி அல்லது கோத்ரம் தொடங்குகிறது. ஒரே ரிஷியின் வழி வந்தவர்கள் தங்களுக்குள் மணம் செய்யக் கூடாது என்று அறநூல்கள் அறிவிக்கின்றன. இப்படிச் செய்வது அண்ணன் – தங்கை திருமணம் போல ஆகும் என்பது அற நூல்களின் முடிவு.
ஆகவே தான் மணம் புரிய இருக்கும் யுவதி அல்லது இளைஞனின் கோத்திரத்தைப் பெற்றோர்கள் முதலில் கூறி திருமணப் பேச்சைத் தொடங்குவர்.
நெருங்கிய உறவில் செய்யப்படும் திருமணம் பற்றி நவீன விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்தால் நாம் அறிவியல் பூர்வமாக ஒரு முடிவுக்கு வர முடியும், இல்லையா?
விஞ்ஞான ஆய்வு தரும் எச்சரிக்கை
இப்படி நடக்கும் திருமணங்களின் மூலமாக தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆடோஸோமல் ரிஸஸிவ் டிஸ்ஆர்டர் என்ற கொடுமையான வியாதி வருகிறது என்கிறது விஞ்ஞான ஆய்வுகள். ( Autosomal Recessivie Disorders). இப்படிப்பட்ட திருமணங்கள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகள் பலருக்கு 1)Cystic fibrosis 2)Osteogenesis imperfecta 3)polycystic kidney disorder 4)hurler/hunter syndrome 5)Thalassemia 6) Atutosomal dominant disorder உள்ளிட்ட விதவிதமான கொடுமையான நோய்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன நலம் பாதிப்பு, மன முதிர்ச்சியின்மை, ஜனன உறுப்புகள் பாதிப்பு, சிறுநீரகப் பழுது போன்ற கொடிய நோய்களோடு பிறக்கும் குழந்தைகள் பெற்றொருக்கு என்ன வேதனையைத் தரும்? வாழ்நாள் முழுவதும் (அவர்கள் சுமார் எண்பது வரை வாழ்வதாக வைத்துக் கொண்டால்) எப்படிப்பட்ட பராமரிப்பைத் தர வேண்டியிருக்கும்? எண்ணிப் பார்த்தால் கதி கலங்கும்இது தவிர சமுதாயப் பார்வையில் இப்படிப்பட்ட மக்கள் பெருகினால் அரசாங்கம் மற்றும் சமுதாயத்தின் மீது எத்தகைய பளு வந்து சேரும்?.
இது தவிர நிறம் தெரியாத பார்வை, பாலியல் வியாதிகள் என இன்னொரு நீண்ட பட்டியலையும் மருத்துவ விஞ்ஞானிகள் முன் வைக்கின்றனர்.
பார்ஸி மக்கள் தரும் படிப்பினை
பார்ஸி மக்கள் தங்கள் இனத்துக்குள்ளாகவே மணம் புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட நோய்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதே போல அந்தமான் தீவில் வாழும் பழங்குடியினரான ஜார்வாஸ் மற்றும் ஓங்கஸ் இனத்தவரும் இப்படிப்பட்ட ஒரே கோத்ர மணத்தைச் செய்ய வேண்டியிருந்ததால் அந்த இனத்தவரின் சந்ததியினர் ஏராளமான நோய்களுக்கு ஆளாயினர்.
டார்வினின் வருத்தமும் பயமும்
தனது கஸினை மணம் செய்து கொண்டதால் தான் தன் வாழ்க்கை சஞ்சலத்திற்கு உரியதாக மாறியதா என பரிணாம கொள்கையைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின் வருத்தமும் பயமும் கொண்டார்.
அவர் பத்துக் குழந்தைகளைப் பெற்றவர். இவற்றில் மூன்று குழந்தைகள் பத்து வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் இறந்து போயின.அடுத்து இன்னொரு மூன்று குழந்தைகளுக்குப் பின்னால் பிள்ளைப் பேறே வாய்க்கவில்லை.
சமீபத்திய பயோஸயின்ஸ் பத்திரிகை டார்வினின் வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியை விரிவாக விளக்கி இதே போல ஸ-கோத்ர மணத்தாலேயே அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று விளக்குகிறது! இதை ஆராய்ந்த விஞ்ஞானியான பெர்ரா, ஓஹையோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்.தனது கஸினை மணந்ததால் தான் இப்படி ஏற்பட்டதோ என்ற டார்வினின் பயத்தை ஆராய்ந்தேன். அது முற்றிலும் உண்மை தான் என்று கண்டுபிடித்தேன்” என்கிறார் அவர்!
அறநூல்களின் அறிவுரை
நமது அறநூல்கள் கோத்திரங்கள் எண்ணற்றவை என்று கூறுகின்றன. “கோத்ராணாம் து ஸஹஸ்ராணி ப்ரயுதான்யர்புதானி” என்று போதாயனர் குறிப்பிடுகிறார்.
ச்ரௌத சூத்திரங்களில் ப்ரவர அத்தியாயங்களில் உள்ள கோத்திரங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் சுமார் 2463 கோத்திரங்கள் வருகின்றன.
கோத்ரம் என்றால் மூல புருஷர் எனப் பொருள்,
ஜமதக்னி, பரத்வாஜர்,விஸ்வாமித்ரர்,அத்ரி, கௌதமர், வஸிஷ்டர்,காஸ்யபர், அகஸ்தியர் ஆகிய எட்டு கோத்ரகாரர்களோடு பின்னால் வைதஹவ்யர், மித்ரயு, கனகர்,யவனர்,ரதீதரர்,முத்கலர்,விஷ்ணுவ்ருத்தர், ஹரிதர்,கண்வர், ஸங்க்ருதி என்று இன்னும் பத்து மூலபுருஷர்கள் பெயரால் கோத்திரங்கள் உருவாயின. இது பல்கிப் பெருகியது.
இவ்வளவு கோத்திரங்கள் இருக்கும் போது ஒரே கோத்திரத்தில் பெண் எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.இது தவிர ப்ரவரங்கள் 49 என்ற எண்ணிக்கையைக் கூறி ஒரே ப்ரவரத்தைச் சேர்ந்தவர்கள் மணம் புரியக் கூடாது என்றும் அறநூல்கள் அறிவுறுத்துகின்றன.
ஆகவே தர்ம சாஸ்திர ரீதியாகவும் விஞ்ஞானம் கூறும் பகுத்தறிவு ரீதியாகவும்
ஸ-கோத்ர திருமணம் சரியல்ல!
மீறி நடப்பவர்களை இன்றைய சட்டம் ஒன்றும் செய்யாது. (ஏனெனில் நீதிமன்றமே தனது தீர்ப்பைக் கூறி விட்டது. இப்படிப்பட்ட வழக்குகளில் எல்லாவற்றிலும் ஞானம் இருக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியிடம் எதிர்பார்க்க முடியாத நிலையில் அப்படிப்பட்ட வழக்கில் தீர்ப்பு சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ள நீதிபதிகள் துறை வல்லுநர்களை கலந்தாலோசிப்பர்; ஒரு பேனலை நிர்ணயிப்பர். அவர்களின் துணையோடு தீர்ப்பை எழுதுவது மரபு. பல வருடங்களுக்கு முன்பு நடந்த கோத்ர திருமண வழக்கில் இது கடைப்பிடிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை!)
சட்டம் ஒன்றும் செய்யாவிட்டாலும், சந்ததியினரை உடல் ரீதியாக இயற்கை தண்டித்து விடும் என்ற அபாயம் இருப்பதால் சமுதாய நோக்கில் இதைச் செய்யாமல் இருப்பதே நலம்!
திருமணம் செய்து கொள்ள இருக்கும் யுவதிகளும் இளைஞர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்!

Pic Source : http://www.treat-nmd.eu/downloads/image/autosomalrecessive.jpg
***********************

Related Post